இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள்..!!
உங்கள் வீட்டில் செல்லப் பிராணியாக ஒரு பெரிய யானை வளர்க்கிறீர்கள். அந்த யானையைக் கட்டிப் போடுவதற்கு எதைப் பயன்படுத்துவீர்கள்?
தோல் பட்டை? தாம்புக் கயிறு? இரும்புச் சங்கிலி?... இவை எதுவும் தேவையில்லை, யானையை ஒரு சின்னக் குச்சியில் கட்டிப் போட்டு வைத்தாலே போதும். இது என்ன கூத்து? அத்தனை பெரிய மிருகத்தைக் கட்டிப் போடுவதற்குத் தக்கனூண்டு குச்சியா? யானை நினைத்தால் அரை நொடியில் அறுத்துக் கொண்டு ஓடிவிடுமே. உண்மை தான். ஆனால், அந்த யானை ‘நினைக்க’ வேண்டுமே, அதான் மேட்டர்!
சின்ன வயதில், அந்த யானைக் குட்டியை ஒரு கனமான இரும்புச் சங்கிலியில் பிணைத்து நன்றாகக் கட்டிப் போட்டிருப்பார்கள். யானைக் குட்டி அதிலிருந்து விடுபடுவதற்கு எவ்வளவோ போராடிப் பார்க்கும். இழுக்கும், தள்ளும், முட்டும், மோதும், ஒரு பலனும் இருக்காது. இப்படிக் கொஞ்ச நாள் போராடித் தோற்கிற யானைக்குட்டி, ஒரு கட்டத்தில் தன்னால் இந்தப் பிணைப்பிலிருந்து விடுபட முடியாது என்று முடிவு செய்து விடுகிறது. விடுதலைக்கு முயற்சி செய்வதையே நிறுத்தி விடுகிறது.
இப்போது அந்த யானை பல நூறு கிலோ எடை கொண்ட பிரமாண்ட மலை போல நிற்கிறது. ஆனால், இப்போதும் நம்முடைய யானை தப்பி ஓட முயற்சி செய்வதே இல்லை. தன்னைக் கட்டிப் போட்டிருப்பது ஒரு சாதாரணக் குச்சி தான், லேசாக இழுத்தாலே அது விடுபட்டு விடும் என்பது கூட அந்த யானைக்குப் புரிவதில்லை. நம்மில் பலரும் இந்த யானையைப் போல் தான். நமது திறமைகள் என்னென்ன, நம்மால் எதையெல்லாம் சாதிக்க முடியும் என்பதைப் புரிந்து கொள்ளாமல், அதிசாதாரணமான மனத் தடைகளுக்கெல்லாம் பயந்து ஒதுங்கி நிற்கிறோம். அவற்றை உடைத்துக் கொண்டு வெளியே வரத் தயங்குகிறோம்.
இந்த யானைக் கதையை மையமாக வைத்து ‘The Elephant And The Twig’ என்ற பிரமாதமான பாஸிட்டிவ் சிந்தனைப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் ஜெஃப் தாம்ஸன்.
ஜெஃப் தாம்ஸனைப் பொறுத்த வரை, நாம் ஒவ்வொருவரும் யானை பலம் கொண்டவர்கள். நம்மைச் சில சின்னக் குச்சிகள் சிறைப் படுத்தி வைத்திருக்கின்றன. அவற்றை முறித்து எறிந்து விட்டு வெளியேறும் போது தான் நமது முழு பலமும் முழுத் திறமையும் உலகிற்குத் தெரிகிறது. அதிவேக முன்னேற்றம் சாத்தியப்படுகிறது.
இதற்காக, ஜெஃப் தாம்ஸன் 14 முக்கியமான விதிமுறைகளைச் சொல்லித்தருகிறார். அவை இங்கே சுருக்கமாக:
1 எதையும் அப்புறம் செய்யலாம் என்று தள்ளிப் போடாதீர்கள். செயல்படுவதற்குப் பொருத்தமான நேரம், இதோ, இந்த விநாடி தான்!
2 நம்முடைய உலகத்தில் நாம் தான் கடவுள். அந்த சக்தியை உணர்ந்து, பொறுப்போடு முடிவெடுங்கள்.
3 நாம் நம்மை என்னவாகக் கற்பனை செய்து கொள்கிறோமோ, அதுவாகவே ஆகிறோம். நீங்கள் என்ன நினைக்கப் போகிறீர்கள்?
4 உங்களுடைய நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் செயல் படுத்துவதற்கான பயணத்திற்கு எரிபொருள் தேவை. அந்த ‘எனர்ஜி’யை எங்கிருந்து, எப்படிப் பெற்றுக் கொள்வது என்று யோசியுங்கள்.
5 வாழ்க்கை நெடுகிலும் நாம் பல முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். அதை வேறு யாரும் செய்ய மாட்டார்கள். நமக்காக முடிவெடுக்கும் அதிகாரம் நம்மிடம் மட்டுமே உள்ளது.
6 சுறுசுறுப்போடு தொடர்ந்து செயல்படுவதற்கு ஏற்ற மனநிலை அவசியம். உற்சாகமான மனத்தை முதலில் வளர்த்துக் கொள்ளுங்கள்.
7 உங்களுக்கென்று சில இலக்குகளைக் கற்பனை செய்யுங்கள். அவற்றை நோக்கிப் பயணம் புறப்படுங்கள். உங்கள் செயல்வேகம் ஜிவ்வென்று எகிறும்.
8 இலக்கை அடையும்வரை விடுவதில்லை என்கிற பிடிவாதம் வேண்டும். நடுவில் வேறு எந்த இலக்கையும் பார்த்து மயங்குவதில்லை என்கிற மன உறுதியும் வேண்டும்.
9 உங்களுடைய நேரத்தை எப்படிப் பயன் படுத்துகிறீர்கள் என்பதை அடிக்கடி கவனியுங்கள். அநாவசியமான நேரக் கொல்லிகளை விரட்டியடியுங்கள்.
10 நதியைப் போல் ஓடிக்கொண்டிருக்க, நம் திறமைகளை அடுத்தடுத்த கட்டத்துக்கு வளர்த்துக் கொள்ள வேண்டும்.
11 தேவை தான் நம்முடைய வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது. உங்களுடைய தேவைகளை, எதிர்பார்ப்புகளை மாற்றிக் கொண்டு தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள்.
12 நேர்மை முக்கியம். இலக்கை அடையக் குறுக்கு வழிகளைப் பின் பற்றாதீர்கள்.
13 நல்ல புத்தகங்களைத் தேடி வாசியுங்கள். அவற்றைப் போலச் சிறந்த ஆசிரியர்கள் எங்கும் கிடையாது.
14 அடுத்தவர் உங்கள் மீது குறை சொன்னால் கோபப்படாதீர்கள். தவறு செய்யாத மனிதர் யார்? அவர்கள் சுட்டிக் காட்டுவதில் உண்மை இருந்தால் அதை மதித்து நம்மைத் திருத்திக் கொள்வது தான் புத்திசாலித் தனம். அது நம் வளர்ச்சியைத் தடுக்காது, வேகப்படுத்தும்..!!
💗வாழ்க வளமுடன்💗