Sunday, 29 March 2020

சிவபெருமானிடம் இருந்து ஒவ்வொருவரும் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டியவைகள்!


*சிவபெருமானிடம் இருந்து ஒவ்வொருவரும் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டியவைகள்!*


சிவபெருமான் பற்றி எவ்வளவோ விஷயங்கள்
நாம் தெரிந்திருப்போம். ஆனால்,
சிவபெருமானிடம் இருக்கும்்அற்புதமான
விஷயங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

ஆம், சிவபெருமான் கடவுள்களுக்கு எல்லாம்
கடவுள்! மகாதேவன்! மகேஸ்வரன்!
சிவனிடம் வருமானம், வரம் வேண்டுவது
மட்டுமின்றி, அவரிடம் இருந்து பல நல்ல
விஷயங்களை நாம் கற்றுக்கொள்ளலாம். இது
நீங்கள் உங்களது அன்றாட வாழ்விலும், தொழில்
முறைகளிலும் நல்ல முன்னேற்றம் காண உதவும்.


சிவனின் படர்ந்த ஜடாமுடியில் இருந்து,
ருத்ரதாண்டவம் ஆடும் அவரது காலடி வரை,
நமது வாழ்வியல் குறித்தும், பண்பு நலன்கள்
குறித்தும் பல விஷயங்கள் சூசகமாகக்
கூறப்பட்டுள்ளது.

இயல்பாகவே மற்ற கடவுள்களுடன் ஒப்பிட்டு
பார்க்கும் போது சிவபெருமான் மிகவும்
எளிமையான தோற்றம் கொண்டவர். ஆனால்,
மிகவும் உடல்திறன் அதிகமாகவும்,
திடகாத்திரமாகவும் காட்சியளிக்கும்
கடவுளாக திகழ்வார் சிவபெருமான்.
இதிலிருந்து, எளிமையாக இருப்பவர்களின்
வாழ்க்கை தான் நல்ல உயர்வான, திடமான
நிலைக்கு செல்லும் என நாம்
தெரிந்துக்கொள்ளலாம். மக்கள் வீண் பகட்டை
தவிர்ப்பது அவர்களுக்கு தான் நல்லது. சரி
இனி, சிவபெருமானிடம் இருந்து பொதுமக்கள்
கற்றுக் கொள்ள வேண்டிய நல்ல பண்பு
நலன்கள் மற்றும் வாழிவியல் கருத்துகள்
குறித்து தெரிந்துக்கொள்ளலாம்..


| ஜடாமுடி |

சிவபெருமானின் நேர்க்கொண்டு உயர்ந்து
காணும் ஜடாமுடியின் மூலம், ஒருமுகமாக
இருக்கும் உடல், மனம் மற்றும் ஆத்மா
உங்களது உடல்நிலையையும், மனநிலையும்
அதிகரிக்க செய்யும் மற்றும் உங்களை
அமைதியான நிலையில் ஆட்கொள்ள உதவும்.
உங்கள் செயல்களில் ஒருமுகத்தோடு
செயல்பட பயன்தரும்.

| நெற்றிக்கண் |

சிவபெருமானின் நெற்றிக்கண் நமக்கு கூறுவது
என்னவெனில், நமக்கு பின்னால் இருக்கும்
பிரச்சனைகளையும் எதிர்க்கொண்டு அதை
தகர்த்தெறிந்து, முடியாது என்பனவற்றையும்
முடித்துக் காட்ட வேண்டும் என்பதே ஆகும்.

| திரிசூலம் |

திரிசூலம் மூலமாக நாம் அறிய வேண்டியது,
நமது மனது, அறிவாற்றல், தன்முனைப்பு
ஆகியவற்றை கட்டுப்படுத்தினோம் எனில்
நமது வேலைகளில் சிறந்து செயல்பட
இயலும் மற்றும் தோல்விகளைத்
தகர்த்தெறியலாம் என்பனவாகும்.


| ஆழ்ந்தநிலை |

சிவபெருமானின் ஆழ்நிலை உருவின் மூலமாக,
நாம் அமைதி மற்றும் பொறுமையைக்
கையாளும் போது, நமது தினசரி
பிரச்சனைகளையும், கவலைகளையும்
எளிதாக கடந்து தெளிவான மனநிலை
பெறலாம் என்பதே ஆகும்.

| சாம்பல் |

சிவபெருமானின் தேகத்தில் இருக்கும் சம்பல்
நமக்கு உணர்த்துவது, நம் வாழ்க்கையில்
எதுவுமே நிரந்தரம் அல்ல, அனைத்தும்
கடந்து போகும். அதனால் எதற்காகவும்
மனக்கவலைப்படாமல், துயரம் கொள்ளாமல்
உங்கள் தோல்விகளில் இருந்து மீண்டெழுந்து
வாருங்கள் என்பதே ஆகும்.

| நீலகண்டம் |

சிவபெருமானின் நீல நிற தொண்டையின்
மூலம் நாம் அறியவேண்டியது, நமக்கு
எவ்வளவு கோபம் வந்தாலும், அதை
கட்டுப்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும்.
தேவையில்லாமல் அதை மற்றவர் மீது
திணித்து (விஷ சொற்களாக), உங்கள்
நிலையை நீங்களே குறைத்துக் கொள்ள
கூடாது, என்பதே ஆகும்.


| உடுக்கை |

சிவபெருமானின் உடுக்கையின் மூலமாக,
உங்கள் உடலின் அனைத்து எண்ணங்களையும்
ஒருமுகமாக செயல்படுத்தும் போது, உங்கள்
உடல் சுத்தமாகி, நோயின்றி வாழ உதவுகிறது
என்பதே ஆகும்.

| கங்கை |

சிவபெருமானின் தலையில் இருக்கும் கங்கை
நமக்கு உணர்த்துவது, உங்களது
அறியாமையின் முடிவில் ஒரு தேடல்
பிறக்கிறது. அந்த தேடலில் இருந்து தான்
உங்களுக்கான புதிய வழி தென்படுகிறது
என்பதே ஆகும்.

| கமண்டலம் |

சிவபெருமானின் கமண்டலம் மூலம் நம் அறிய
வேண்டியது, நமது உடலில் இருந்து தீய
எண்ணங்களையும், எதிர்மறை
எண்ணங்களையும் தவிர்த்தோம் என்றால் நாம்
நல்ல நிலையை எட்ட முடியும் என்பதே
ஆகும்.


| நாகம் |

சிவபெருமானின் கழுத்தை சுற்றி இருக்கும்
நாகம் மூலமாக நாம் உணர வேண்டியது,
நம்முள் இருக்கும் 'நான்' எனும் அகங்காரத்தை
விட்டுவிட்டால், உங்கள் மனநிலையும்
மற்றும் உடல்நிலையும் மேலோங்கும்
என்பதே ஆகும்.

#சிவபெருமானின்  #அங்கங்களும் #அதன் #விளக்கங்களும் #பற்றிப் #பார்ப்போம்

1} திருமுடி –

திருவருளை அனுபவிக்கும் போது தற்செயல் தோன்றாமல் ( யான், எனது, என்ற செருக்கு இல்லாமல்) பரவசப்படுவதே சிவனது திருமுடியாம்.

2} திருமுகம் –

உலகில் காணும் அனைத்தையும் இறைவனின் அனுக்ரஹமாகவே ( உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் சிவமாகவே பார்க்கும் தன்மை) கண்டு அனுபவிப்பது அவரது திருமுகம்.

3} இருதயம் –

முக்தி பெறுவதற்குரிய பக்குவ ஆன்மாக்களுக்கு மெய்ஞ்ஞானத்தை ( உண்மையான அறிவு விளக்கத்தை) உணர்த்தும் திருவருட்சக்தி இருதயமாகும்.

4} திருவடி –

யான் எனது என்னும் அகங்கார மமகாரமாய் நிற்கும் பொய்யறிவு ( அறியாமை என்ற இருள்) நீங்கத்திருவருள் ஞானம் பிரகாசித்து நிற்றலயே சிவனுடைய திருவடி என்பர்.

5} {வித்யா} தேகம் –

ஆன்மாக்கள் ( உயிர்கள்) செய்யும் கன்மத்திற்கு ( நல்வினை, தீவினை, செய்வதற்கு ஏற்ப) ஈடாக ரட்சிக்கும் குணமாகிய சதாசிவ மூர்த்தியினுடைய திருமேனி மந்திரம் ( திருவைந்தெழுத்து) ஆகையால் மந்திர ரூபமாகிய ஞான சக்தியே வித்யா தேகம் எனப்படும்.


6} திரிநேத்ரம் –

சூரியன்,சந்திரன்,அக்கினி ( முக்கண் உடையவன்) என்னும் முச்சூடர்களையும் அடக்கியாள்பவர் தாமே என்பதையும் ஆகவனீயம், காருகபத்யம், தக்கிணாக்கினியம் என்னும் மூன்று வேள்விகளும் தம்மிடத்தே பொருந்தியுள்ளன என்பதையும். எல்லாச் செயல்களையும் அறிந்து செய்யும் இச்சை, ஞானம், கிரியா சக்திகளையுடையவர்தாம் என்பதையும் இம்மூன்று கண்களும் குறிக்கின்றன.

7} திரிசூலம் –

ஆரணி, செனனி, ரோதயித்திரி என்னும் முச்சத்தி வடிவினதாகிய சூலப்படையானது முத்தொழிலையுடையவர், மும்மலங்களை ( ஆணவம், கன்மம், மாயை) நீக்குபவர் தாமே என்பதைக் குறிப்பது.

8} மழு –

லய சிவமாக இருப்பவர் தாம் என்பதைக் குறிக்க லயஸ்தானமாகவுள்ள மழுவை ஏந்தியுள்ளார்.

9} வாள் –

பிறவி வேரின் கொடியை அறுப்பவர்தாமே என்பதை அறிவிப்பதற்காக ஞான வடிவமாகிய ( அறிவால் நீங்க வேண்டியவை) வாளை ஏந்தியுள்ளார்.


10} குலிசம் –

ஒருவராலும் கெடுத்தற்கு ( துன்பம் தர) இயலாத சுத்தமாயை ஆளும் பேத குண்த்தையுடையவர் தாம் என்பதை அறிவித்தற்காக துஷ்டர்களைப் ( கெட்ட குணத்தை உடையவர்கள்) பேதிக்கின்ற குணமாகிய குலிசத்தை ஏந்தினார்.

11} அபயகரம்

உலக துன்பத்திற்குப் பயப்பட வேண்டாம் என்று அனுக்ரஹம் ( திருவருள் தரும் குணத்தை) செய்யும் குணத்தைக் குறிக்கிறது.

12} வரத கரம் –

ஆன்மாக்களின் கன்மத்துக்கு ஈடாகப் போக முத்திகளைக் கொடுப்பவர் {வரமளிப்பவர்} தாம் என்பதை அறிவித்தற்காகக் கொண்ட்து வரத கரம்.

13} அக்கினி –

ஆன்மாக்களின் பாசங்களை நீக்குபவர் தாம் என்பதை உணர்த்தும் பொருட்டுச் சம்ஹார வடிவாகிய அக்கினியைத் தாங்கியுள்ளார்.

14} அங்குசம் –

மறைப்பினை {திரோபாவம்} செய்பவர் என்பதை அறிவிப்பது.


*15} மணி*

நாதத் தத்துவத்திற்குத் ( 36 தத்துவம் கடந்தவர்) தாமே தலைவர் என்பதைக் குறிக்கிறது.

*16} ஸர்ப்பம் {பாம்பு}*–

பாம்பினுடைய விரிவு, சுருக்கம் போல உலகின் தோற்றம் ஒடுக்கம் இருப்பதற்கு உலகிற்கு நிமித்த காரணர் தாம் என்பதை அறிவித்தற்காகக் குண்டலினி சக்தி ரூபமாகிய பாம்பை ஏந்தியுள்ளார்.

*17} பாசம்*

ஆன்மாக்களுக்கு பலத்தை ஊட்டுபவர் தாம் என்பதை அறிவித்தற்காக மாயா ரூபமாகிய பாசத்தை திருக்கரத்தில் ஏந்தியுள்ளார்.

*18} மான்*

மானினது நாங்கு கால்களும் நான்கு ( ரிக்,யசூர், சாமம்,அதர்வணம்) வேதங்களாகையால் வேதப் பொருளாக உள்ளவர் தாம் என்பதை உணர்த்துவதற்காக மானை ஏந்தினார்.

*19} புன்முறுவல்*

சஞ்சிதம் முதலான மூவகைத் ( ஆகாமியம், சஞ்சிதம், பிரார்த்தம்) துயரத்தையும் போக்கி அருளுவதற்காக இளமையான புன்சிரிப்பைக் கொண்டுள்ளார்.


*20} உபவீதம் {பூணூல்}*

சிவஞானப் பொருளாக இருப்பவரும் அதைத் தருபவரும் தாமே என்பதை உணர்த்துவது.

*21} சிகை {தலைக்குடுமி}*

ஞான வடிவமாக உள்ளவர் தாமே என்பதையும் அறிவிக்கவே ஞான அடையாளமாகிய சிகையைக் கொண்டுள்ளார்.

*22} சிலம்பு மற்றும் மெட்டி –*

பக்குவ ஆன்மாக்களைப் பேரின்பத்தின் அழுத்துதற்குச் சாதனமாக அருட்சிலம்பு மற்றும் மெட்டி விளங்குகிறது.

*23} வீரக்கழல் –*

ஆன்மாக்களை வசப்படுத்தும் முன் வினையை வென்று, பிறவித் துன்பத்தைப் போக்கும் காரணர் தாம் என்பதை உணர்த்துவது.

*24} கங்கை –*

உலகை அழிக்குமாறு வந்த கங்கையை அதன் வேகத்தைக் குறைத்து அடக்கி உலகை காத்து இன்பத்தைத் தந்ததால், ஆன்மாக்களை ஆனந்தக்கடலில் திளைக்கச் செய்ததற்கு அடையாளமாகக் கங்கையை தலைமுடியில் தரித்துள்ளார்

*25) காதில் குழை ( தோடு)*

அசுரர்களை அழித்து ( ஆணவத்தை) வளையமாக காதில் அணிந்துள்ள ஆபரணம் தோடு ஆகும்.

Friday, 6 March 2020

சாப்பிடாமல் இருந்தால் என்ன நடக்கும்?

ஒரு நாள் முழுக்க சாப்பிடாமல் இருந்தால் என்ன நடக்கும்?

எதுவும் சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும் என்ற முறையை நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்தார்கள் என்பது நமக்குத் தெரியும். சொல்லப் போனால் இந்த வழக்கம் பெரும்பாலான மதங்களிலும் இருக்கிறது. உடலின் வளர்ச்சிக்கு, ஆற்றலுக்கு உணவு மிகவும் தேவை என்னும் போது ஒரு நாள் அதாவது 24 மணி நேரம் சாப்பிடாமல் இருந்தால் நம் உடல் அதை ஏற்றுக் கொள்ளுமா? அப்போது உடலில் என்ன நடக்கும் என்பதைப் பார்ப்போம்.

நமது உடலின் ஆற்றலுக்கு குளுக்கோஸ் மிக அவசியம். நமது தசைகளும் கல்லீரலும் நாம் உடல் நாம் உண்ணும் உணவு செரித்தவுடன் அதிலிருந்து இந்த குளுகோஸை எடுத்து சேமித்து வைத்து நமக்குத் தேவைப்படும் போது ரத்தத்தின் மூலமாக அனுப்புகின்றன. விரதம் இருக்கும் போது இந்த முறை அப்படியே மாறி விடும்.

சர்க்கரை நோயாளிகள், கர்ப்பிணிகள், 18 வயதுக்கும் கீழுள்ள குழந்தைகள், வேறு ஏதேனும் நோய் வாய்ப்பட்டுள்ளோர் இந்த பயிற்சியை செய்யவேக் கூடாது!!

ஆற்றல்.

சாப்பிடாமல் இருக்கும் முதல் 8 மணி நேரம் நம் உடல் கொஞ்சம் எளிதாக இந்த விரத நிலையைத் தாங்கிக் கொள்ளும். இந்த 8 மணி நேரம் வரை, கடைசியாக நீங்கள் சாப்பிட்ட உணவை வயிறு செரிக்கும். அதே போல இரத்தமும் சீராக அதன் வேலைகளைச் செய்யும். இப்போதும் உடலுக்கு உணவு வரவில்லையென்றால் Gluconeogenesis என்ற நிலையை நமது உடல் அடையும்.  கார்போஹைட்ரேட் அல்லாத மூலக்கூறுகளில் இருந்து குளுகோஸை உற்பத்தி செய்யும் நிலை தான் Gluconeogenesis. இந்த நிலையில் நமது உடலில் வழக்கத்தை  விட அதிகமான கலோரிகள் எரிக்கப்படும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்போது ஏற்கனவே உடலில் உள்ள கொழுப்பை உடைக்க ஆரம்பிக்கும். இப்படி ஒரு நாள் உடல் செய்யும் போது பெரிதாக எந்த பாதிப்பும் இருக்காது. சொல்லப்போனால் பல நன்மைகள் உருவாகும்.

24 மணி நேரம் வரை எதையுமே சாப்பிடாமல் இருந்தால் இதயம் சார்ந்த பிரச்சினைகள் உண்டாகாது.

ஒரு முழு நாள் எதையுமே சாப்பிடாமல் இருந்தால் இது வரை உடலில் சேர்ந்துள்ள நச்சுக் கழிவுகள் மிக எளிதாக வெளியேறி விடும்.

சர்க்கரை நோய் போன்ற அபாயங்களும் குறைவு என ஆய்வுகள் சொல்கின்றன.
ஜீரண உறுப்பு மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்.

இந்த ஒரு நாள் விரதம் மூளையின் திறன் அதிகரிக்ரித்து சுறுசுப்பாக வைத்துக் கொள்ளுமாம். வாயுத் தொல்லை, குடல் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படாது.

இதன் மூலம் உடலில் கண்டிப்பாக சில கலோரிகள் குறையும் என்பதால் உடல் எடை குறையும்.

ஆரோக்கியமுடன் இருக்க ஒரு மாதத்திற்கு ஒரு முறை இது போல 24 மணி நேரமும் சாப்பிடாமல் இருப்பது நல்ல பயனைத் தரும். ஆனால் ஒரு நாளுக்கு மேல் சாப்பிடாமல் இருந்தால் அதன் பிறகு தசைகளில் உள்ள புரதங்களில் இருந்து ஆற்றலை எடுக்கத் தொடங்கும். இது Starvation stage எனப்படும் ஆபத்தான நிலை. இதற்கு மேலும் சாப்பிடாமல் இருந்தால் இதயம், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் போன்ற உறுப்புகள் ஒவ்வொன்றாக பாதிப்படைய ஆரம்பிக்கும்.

ஆய்வுகள்.

பொதுவாகக் குடலில் உள்ள ஸ்டெம் செல்களின் மறு உற்பத்தி நமக்கு வயதாக வயதாக குறையத் தொடங்கும். ஆனால் நமது ஆரோக்கியத்திற்கும் நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கு இவை மிக முக்கியம். இது குறித்து அறிய ஆராய்ச்சியாளர்கள் 24 மணி நேரம் எதுவும் சாப்பிடாத எலிகளைக் கொண்டு சோதனை செய்தனர். எலிகளிடமிருந்து எடுத்த ஸ்டெம் செல்களை ஆய்வுக் கூடத்தில் வளர்த்த போது சாப்பிட்ட எலிகளை விட சாப்பிடாத எலிகளின் ஸ்டெம் செல்களை மீளுருவாக்கம் திறன் இரு மடங்காக இருந்துள்ளது.

அதாவது சாப்பிடாமல் இருந்தது குடலில் உள்ள ஸ்டெம் செல்களின் வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டியுள்ளது. அதுவும் அந்த செல்கள் கார்போஹைட்ரேட்டுக்கு பதிலாக கொழுப்பை செரிக்க ஆரம்பித்தது. பொதுவாகக் குடலில் உள்ள சில திசுக்கள் ஐந்து நாளுக்கு ஒரு முறை தன்னையே புதுப்பித்துக் கொள்ளும். குடல் செல்கள் கார்போ ஹைட்ரேட்டுக்கு பதிலாக கொழுப்பை செரிக்க ஆரம்பிக்கும் போது இந்தப் புதிப்பித்தலும் சீக்கிரம் நடக்கிறது. வயதான எலிகளிலும் கூட இதே விளைவே ஏற்பட்டுள்ளது. எலிகளின் மரபணு 98 சதவீதம் மனித மரபணுவுடன் ஒத்திருக்கிறது என்பதால் இந்த ஆராய்ச்சி அடுத்த கட்டத்தை எட்டும் போது இதன் மூலம் மனிதர்களின் குடல் சார்ந்த பிரச்சனைகளைத் தீர்க்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.

செய்யக் கூடாது.

அதே சமயம் ஒரு நாள் முழுக்க சாப்பிடாமல் இருக்கும் முறையை எல்லாரும் செய்யக் கூடாது. சிலருக்கு இந்த முறை பல பாதிப்புகளை உண்டாக்கி விடும். முக்கியமாக சர்க்கரை நோயாளிகள், கர்ப்பிணிகள், 18 வயதுக்கும் கீழுள்ள குழந்தைகள், வேறு ஏதேனும் நோய்வாய்ப் பட்டுள்ளோர் இந்த பயிற்சியை செய்யவேக் கூடாது. புதிதாக விரதம் இருப்பவர்களும் சற்று கவனமுடன் இருக்க வேண்டும். முதல் முறை என்பதால் அதிகமாக பசிக்க ஆரம்பிக்கும். அப்போது சாப்பிட்டு விடுங்கள். அடிக்கடி விரதம் இருந்து சாப்பிடாமல் இருக்கும் நேரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து பழகுவதே சிறந்தது.

நமக்கு வரும்'

'நமக்கு வரும்'

--------------------------------

கிட்டத்தட்ட முதல் நூறு மரணங்கள் நிகழும்வரை சீனாவும் சுதாரிக்கவில்லை. சீன புத்தாண்டின் கொண்டாட்ட நேரம் அவர்களுக்கு இப்படித்தான் விடிந்திருக்கிறது. இன்று மூவாயிரம் பேரைக் காவு வாங்கிவிட்டு, உலகத்தின் அத்தனை மூலைகளுக்குள்ளும் நுழைய ஆரம்பித்திருக்கிறது கரோனா. 

எங்கோ தூரத்தில் கேட்டிருந்த சேதிகள், இன்று நம் வீட்டு கதவைத் தட்டிக்கொண்டிருக்கின்றன. 'சீனாவில்தானே' என்ற மனநிலை 'இந்தியாவில்' என்றதும் கொஞ்சமாய் பதறுகிறது. சற்று நேரத்தில் அதை மறந்து, 'பெங்களூரில்தானே' என்று ஆசுவாசம் கொள்கிறது. நாளை சென்னை என்றாலும் கும்பகோனத்தில் உள்ளவனுக்கு பயம் வராது. அந்தளவிற்கு தற்காப்பு முனைப்புகள் சுரணையற்று போய்விட்டன. இது மணிக்கு மணி துயரம் அதிகமாகிக்கொண்டிருக்கும் பேரிடர் கணம்.

 நம்மால் கற்பனை செய்யமுடிந்ததைத் தாண்டிய மிக மோசமான தொற்று இது. மருந்தில்லாத தொற்றுகள், ரத்தத்தின் மூலம் பரவியதற்கு இருந்த பயம் கூட காற்றில் பரவிக்கொண்டிருக்கும்போது இருக்கவில்லை. முன்னொரு காலத்தில், சார்ஸ் என்றொரு தொற்று வந்தது நினைவிருக்கலாம். அதுவும் கரோனா வைரஸ்தான். இது அதனுடைய மேம்படுத்தப்பட்ட வெர்ஷன். சார்ஸ்-2. இந்த பதிவை எழுதிக்கொண்டிருக்கும் நிமிடம் வரை இந்தியாவில் முப்பது பேருக்கு அந்த தொற்று வந்திருக்கிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அமெரிக்காவில் மரணக் கணக்குகள் ஆரம்பமாகிவிட்டன.

சீனா, அமெரிக்கா போன்ற வல்லரசுகளே தடுமாறிக்கொண்டிருக்கும்போது, நமது நிலை ரொம்பவே பரிதாபத்திற்குறியது. இங்கே ஒரு விஷயத்தைச் சொல்லி மக்களை நெறிப்படுத்துவதும் அத்தனை சுலபமில்லை.

அரசாங்கம் எதுவுமே செய்வதில்லை என்றவொரு பிரசங்கம் இங்கு பரவலாக உண்டு. ஒரு சிறிய உதாரணத்தைச் சொல்கிறேன். ஒரு மாதத்திற்கு முன், ஹாங் காங் வழியாக நான் பயணம் மேற்கொண்டு திரும்பிய முதல் இரண்டு வாரங்களும், ஒவ்வொரு நாளும், சுகாதாரத் துறையிலிருந்து அலைப்பேசியில் அழைத்து, இன்ன இன்ன நோயறிகுறிகள் உங்களுக்கு இருக்கின்றனவா என்று விசாரித்துக்கொண்டுதான் இருந்தார்கள். பயணம் மேற்கொண்டு வரும் ஒவ்வொரு தனிமனிதனையும் விரட்டிப் பிடித்து ஒவ்வொரு நாளும் நோயறிவதெல்லாம் எத்தனை அசாதாரணமான காரியம் என்பது யோசிக்கவே மலைப்பாக இருக்கிறது. இந்த surveillance-க்கு எத்தனை உழைப்பு வேண்டும் என்பதை ஓரளவு அந்த துறையின் சிரமங்கள் அறிந்தவன் என்ற முறையில் என்னால் சொல்லமுடியும்.

இன்னொரு விஷயம், டெங்குவை மர்மக் காய்ச்சல் என்று மழுப்பியதாக சொல்லப்படுவது. அரசின் ஒரு அறிவுரைக்கு இங்கு எத்தனை பேர் செவி சாய்க்கிறார்கள். வீட்டில் நீர் தேங்கும் தொட்டிகள் வைக்காதீர்கள் என்று சொன்னபோது அதை சட்டையே செய்யாமல் ஹிண்டு பேப்பர் படித்துவிட்டு, பின்னர் அதற்கே அபராதம் போட்டப்போது குய்யோ முய்யோவென்று கத்திய மெத்த படித்தவர்கள் எத்தனை எத்தனை பேர். வரும் எந்த ஓர் அபாயமும் எனக்கானதல்ல என்று பொறுப்பற்று திரியும் மெத்தனம் இங்கே மலிந்துப்போயிருக்கிறது. பொதுமக்களின் பங்களிப்பு இல்லாமல் அரசாங்கத்தால் சிறு துரும்பைக் கூட கிள்ளிப்போட்டுவிட முடியாது. 

'மர்மக் காய்ச்சல்' என்பது, கறை பட்டுவிடக்கூடாது என்ற அரசியல் சாதுர்யத்தையும் தாண்டிய அச்சுறுத்தலும் கூட. 'டெங்கு' என்ற வார்த்தைக்கு மக்களிடம் பயமே இல்லாமல் போய்விட்டது. 'மர்ம' என்றால் கொஞ்சம் பயம் சேரும். அவ்வளவுதான். இப்போது கரோனாவை வைத்துக்கொண்டு மீம்களும் அவல நகைச்சுவைகளையும் பரப்பிக்கொண்டிருப்பதைப் பார்த்தால், வரப்போகும் பேரழிவு குறித்து எந்தவொரு விஷய ஞானமும் இங்கே இல்லை என்றுதான் படுகிறது. அதுதான், கரிவேப்பிலை ஜூஸில் இரண்டு சொட்டு கருவாட்டு ரத்தத்தை விட்டு குடித்தால் கரோனா அண்டாது என்ற புளுகல் பரப்புரைகளைச் செய்யச்சொல்கிறது. 

தமிழ்நாடு மாதிரியான சுகாதாரத் துறையில் முன்னேறியுள்ள மாநிலத்திலேயே இந்த நிலை என்றால், வடக்கைப் பற்றி யோசிக்கவே முடியவில்லை.

சீனாவில் செயல்படுத்த முடிந்த மாஸ் ஷட் டவுன் முறையெல்லாம் இங்கு சாத்தியமாவென தெரியவில்லை. கல்வி நிலையங்கள், வர்த்தக மையங்கள், சிறு சிறு கடைகள், பேருந்து, ரயில், விமானம், வங்கிகள் என அத்தனையையும் வாரக் கணக்கில் மூடி வைப்பதன் சாத்தியத்தை யோசித்துப் பார்க்கமுடிகிறதா? உணவு தட்டுப்பாடு, பொருளாதார நெருக்கடி, நிர்வாக குளறுபடிகள், ஒரு மிகப்பெரிய நோய்த்தொற்றை உடனடியாக சமாளிக்க மருத்துவமனை/மருத்துவர்கள் போதாமை என எத்தனை எத்தனை துயரங்கள் அதில் அடங்கியிருக்கின்றன. 

பேராபத்து நெருங்கும் முன்னரே நாமே வலிந்து இறங்கி செய்யவேண்டியது சில இருக்கின்றன. 

1) விதண்டாவாதம் செய்யாமல் சுகாதாரத் துறை அறிவிப்புகளை ஏற்பது. அது குறித்து எந்தவொரு அவநம்பிக்கை உண்டாக்கும் எந்தவொரு செய்தியையும் கூடுமானவரை சமூக வலைதளங்களில் பரப்பாமல் இருப்பது

2) கூடுமானவரை கூட்ட நெரிசல் இருக்கும் இடங்களை தவிர்ப்பது. திரையரங்குகள், திருமண நிகழ்வுகள், அவசியமற்ற பேருந்து/ரயில் பயணங்கள் அனைத்தையும் ஒதுக்கி வைய்யுங்கள். 

3) மருத்துவமனைகளுக்கு வேறேதோ பிணிக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் உறவினர்கள்/ நண்பர்களை நலம் விசாரிக்க அநாவசிய விஜயம் செய்யாதீர்கள். அரசு மருத்துவமனையிலிருக்கும் முக்கால்வாசி கூட்டம் உறவினர்களும் நண்பர்களும்தான். 

4) மின்தூக்கிகள் பிரயோகிப்பதைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

5) மாஸ்க் அணிவதால் இருக்கும் நன்மையைவிட கையை சுத்தகரிக்க பயன்படும் hand sanitizerகளால்தான் நன்மை அதிகம். எப்போதும் கையிருப்பு வைத்துக்கொள்ளவும். அடிக்கடி கை கழுவவேண்டியது அவசியம்.

6) மருந்தோ தடுப்பூசியோ இல்லாததால்தான் நாடுவிட்டு நாடு வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. இதுதான் மருந்து எனில் அதை அரசே அறிவிக்கும். வாட்ஸப்பில் தினமும் புதிய மருந்து ஒன்றைக் கண்டுபிடிக்காதீர்கள்.

7) வீட்டில் நாய் வளர்ப்பதால், மாடு வளர்ப்பதற்கு எதிரான கருத்துகளை நம்பாதீர்கள். பரப்பாதீர்கள்.

8) கரோனா வராமல் இருக்க சிறப்பு வழிப்பாட்டு கூட்டங்கள் நடந்தால் முன்வரிசையில் போய் நிற்காதீர்கள். கோவில்கள், மசுதிகள், தேவாலயங்கள் அனைத்தையும் கொஞ்சம் காலத்திற்கு ஒதுக்கி வைய்யுங்கள். கூட்ட நெரிசல் ஏற்படும் முக்கியமான இடங்களில் அவைதான் முதலிடம். 

இந்த பதிவையும் பகிர்ந்துவிட்டு, இதெல்லாம் யாருக்கோவெனதான் இருக்கப்போகிறோம். இதில் தனி மனிதன் ஒவ்வொருவனுக்கும் கடமை இருக்கிறது. அரசு பார்த்துக்கொள்ளும், அரசு முன்னெச்செரிக்கையாக இருக்கவில்லை என்றெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்போமாயின், பிணக்குவியல்களை நம் செய்தி ஊடகங்கள் சில வாரங்களில் காட்டத் துவங்கும்.

' நமக்கு வராது' என்ற மனநிலைதான் நம் சமூகத்தின் முதல் கேடு. கூடுமானவரை தன்னொழுக்கத்துடன் போராடிப் பார்க்கவேண்டிய அவசரநிலை இது. தவறவிட்டோம் எனில், மாஸ் ஷட் டவுன் என்ற சுகாதார சர்வாதிகாரம் பிரகடனத்திற்கு வந்தே ஆகவேண்டிய நிலை வரும். நம் மக்கட்தொகையும், அதற்கு பொருந்தாத நில நெரிசலும், இந்த விஷக்கிறுமிக்கு மிகத் தோதான விளைச்சல் நிலம். கொத்து கொத்தாக அறுவடை விழும்.