Thursday, 24 May 2018

சிகரெட் பிடிப்பதை விடுங்கள்...

எழுத்துச்சித்தர் பாலகுமாரனின்
அனுபவப் பாடம்...!

சிகரெட் பிடிப்பதை விடுங்கள்...

இந்த சிகரெட் தான் என்னை குனிய வைத்து சுருள வைத்து இடையறாது இரும வைத்து மூச்சு திணற வைத்து மரணத் தறுவாயில் இருக்கும் பிராணியை போல மாற்றும் என்று அப்போது தெரியவில்லை.

சிகரெட்டில் நிகோடின் என்ற நஞ்சு இருக்கிறது.. அந்த நஞ்சு நரம்புகளில் பாய்ந்து நரம்பு மண்டலத்தை சேதப்படுத்தும் என்று பத்திரிகை வாயிலாக தெரிந்தபோது, எனக்கெல்லாம் அது நடக்காது என்று முட்டாள்தனமாக நினைத்துக் கொண்டேன்.

நாலைந்து சிகரெட்டில் நரம்பு மண்டலம் என்ன ஆகிவிடும் என்ற அலட்சியமும் இருந்தது. நாலைந்து சிகரெட் மெல்ல மெல்ல பெருகி ஒரு பாக்கெட் என்றாகி பத்து இருபது என்றாகி ஒரு நாளைக்கு நூற்றியிருபது சிகரெட்டுகளாக மாறிவிட்டால் வேறென்ன நடக்கும்?

நிகோடின் என்பது வெறும் புகையல்ல. அதுவொரு போதையான ரசாயனம். அது என்ன செய்யும்?

கன்னக் கதுப்புகளில், உதடுகளில், ஈறுகளில் அந்த ரசாயனம் தாக்கும்போது ஒரு விறுவிறுப்பு ஏற்படுகிறது. குணமாற்றம் ஏற்படுகிறது. சிகரெட் புகையை இழுத்து நுரையீரலில் தேக்கும்போது அங்கிருந்து உடம்பிலுள்ள எல்லா ரத்த அணுக்களுக்கும் பரவி எல்லா இடங்களிலும் ஒரு அமைதி படர்கிறது. கண் கிறக்கமான ஒரு நிலைமை ஏற்படுகிறது.

இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

உதவியும் செய்தது. என்ன உதவி?

சுற்றுப்புறம் எவ்வளவு மோசமாக இருந்தாலும் எத்தனை இரைச்சல் இருந்தாலும் உள்ளடங்கி ஆழ்மனதில் அமிழ்ந்து சிந்திக்க சிகரெட் உதவி செய்வதாக நினைத்துக் கொண்டேன்.
அப்படி சிந்திப்பதால்தான் கதை எழுதுகிறேன் என்று நினைத்துக் கொண்டேன்.

காலை, மாலை, இரவு என்று எல்லா நேரங்களிலும் சிகரெட் வேண்டியிருந்தது. சிகரெட் பிடிப்பதற்காகவே பலமணி நேரம் கூட்டங்களில் உட்காருவதை தவிர்த்தேன். அரை மணிக்குமேல் யாரோடும் அமர்ந்து அமைதியாக பேச முடியவில்லை.

வெகு விரைவாக சாப்பிட்டு விடுவேன். குழம்பு சாதம் நாலு கவளம், தயிர் சாதம் நாலு கவளம் மடமடவென்று சாப்பிட்டுவிட்டு வயிறு நிறைந்ததும் வெளியே யோய் ஒரு சிகரெட் பற்ற வைத்து புகை இழுத்தால்தான் சாப்பிடதன் நிறைவு பூர்த்தியாகும்.

இது மிகமிக கேவலமான நிலைமை. ஆரோக்ய குறைவான சிந்தனை. உடம்பிலுள்ள நரம்பு மண்டலத்தை அறுத்தெறிகின்ற மிகப்பெரிய காரியம்.

பத்தொன்பது வயதில் தொடங்கிய சிகரெட் பழக்கம் மெல்ல மெல்ல வளர்ந்து நாற்பத்தைந்தாவது வயதில் உச்சகட்டத்தை அடைந்தது. இழுத்து இழுத்து புகையை உள்வாங்கியதால் புகை நுரையீரலுக்கு மட்டுமல்லாது இரைப்பைக்கும் போயிற்று. மாடிப்படி ஏறும்போது சிரமமாக இருந்தது.

எது பற்றியும் கவலைப்படாமல் இடையறாமல் சிகரெட் பிடித்தபடி இருந்தேன். என் வீட்டிலுள்ளவர்கள் ‘இவனை மாற்ற முடியாது’ என்று கைகழுவி என் போக்கிலேயே விட்டார்கள். நிச்சயம் ஒருநாள் நீங்களாக விட்டுவிடுவீர்கள் என்றும் சொன்னார்கள்.

அது நேர்ந்தது.

திருமணத்திற்காக ஒரு மகள் இருக்கிறாள். வளர்ந்து படிக்க வேண்டிய ஒரு மகன் இருக்கிறான். இருந்தும் கவலையின்றி இத்தனை செலவு செய்கிறோமே, உடம்பு பாழாகிறதே என்று கவலைப்பட்டு என் குருநாதரை மனமுருக வேண்டி இந்த சிகரெட்தான் கடைசி என்று சொல்லி ஒரு பாக்கெட் சிகரெட் முழுவதும் வீட்டு வாசலில் நின்றே அமைதியாக பிடித்து முடித்த பிறகு அந்த பெட்டியை கசக்கி குப்பைத் தொட்டியில் எறிந்தேன்.

மறுநாளிலிருந்து சிகரெட் பிடிக்கவில்லை.

முதல் ஒரு மணி நேரம் தவிப்பாக இருந்தது. பல் கடித்து பொறுத்துக் கொண்டேன். இன்னும் அரை மணி… இன்னும் அரைமணி… என்று தள்ளிப் போட்டேன். அரை நாள் சிகரெட் பிடிக்காமல் இருந்தது ஆரோக்யமாக தெரிந்தது.

அன்று முழுவதும் பிடிக்காமல் இருந்தால் என்ன என்று நினைத்தேன். இருந்தேன். நெஞ்சு விசாலமானது. அதற்கு பிறகு இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் சிகரெட் பிடிக்கவில்லை.

நான்காவது நாள் சிகரெட் தேவைப்படவில்லை.

நடுவே ஒரு சிகரெட் பிடித்திருந்தாலும் கால் இடறி மறுபடியும் புகைக்குழியில் விழுந்திருப்பேன். முற்றிலும் மாறுபட்ட மனிதனாக,நன்கு சுவாசிக்கிறவனாக, மற்றவர்கள் சிகரெட் பிடித்தால் மூக்கை பொத்திக் கொள்பவனாக மாறினேன்.

ஆனால் என்ன, செய்த பாவங்கள் விடுமா?

சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயம் பலகீனமானது. அடைப்புகள் ஏற்பட்டன. இரண்டாயிரத்தில் பைபாஸ் ஆபரேஷன் செய்து கொண்டேன்.

அப்போதும் சிகரெட் பிடிப்பவனாக இருந்தால் மரணம் அன்றே குறிக்கப்பட்டிருக்கும். சிகரெட்டை நிறுத்தி ஆரோக்யத்தை அதிகப்படுத்தியதால் அந்த ஆபரேஷனை சமாளிக்க முடிந்தது.

பிறகு பத்து வருடங்கள் எந்தவித இம்சையும் இல்லாமல் அழகாக வாழ்க்கை ஓடியது.

இரண்டாயிரத்து பதினொன்றில் மறுபடியும் அடைப்பு ஏற்பட, இரண்டாம் முறை பைபாஸ் செய்து கொண்டேன்.

சுவாச பயிற்சி செய்திருந்ததால், மூச்சு பற்றிய ஞானம் இருந்ததால், தினந்தோறும் காலையும் மாலையும் வேகமாக நடந்ததால், மெல்லிய உடற்பயிற்சிகள் செய்ததால் இரண்டாவது பைபாஸையும் தாண்டிவர முடிந்தது.

தொடரும்...

Thursday, 17 May 2018

பட்டாக்கள்

எட்டு வகையான பட்டாக்கள் - சட்டம் தெளிவோம்.
****************************************************************************

ஒருவரிடம் நிலம் உரிமையாகி இருக்கின்றது என்றால் இரண்டு ஆவணங்கள் முக்கியமாக இருத்தல் வேண்டும்.

ஒன்று பத்திரம்,

இன்னொன்று பட்டா.

பத்திரம் – பதிவுத்துறை சார்ந்த ஆவணம்,

பட்டா – வருவாய்த்துறை சார்ந்த ஆவணம்.

இதில் பட்டாவை பற்றி இப்பகுதியில் காண்போம்!

பட்டா என்பது நில உரிமை ஆவணம்! அதில் தற்பொழுது யார் பெயரில் இருக்கிறதோ அவரே தற்போதைய உரிமையாளர்.

பட்டா ஆவணத்தில் மாநிலம், மாவட்டம், வட்டம், கிராமம், நிலத்தின் சர்வே எண், என்ன வகையான நிலம், வரிதொகை எவ்வளவு, இடத்தின் விஸ்தீரணம், உரிமையாளர் பெயர் மற்றும் அவரின் தந்தை பெயர் இருக்கும்.
கூடுதலாக ஏதாவது நிலத்தை பற்றி குறிப்பு தேவைப்படின் அந்த குறிப்பு இருக்கும்.

அடுத்ததாக முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டிய பட்டாக்களின் வகைகளை கீழே பார்க்கலாம்!!

1. யு.டி.ஆர் பட்டா:
********************************************

யூ.டிஆர்.பட்டா
மேனுவலாக கண்டபடி இருந்த நில உரிமை ஆவணங்களை முறைபடுத்தி ரீசர்வேக்கள் செய்து அனைத்து கிராமத்து நிலங்களுக்கும் சென்று (நத்தம் நிலங்கள் தவிர) நேரடி கள விசாரனை செய்து (வீட்டில் உள்ள ஆவணங்களை புத்தகங்கள் எல்லாம் தேவையுள்ளது தேவையற்றது என பிரித்து நம்முடையது பிறருடையைது என ஒமுங்குபடுத்தும் வேலையை போல்) மிக பெரிய அளவில் 1979 முதல் 1989 வரை தமிழகம் முழுவதுமாய் யு.டி.ஆர. பட்டா (Updating Data Registry ) தந்து அதனை கம்ப்யூட்டரில் ஏற்றினார்கள்.
அதாவது மேனுவல் ஆவணங்கள் கணினி மயமானது முதல் இப்பொழுது வரை இதனை தான் பட்டா ஆவணமாக பயன்படுத்தி வருகிறோம், தற்பொழுது இவை எல்லாம் ஆன்லைனில் ஏற்றப்பட்டு விட்டது.

மேனுவல் பட்டா

இப்பொழுது நடக்கும் சொத்து பரிவர்த்தனைகளுக்கான பட்டா பெயர் மாற்றங்கள் சர்வே எண் உட்பிரிவுகள் பெரும்பாலும் இந்த பட்டாவில் தான் நடக்கிறது. பட்டாவில் பெயரை சேர்த்தல், பட்டாவில் பெயரை மாற்றுதல், பட்டாவில் சர்வே எண் உட்பிரிவு செய்தல், போன்ற வேலைகளுக்கு இன்னும் பலர் அரசு,எந்திரத்துடன் போராடி வருகின்றனர்.
இன்னும் பலர், பட்டாவில் தந்தை பெயர் பிழை, தன் பெயர் பிழை, சர்வே எண் பிழை, அளவு பிழை என்று அதனை திருத்துவதற்கும் அலைந்து கொண்டு இருக்கிறார்கள். இன்னும் நிறைய இளம் தலைமுறையினர் தன் பூட்டன் ,தாத்தா, பங்காளி ,அப்பா பெயரில் இருக்கும் பட்டாவை மாற்றாமல் நிலுவையில் வைத்து இருக்கிறார்கள்.
இவர்கள் பட்டாவை கிராம கணக்கரிடம் கொண்டு சென்றால் தான் பல நிதர்சனங்கள் புரியும்.

2. நத்தம் நிலவரி திட்டம் -தோராய பட்டா & தூய பட்டா:
**********************************************************************

தோராய பட்டா பின்பக்கம்
தோராய பட்டா முன்பக்கம்
யூ.டி.ஆர் பட்டாவில் நத்தம் நிலத்தை தவிர மீதி நிலங்களை பட்டியல் இட்டார்கள், அளந்தார்கள்! நத்தம் என்பது பொதுமக்களுக்கு குடியிருப்பு தேவைக்காக வெள்ளைகாரன் காலத்திலேயே வகை படுத்தப்பட்டு ஒதுக்கப்பட்டது.
பெரும்பாலும் நத்தம் நிலம் பழைய ஊர்களிலேயே அமைந்து இருக்கும்.அந்த நத்தம் நிலத்திற்குதான் தோராய மற்றும் தூய பட்டா வழங்கினர்.
தோராய பட்டா என்பது நத்தம் நிலத்தில் உள்ள ஏரி, குளம், வீடு, தெரு என பிரித்து வரைபடம் உருவாக்கி, புதிய சர்வே எண்களை கொடுத்து நத்தம் நிலவரித்திட்ட பட்டா அதில் குடியிருந்தவர்களுக்கு வழங்கியது.
நத்தம் நிலவரித்திட்ட தோராய பட்டாவில் ( பிழைகள், தவறுகள் இருக்கலாம் ) அதில் ஏதாவது சிக்கல்கள்,பெயர் பிழைகள் அளவு பிழைகள் இருப்பதை மக்கள் தெரிவித்தால் அதனை திருத்துவதற்க்கு கால அவகாசம் கொடுத்து கொடுக்கும் பட்டா, “தோராய பட்டா” இது ஒரு தற்காலிகமான பட்டா!
முழுமை விவரம் பெற்று தவறு எல்லாம் களைந்து மக்களுக்கு கொடுப்பது நத்தம நிலவரி திட்ட தூயப்பட்டா ஆகும்
அதாவது கல்யாண பெண் மேக்கப்க்கு முன் மேக்கப்புக்கு பின் என்பதில் இருக்கும் வித்தியாசம்தான் தோராய பட்டாவுக்கும் தூயபட்டாவுக்கும் உள்ள வித்தியாசம். பெரும்பாலும் இரண்டு பட்டாவும் மேனுவலாகவே இருக்கும். பட்டா ஆவணத்தின் பின்புறம் நிலத்தின் வரைபடம் அளவுகளுடன் வரையபட்டு இருக்கும்.
ஒரு சிலர் தோராய பட்டா வாங்கியதும் பட்டா வாங்கிவிட்டாடோம் என்ற சந்தாதோஷத்தில் இருந்து விடுவார்கள். அதில் அளவுபிழைகள் இருக்கிறதா என நிலத்தை அளந்து ஒப்புமைபடுத்தி சரி பார்த்துகொள்ள வேண்டும்.
ஏனென்றால் நத்தம் நிலத்தில் இதுவரை இவ்வளவு இடம் நீ அனுபவிக்கிறாய் என ஆவணபடுத்தபடவில்லை, தோராய பட்டா வழங்கும் போது நீங்கள் அனுபவிக்கும் இடம் ஆவண படுத்தப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும்.

தூய பட்டா:

நத்தம் நிலத்திறகு அரசு பட்டா வழங்குவது பொதுமக்களுக்கு என நினைக்க வேண்டாம். வரி விதிக்காமல் நீங்கள் அனுபவிக்கும் நிலத்தை வரி விதிப்புக்குள் கொண்டு வரவும், சாலை, குளம் ,பாதை இடங்களை ஆவணப்படுத்தி ஆக்கிரமிப்புகள் ஆகா வண்ணம் தடுக்கவும் நத்தம் நிலவரி திட்டத்தினை செயல்படுத்தபடும் போது
பை புராடக்டாக தங்களுக்கு பட்டா வழங்கபடுகிறது.
எனவே நிலவரிதிட்ட தோராய பட்டா வழங்கும் போது நிலத்தின் அளவுகளை கட்டாயம் சரி பார்க்கவும் இன்னும் பலர் தோராய பட்டா வாங்கியதுடன் நின்று விடுவர். தூயபட்டா அடுத்த ஆறுமாதத்துக்குள் கொடுத்து இருப்பர். அதனை அணுகி வாங்காமலேயே தோராய பட்டாவையே நிரந்தரபட்டா என்று நினைத்து கொண்டு இருப்பர்.

3. ஏ.டி கண்டிசன் பட்டா :
*********************************************************************

ஏ.டி.கண்டிசன் பட்டா என்பது வட்ட ஆதிதிராவிடர் நலன் தாசில்தார் அவர்கள் வீட்டுமனைகள் இல்லாத பழங்குடியினர் & ஆதிதிராவிடர் மக்களுக்கு கிராமத்தில் உபரியாக இருக்கும் புறம்போக்கு நிலத்தில் மனைகளாக பிரித்து அம்மக்களுக்கு ஒப்படைப்பர்.
மேலும் மத்திய மாநில அரசு நிதி ஒதுக்கும் பட்சத்தில் தனியார் இடம் உள்ள நிலத்தை கிரைய பேர பேச்சு மூலம் ஆதிதிராவிடர் நலத்துறை கிரயம் வாங்கி , பழங்குடி ஆதிதிராவிடர் மக்களுக்கு மனைகளாக பிரித்து ஒப்படைப்பார்.
அப்படி ஒப்படை செய்யும் போது , கொடுக்கும் பட்டா ஏ.டி.பட்டா ஆகும். அது பெரும்பாலும் மேனுவல் பட்டாவாகவே இருக்கும். பெண்கள் பெயருக்கு தான் வழங்குவது மரபாக இருக்கிறது.
பட்டா ஆவணத்தில் பட்டா பெறுபவரின் புகைப்படம் ஒட்டி தனிவட்டாட்சியர் கையெழுத்து இட்டு இருப்பார். இதில் பல கண்டிசன்கள் இடம் பெற்று இருக்கும்.
முக்கியமாக மேற்படி இடத்தை பெறுபவர் வேறு யாருக்கும் குறிப்பிட்ட காலத்திற்கு விற்க கூடாது. விற்றாலும் பழங்குடியினர் அல்லது ஆதிதிராவிடராக இருத்தல் வேண்டும் என்ற கண்டிசன்கள் முக்கியமானதாக இருக்கும்
இதே தன்மையில் பயிர் செய்ய நிலமில்லாத ஆதிதிராவிட பழங்குடியின மக்களுக்கு 5௦ சென்டில் இருந்து ஒரு ஏக்கர் வரை விவசாய நிலங்கள் ஒப்படைக்கப்படும்.

4. நில ஒப்படை பட்டா:
*********************************************************************

நில ஒப்படை பட்டா
வீட்டு மனைகள் ! விவசாய நிலங்களை அரசு இலவசமாக ஒப்படைப்பது ஒப்படை பட்டா ஆகும். !
முன்னாள் ராணுவ வீரர்கள் , பிற்படுத்தப்பட்ட ஏழை மக்கள் , நலிவுற்றவர்கள், அரவாணிகள், போன்றோர்களுக்கு அரசு நிலங்களை இலவசமாக கொடுக்கும். அதனை நில ஒப்படை பட்டா என்பர். இவற்றிலும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பின் பிறருக்கு விற்க கூடாது என்று கண்டிசன்கள் இருக்கும். இதனை டி.கார்டு கண்டிசன் பட்டா என்றும் சொல்லுவர்.

5. டி.எஸ்.எல்.ஆர் பட்டா:
*********************************************************************

டி.எஸ்.எல்.ஆர் பட்டா
டி.எஸ்.எல்.ஆர் பட்டா என்பது டவுன் சர்வே லேன்ட் ரெகார்ட் ஆவணம் . இது நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் நகர் சர்வேயர்களை கொண்டு நிலங்களை மிக துல்லியமாக சர்வே செய்து உருவாக்கபடும் ஆவணகளில் இருந்து பொதுமக்களுக்கு ஒரு EXTRACT எடுத்து கொடுப்பார்கள் . இந்த TSLR EXTRACT என்பது பட்டாவுக்கு இணையான ஆவணம் ஆகும் .
கிராம பகுதிகளில் இருக்கும் பட்டாவிற்கும் நகர பகுதிகளில் இருக்கும் பட்டாவிற்கும், இருக்கும் வித்தியாசம் என்னவென்றால், நகர பகுதிகளில் ஒவ்வொரு சதுர அடியும் மதிப்பு மிக்கது , அதனால் ERROR மிக மிக குறைந்தே இருக்கும்.
ஆனால் கிராம பகுதி சர்வேகளில் ஏக்கருக்கு 5 சென்ட் கூடுதல் குறைதல் இருக்கலாம். அதனால் அதிக துல்லியமும் , எச்சரிக்கை உணர்வுடனும் நகர பகுதி சர்வேக்கள் செய்யபடுகிறது.

6. தூசி பட்டா:
****************************************************************

தூசி பட்டா
கிராம கணக்கில் 2 ம் நம்பர் புக்கில் “C” பதிவேட்டில் கொடுக்கும் பட்டா 2C பட்டா ஆகும். ஆனால் பேச்சு வழக்கில் தூசி பட்டா என்று அழைக்கபடுகிறது.
அரசு நிலத்தின் மேல் இருக்கும் (புளியமரங்கள், பனை மரங்கள் , கனி தரும் மரங்கள், ) மரங்களை அனுபவிக்க பராமரித்து கொள்ள , மேற்படி மரங்களுக்கு உரிமையளித்து கொடுக்கப்படும் பட்டா 2C பட்டா இதனை மர பட்டா என்றும் அழைப்பர்.

7. கூட்டு பட்டா:
*************************************************************************

தனிப்பட்டாவுக்கு நேர் எதிர் கூடுப்பட்டா , கூட்டுபட்டாவில் நிலத்தின் அளவு, சர்வே எண் உட்பிரிவு, FMB – சப்டிவிசன் தனி தனியாக யார் யாருக்கு எவ்வளவு என்று குறிப்பிட்டு இருக்காது, உதாரணமாக ஒரு பெரிய கேக்கை (யார் யாருக்கு எத்தனை துண்டு, எந்த பக்கம் என்று சொல்லாமல் ) நான்கு மகன்களிடம் கொடுத்து நீங்களே பிரித்து கொள்ளுங்கள் என்று சொல்வது போல் தான்.
நிலத்தில் நான்கு பேரோ, மூன்று பேரோ, இரண்டு பேரோ, அல்லது பல பேரோ ஒவ்வொரு மூலையில் நின்று அனுபவிப்பர். அவர்கள் பெயர்கள் எல்லாம் பட்டாவில் இருக்கும் ஆனால் சர்வே எண் உட்பிரிவு, அளவு பிரிவு, FMB உட்பிரிவு, செய்யப்பட்டு இருக்காது, பட்டாவே இல்லாமல் இருப்பதற்கு கூட்டு பட்டா சிறந்தது, கூட்டு பட்டவை விட தனிப்பட்டா சிறந்தது.
தனி பட்டா மற்றும் கூட்டு பட்டா

8, தனிபட்டா:
***************************************************************
தனிபட்டா என்பது தனி நபர் ஒருவர் பெயரில் இருக்கும் . மேற்படி நிலத்தின் சர்வே எண்ணில் தனியாக சப் டிவிசன் செய்யப்பட்டு இருக்கும். பேச்சு வழக்கில் பட்டா உடைந்து இந்த நபர் பெயருக்கு மாறி இருக்கும் என்று சொல்வோம்.
புல எண் வரைபடத்திலும் இவருடைய நிலத்துக்கு உட்பிரிவு வரைபடம் வரையப்பட்டு இருக்கும். தனிபட்டாவில் பெயர், நில அளவு, புல எண் உட்பிரிவு, FMB சப் டிவிசன் , ஆகியவற்றில் 1௦௦% தெளிவாக இருக்கும்.
யு.டி.ஆர் பட்டா,நத்தம் நிலவரி திட்டம் -தோராய பட்டா & தூய பட்டா ஏ.டி.கண்டிசன் பட்டா , நில ஒப்படை பட்டா , டி.எஸ்.எல்.ஆர் பட்டா, தூசி பட்டா, ஆகிய 6 பட்டாவும் யாருக்கு எத்தன்மையில் வழங்கபடுகிறது என பிரிக்கப்பட்டு இருக்கிறது .

தனிபட்டா கூட்டுபட்டா என்பது பட்டா ஆவணத்தின் தன்மையை பொறுத்தது என்பதை புரிந்து கொள்ளலாம்.

Saturday, 12 May 2018

அன்னையர் தினம்

அன்னையர் தினம்: தாயை இறுதிவரை  காப்போம்

உலகிலுள்ள அனைத்து உயிரினங்களிலும் உயர்ந்து நிற்கும் உறவு தாய் எனும் உறவுதான். உலகெங்கும் பல்வேறு வகையான பண்பாடுகள், கலாச்சாரம் காணப்பட்டாலும் அங்கிங்கெனாதபடி எங்குமே பெரிதும் போற்றப்படும் உறவும் தாய்தான்.

மனிதகுலம் தோன்றி சமூக வாழ்வு தொடங்கும்போது தாய்வழிச் சமூகமாகத்தான் தொடங்கி நடைபெற்று வந்துள்ளதை பல்வேறு வரலாற்றுச் சான்றுகள் மூலமும், இந்திய நாட்டின் இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் கோசலராமன், கங்கைமைந்தன், குந்திநந்தனன் என்று தாயின் பெயருடனே அழைக்கப்பட்டதன் வழியும் காண்கிறோம்.

தாய் என்ற சொல்லில் இருந்துதான் தாயம் என்ற சொல் பிறந்தது. தாயம் என்றால் உரிமை என்று பொருள். தாய்வழிச் சமூகத்தில் பெண்ணே அதாவது தாயே வேட்டையாடுபவளாக இருந்து தன் மக்களை காப்பாற்றி வளர்ப்பவளாகவும், தன் கட்டுப்பாட்டிலும் வைத்திருந்தாள். பொருள்சார்ந்த வாழ்க்கை தொடங்கும்போது, நிலவுடமைச் சமூகம் தோன்றிய பின்னர்தான் தந்தைவழி சமூகமாக மாறியதோடு தாயின் நிலைப்பாடு இல்லத்தையும், குழந்தைகளையும் பராமரிப்பதோடு நின்றுவிட்டது.

தாயின் பெருமை என்பது எல்லோரும் அறிந்ததுதான். பொதுவாக பெண்கள் அழகுக்கு முக்கியத்துவம் தருபவர்கள். கணவனின் அன்பைப் பெற தன்னை அழகாக்கும் பெண்ணானவள் தாயாய் மாறும்போது தன் குழந்தைக்காக தன் அழகை இழக்கிறாள். வயிற்றுச் சுருக்கங்களோடு, தன் தோற்றமும் மாறிவிடுவதைப் பற்றி அவள் கவலைப்படுவதில்லை. உயிருக்குள் இன்னொரு உயிரை சுமக்கும் அரிய வாய்ப்பு உயிரினங்களில் பெண்ணுக்குத்தான் கிடைத்துள்ளது என்பதை எண்ணி பெருமையடையும் தாய், தன் குழந்தைகளுக்காக பசி, தூக்கம், விரும்பும் உணவு, தன் சுகம் என அனைத்தையும் தியாகம் செய்து வளர்த்தெடுக்கிறாள். அதனால்தான் அனைத்தையும் துறந்த பட்டினத்தார் தாய்ப் பாசத்தை துறக்க முடியாமல்,

“ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்று

கைப்புறத்தில் ஏந்தி கனகமுலைத் தந்தாளை இனி

எப்பிறப்பில் காண்பேனோ!” – என்று பாடுகிறார்.

தன்னுடைய உயிராலும் மெய்யாலும் நமக்கு உயிர்மெய் தந்தவள் நம் அம்மா என்பதனை அச்சொல்லில் உள்ள எழுத்துக்களையே சான்றாக்கித் தருகிறது நம்முடைய அமுதத்தமிழ். ஆம்! ‘அ’ என்பது உயிரெழுத்து ‘ம்’ என்பது மெய்யெழுத்து ‘மா’ என்பது உயிர்மெய்யெழுத்து. தன் குழந்தைகளுக்காகவும், குடும்பத்திற்காகவும் தன் வாழ்வை தன்னலமற்று அர்ப்பணிப்பவள் தாய்தான். அதனால்தான்,

“தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்”

என்கிறார் பூவை செங்குட்டுவன்.

“கன்னித் தமிழும் கன்றின் குரலும்

சொல்லும் வார்த்தை அம்மா.. அம்மா,

கருணை தேடி அலையும் உயிர்கள்

உருகும் வார்த்தை அம்மா.. அம்மா”

என்பார் கவியரசர் கண்ணதாசன்.

தாயை வணங்கிப் போற்றுதலும், தாய்வழி பாடும் என்று? எங்கு தொடங்கியது? எனும் கேள்விகளுக்கு விடைதேடிப் போனால் அது உலகின் பல்வேறு நாடுகளுக்கும் 5000 ஆண்டுகள் பழங்காலத்திற்கும் நம்மை அழைத்துச் செல்லும்.

மிகப் பழங்காலந்தொட்டே எகிப்தியர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள், இந்திய நாட்டில் சிந்துசமவெளி நாகரிகத்து மக்கள் என உலகின் தொன்மையான நாகரிகம் தோன்றிய அனைத்துப் பகுதிகளிலும் தாய்த் தெய்வ வழிபாடு இருந்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் பதினேழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் அன்னையர் தினம் கொண்டாட ஆரம்பித்தார்கள். பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் ஓரிடத்திலிருந்து வேற்றிடங்களுக்கு வேலைக்குச் செல்பவர்களுக்கு தங்கள் தாயைச் சந்திப்பதற்காக வருடத்தில் மே மாதம் நான்காம் ஞாயிற்றுக்கிழமையில் விடுமுறை அளித்தார்கள். அது ‘மதர்ஸ் சண்டே’ என அழைக்கப்பட்டது. அந்நாளில் பரிசுப் பொருட்களுடன் தங்கள் தாயைச் சந்திக்கச் செல்வார்கள். ஆனால் அமெரிக்க நாட்டிற்கு புலம்பெயர்ந்து சென்ற ஐரோப்பியர்களால் தங்களின் பாரம்பரியமான மதர்ஸ் சண்டே போன்றவற்றை கொண்டாட முடியாமல் போனது.

1870ல் முதன்முதலாக வட அமெரிக்காவில் ஜூலியா வார்ட் ஹோவே எனும் பெண்மணிதான் ‘அன்னையர் தினம்’ கொண்டாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். அமெரிக்காவில் நடைபெற்ற உள்நாட்டுப் போரினால் ஏற்பட்ட பேரழிவும், பெருமளவிலான உயிரிழப்புகளும் ஜூலியாவை பெரிதும் வேதனையுறச் செய்தது. ஒரு தாய் பெற்ற பிள்ளை, இன்னொரு தாய் பெற்ற பிள்ளையை கொல்கின்ற யுத்தங்கள் இனி நடைபெறக் கூடாது என்று போர்களை எதிர்த்துக் குரல் கொடுக்க, உலகின் அனைத்து தாய்மார்களும் ஒன்றிணைய வேண்டும் என ஜூலியா ஹோவே வேண்டுகோள் விடுத்தார். உலகெங்கும் அமைதியையும் தாய்மையையும் போற்றும் நாளாக அன்னையர் தினம் உலகளவில் கொண்டாடப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து வட அமெரிக்க மகளிர் அமைப்புகள் 1873 ஆம் ஆண்டு ஜூன் 2ந் தேதியை புதிய அன்னையர் தினமாக அறிவித்துக் கொண்டாடினர். ஜூலியாவின் நிதியுதவில் பத்தாண்டுகள் இக்கொண்டாட்டம் கடைப்பிடிக்கப்பட்டது. அவரின் மறைவுக்குப் பின்னர் அன்னையர் தினமும் மறைந்து போனது.

ஜூலியாவுக்கு பின் அமெரிக்காவில் மேற்கு வெர்ஜீனியா மகளிர் அமைப்பின் மூலம் சமூக சேவை செய்து வந்த அன்னாரிவீஸ் ஜார்விஸ் என்ற பெண்மணி உள்நாட்டு யுத்தத்தால் பிரிந்த உறவுகளை ஒன்றிணைக்கும் நாளாக ‘அன்னையர் தினம்’ கொண்டாட வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். அவருடைய ஆசையை நிறைவேற்ற அவர் மகளான அன்னா மேரி ஜார்விஸ் பல முயற்சிகள் மேற்கொண்டார். ‘அன்னையர் தினத்தை’ முறைப்படி அறிவித்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கையை பல்வேறு தரப்பினரிடம் எடுத்துரைத்து போராடி வந்தார். இறுதி முயற்சியாக அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன் வரை சென்று அன்னையர் தினத்தை முறைப்படி அறிவிக்க வேண்டும் என்று கோரினார். 1912 ஆம் ஆண்டு மே மாதத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை ‘அன்னையர் தினம்’ கொண்டாட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அன்னா மேரி ஜார்விஸின் இருபதாண்டுக் கோரிக்கை நிறைவேறியது. தற்போது உலகமயமாக்கலால் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

உணர்வுகளாலும், அன்பு பாசத்தாலும் சங்கமிக்க வேண்டிய அன்னையர் தினமானது முதலாளித்துவத்தால் வணிகமயமாக்கப்பட்டது. எனவே மேரி ஜார்விஸ் அன்னையர் தினத்தின் நோக்கம் சீர்குலைக்கப்பட்டதெனக் கூறி அதனை எதிர்க்கவும் ஆரம்பித்தார். ஆனால் அமைதியை கெடுப்பதாகக் கூறி அவர் கைது செய்யப்பட்டார். மனவேதனையுடனே மறைந்து போனார் மேரி ஜார்விஸ்.

ஆண்டிற்கு ஒருமுறை அன்னையர் தினத்தன்று மட்டும் பெற்ற தாயை சந்தித்து சம்பிரதாயமாக பரிசுப் பொருட்கள் கொடுத்து விடுவதோடு தாயைப் போற்றுதல் முடிந்துவிடுமா என்ன?
நம்முடைய நாட்டில் தாயின் உழைப்பை முழுமையாய்ப் பெற்றுக் கொண்டு முதுமையில் அத்தாயை கவனிக்காமல் விட்டுவிடுதல் என்பது அதிகரித்து வருவதுதான் பெரிதும் வேதனைக்குரியது. ஆண் பிள்ளையானாலும், பெண் பிள்ளையானாலும் அவரவர் தாயை அவரவரே பொறுப்போடு இறுதிவரை பார்த்துக் கொள்வதுதான் தாய்க்குச் செய்யும் உண்மையான கடமையாகும். அதுதான் உண்மையான பாசத்தின் வெளிப்பாடு ஆகும்.

பண்பு தெரியாத மிருகம் பிறந்தாலும்

அது வாய்மை! அதன் பேர் தாய்மை!

என்பது கவியரசர் கண்ணதாசனின் தாய்மை தரிசனம்.

தன் வயிற்றில் கருவைச் சுமக்கும் எந்தத் தாயும் சிறந்த பிள்ளையை பெற வேண்டுமென்றே விரும்புகிறாள். கரு உருவாகிவிட்டதென அறிந்த நாள்முதலே தன் குழந்தை எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்றும், சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் வாழும் நற்பண்புகள் மிக்க பிள்ளையாய் வாழும் வாழ்க்கை பெற வேண்டும் என்றும் பல்வேறு கற்பனைகளையும், கனவுகளையும் வளர்த்துக் கொள்கிறாள்.

“எவள் இல்லையென்றால் நீ பிறந்திருக்க முடியாதோ, எவளை இழந்துவிட்டால் மீண்டும் அடைய முடியாதோ, அவளே உன் வாழ்க்கைத் தத்துவங்களை துவக்கி வைக்கிறாள். அவள்தான் உன் தாய்’’ என்கிறார் விவேகானந்தர்.

அதுதான் தாயின் மலர்ப்பாதம் என்பது புலமைப்பித்தனின் வைரவரிகள்.

எத்தனையோ மாற்றங்களை கண்டுவரும் இம்மாய உலகில் உறவுகளின் அருமையும் பெருமையும் மிகச்சாதாரணமாக மாறிவரும் சூழலில், முதியோர் இல்லங்கள் முளைத்தெழுந்து முதுமையின் உறைவிடமாகி உடல், மன வலிகளோடு போராடி, வாழ்ந்ததே வீணாகிவிட்டதே என வாழவும் இயலாமல், சாகவும் முடியாமல் தவிக்கின்ற நிலையை நாம் கண்டும் காணாமல் கடக்கின்ற மனநிலைக்கு வந்துவிட்டோம். நமக்கு முதுமை வரும்போதுதான் அதன் விளைவுகளை அனுபவிக்கின்றோம்.

உணர்ந்து வாழக் கூடிய இந்தப் பிறப்பில் நம்முடைய உறவுகளை விட்டுவிடாமல் வாழ்வதும், பெற்றவர்களை அவர்களின் நிறைவு காலம்வரை பாதுகாத்து, பசிக்கவிடாமல் உணவளித்து, நோயுற்றால் மருத்துவம் செய்து மனம் புண்படாமல் பராமரிப்பதுதான் மானுட தர்மம். அதுமட்டுமல்லாது அடுத்த தலைமுறைக்கு செயலால் கற்றுத்தரும் மிகச் சிறந்த பாரம்பரியமும் இதுதான். உறவுகளைப் பாதுகாப்போம். உயிர்தந்த தாயை போற்றிப் பேணுவோம். அன்னையர் தினத்தை உண்மையாய்க் கொண்டாடுவோம்.