Tuesday, 21 October 2014

30 வகை ஸ்வீட், காரம் - தீபாவளி ஸ்பெஷல்
 

ண்டிகைகளின் ராணி என்றால், அது தீபாவளிதான்! பல நாட்களுக்கு முன்பிருந்தே 'கவுன்ட் டவுன்’ கொடுத்துக்கொண்டு, டிரெஸ், பட்டாசுகளைப் பார்த்துப் பர்த்து செலக்ட் செய்து, பட்சணங்களை தயார் செய்து, உறவு - நட்பு வட்டாரத்தில் விநியோகித்து, பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடி முடிக்கும் சமயத்தில்... 'அடுத்த தீபாவளி சீக்கிரம் வந்துவிடாதா...’ என்று மனம் ஏங்க ஆரம்பித்துவிடும். இதோ வந்து விட்டது இனிய தீபாவளி. இந்த இன்பப்பொழுதில் உங்களை பாராட்டு மழையில் நனைய வைக்கும் வகையில், 30 வகை தீபாவளி பட்சணங்களை சிறப்பாக செய்யக் கற்றுத்தருகிறார், சமையல்கலை நிபுணர் லக்ஷ்மி ஸ்ரீநிவாசன்.  
தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்!

லட்டு
தேவையானவை: கடலை மாவு - 200 கிராம், சர்க்கரை - 350 கிராம், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, முந்திரி, திராட்சை - தலா 20, லவங்கம் - 8, டைமண்ட் கல்கண்டு - 15, பச்சைக் கற்பூரம் - ஒரு சிட்டிகை, முழு ஏலக்காய் - 5, பால் - ஒரு டீஸ்பூன், கேசரி கலர் - சிறிதளவு.
செய்முறை: சர்க்கரையில் 50 மில்லி நீர்விட்டு சூடாக்கவும். கொதிக்கும்போது பால் விட்டு அழுக்கு நீக்கி, கேசரி கலர் சேர்த்து பாகு காய்ச்சி இறக்கவும். கடலை மாவை நீர்விட்டு பஜ்ஜி மாவு போல் கெட்டியாக கரைக்கவும். எண்ணெயை சூடாக்கி, மாவை லட்டு தேய்க்கும் கரண்டியில் விட்டு எண்ணெயில் விழும்படி தேய்த்து, முத்து முத்தாகப் பொரித்து பாகில் சேர்க்கவும். முந்திரி, திராட்சை, லவங்கம் இவற்றை பொரித்து முழு ஏலக்காய், டைமண்ட் கல்கண்டு, பச்சைக் கற்பூரம் சேர்த்து, சர்க்கரை பாகு - பூந்தி கலவையில் கொட்டிக் கிளறவும். கை பொறுக்கும் சூட்டில் லட்டு பிடிக்கவும்.
குறிப்பு: கடலைப்பருப்பை வெயிலில் காயவைத்து, மெஷினில் அரைத்தால்தான் லட்டு சூப்பர் சுவையில் அசத்தும். செய்து வைத்த பாகு உறைந்து கெட்டியாகிவிட்டால் கவலை வேண்டாம். லேசாக சுடவைத்தும் லட்டு பிடிக்கலாம்.

கடலைப்பருப்பு சுய்யம்
தேவையானவை: கடலைப்பருப்பு (மெத் தென்று வேகவிட்டது) - 100 கிராம், பாகு வெல்லம் - 100 கிராம், தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன், முந்திரித்தூள் - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - கால் கிலோ
மேல்மாவுக்கு: மைதா மாவு - 75 கிராம், அரிசி மாவு - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, மஞ்சள் ஃபுட் கலர் - சிறிதளவு, சமையல் சோடா - ஒரு சிட்டிகை.
செய்முறை: வெல்லத்தில் சிறிதளவு நீர்விட்டு கொதிக்கவிட்டு வடிகட்டவும். கடலைப் பருப்பு, தேங்காய்த் துருவல், வெல்லக் கரைசல் ஆகியவற்றை மிக்ஸியில் மைய அரைத்து ஏலக்காய்த்தூள், முந்திரித்தூள் சேர்த்து எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டவும். மேல் மாவுக்கான பொருட்களை, நீர் விட்டு பஜ்ஜி மாவு போல் கரைக்கவும். எண்ணெயை சூடாக்கி, பூரண உருண்டைகளை மாவில் நன்கு தோய்த்து பொரித்தெடுக்கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்).

தேங்காய் சுகியன்
தேவையானவை: தேங்காய்த் துருவல் - ஒரு கப், வெல்லம் - முக்கால் கப், நெய் - ஒரு டீஸ்பூன், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
மேல் மாவுக்கு: தண்ணீர் விட்டு களைந்து, நிழலில் உலர்த்தி அரைத்த பச்சரிசி மாவு - 100 கிராம், உளுத்தமாவு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: வெல்லத்தில் சிறிதளவு நீர்விட்டு கரைத்து, கொதிக்கவிட்டு, வடிகட்டி, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள், நெய், அரிசி மாவு சேர்த்து பூரணமாக கிளறி இறக்கி, எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். மேல் மாவுக்கு கொடுத்துள்ள பொருட்களை கலந்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு போல் கரைத்துக்கொள்ளவும்.  பூரண உருண்டைகளை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் (மிதமான சூட்டில்) பொரித்தெடுக்கவும்.
குறிப்பு: அதிக சூட்டில் பொரித்தால், பூரணம் கரைந்து எண்ணெயில் சிதறிவிடும்.

உக்காரை
தேவையானவை:  கடலைப்பருப்பு - 200 கிராம், பாசிப்பருப்பு - 100 கிராம், வெல்லம் - 250 கிராம், நெய் - 100 கிராம், வறுத்த முந்திரி - 25 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: கடலைப்பருப்பு, பாசிப்பருப்பை சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிட்டு, ரவை ரவையாக அரைத்து (நீர்விடக் கூடாது) வழித்தெடுக்கவும். வெல்லத்தை ஒரு கரண்டி (50 மில்லி) நீர் விட்டு கரைத்து வடிகட்டவும். வாணலியில் நெய் விட்டு சூடானதும் அரைத்த பருப்பு சேர்த்துக் கிளறவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). வெந்த பின்பு வெல்லக் கரைசல் சேர்த்து கட்டிதட்டாமல், அடிபிடிக்காமல் நன்கு உதிராக வரும் வரை கைவிடாது கிளறி இறக்கி, ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்க்கவும்.

மூங்தால் ஃப்ரை
தேவையானவை: பாசிப்பருப்பு - 200 கிராம், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - சிறிதளவு.
செய்முறை: பாசிப்பருப்பைக் கழுவி, சமையல் சோடா சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிட்டு வடிகட்டி, ஈரம் போக நிழலில் உலர்த்தி எடுக்கவும். இதனை சூடான எண்ணெயில் சிறிது சிறிதாக போட்டு வறுத்து எடுக்கவும். மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து குலுக்கிவிட்டு, காற்றுப்புகாத டப்பாவில் சேமிக்கவும்.
இது ஒரு மாதம் வரை கெடாது.

சன்னா தால் ஃப்ரை
தேவையானவை:  கடலைப் பருப்பு - 200 கிராம், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, மிளகாய்த் தூள், பெருங்காயத்தூள் - தேவை யான அளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - சிறிதளவு.
செய்முறை: கடலைப்பருப்பை கழுவி, சமையல் சோடா சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிட்டு வடிகட்டி,  நிழலில் உலர்த்தவும். உலர்ந்த பிறகு கடலைப்பருப்பை சூடான எண்ணெயில் சிறிது சிறிதாக போட்டு வறுத்து எடுக்க வும். மிளகாய்த்தூள், பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து குலுக்கிவிட்டு, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

டெசிகேட்டட் கோகோனட் பர்ஃபி
தேவையானவை: டெசிகேட்டட் கோகோனட் (உலர்ந்த தேங்காய்த் துருவல்  - டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - 200 கிராம், சர்க்கரை - 300 கிராம், பால் பவுடர் - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 100 கிராம்.
செய்முறை: ஏலக்காய்த்தூள் தவிர பிற பொருட்களை ஒன்றாக சேர்த்து வாணலியில் போட்டு, நன்றாக கரைந்து சுருள பூத்து வரும்போது ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் தடவிய தட்டில் கொட்டி சமன்படுத்தவும். சற்று சூடாக இருக்கும்போதே வில்லைகள் போடவும். பால் பவுடர் சேர்ப்பதனால் இந்த பர்ஃபி மிருதுவாகவும் அதிக வெள்ளையாகவும் இருக்கும்.
இதை 15 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

மைசூர்பாகு
தேவையானவை: கடலை மாவு - 100 கிராம், சர்க்கரை - 300 கிராம், நெய் - 200 கிராம் (வெண்ணெயைக் காய்ச்சி பயன்படுத்தினால் சுவை கூடும்).
செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையுடன் 50 மில்லி தண்ணீர் சேர்த்துக் கரையவிடவும். வேறொரு அடுப்பில் நெய்யை சூடாக்கிக்கொள்ளவும். சர்க்கரை கரைந்து முத்து பாகு பதம் வந்தவுடன் ஒரு கை கடலை மாவு, சிறிது சூடான நெய் என ஒன்று மாற்றி மாற்றி சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்கவும். கலவை பூத்து (பொற பொற என்று) வருகையில் இறக்கி, நெய் தடவிய டிரேயில் கொட்டி, சிறிது சூடாக இருக்கையில் வில்லைகள் போடவும்.
குறிப்பு: கலவையில் சிறிது சமையல் சோடா சேர்த்தால், கூடு கூடாக (தேன் கூடுபோல்) மைசூர்பாகு வரும்.

காராபூந்தி
தேவையானவை: வீட்டில் அரைத்த கடலை மாவு - 200 கிராம், அரிசி மாவு - 2 டீஸ்பூன், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கடலை மாவு, உப்பு, அரிசி மாவை ஒன்றுசேர்த்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு போல் கரைக்கவும். எண்ணெயை சூடாக்கி, பூந்தி கரண்டியில் மாவை விட்டு, எண்ணெயில் விழும்படி தேய்த்து சிவக்க பொரித்துக் கொள்ளவும். இத்துடன் பொரித்த வேர்க்கடலை, மிள காய்த்தூள் சேர்க்கவும். கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து நன்கு கசக்கி இந்தக் கலவையுடன் சேர்ந்து நன்றாக குலுக்கிவிட்டால், மொறுமொறு காராபூந்தி தயார். இதை காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம்.

இஞ்சி முரப்பா
தேவையானவை: சுக்குப் பொடி - 50 கிராம், சர்க்கரை - 100 கிராம், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: சர்க்கரையில் சிறிதளவு நீர்விட்டு கரைத்து கொதிக்கவிடவும். பாகு பூத்து வருகையில் சுக்குப் பொடி, நெய் விட்டு நன்கு கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி, வில்லைகள் போடவும்.
குறிப்பு: சுக்குப் பொடி கடைகளில் கிடைக்கும். கிடைக்காதபட்சத்தில் சுக்கு வாங்கி, நன்கு நசுக்கி, மிக்ஸியில் பொடித்து, சலித்து உபயோகப்படுத்தவும். பட்சணங்கள் அதிகமாக சாப்பிடும்போது ஏற்படும் வாயுத்தொல்லைக்கு இது நல்ல நிவாரணம் அளிக்கும்.

பாம்பே காஜா
தேவையானவை: மைதா மாவு - 150 கிராம், சர்க்கரை - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - கால் கிலோ, கலர் கொப்பரைத் துருவல் - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, கேசரி கலர் - சிறிதளவு.
செய்முறை: மைதா, உப்புடன் நீர் சேர்த்து கெட்டியாக பூரி மாவு போல் பிசைந்து மெல்லியதாக சிறிய அப்பளம் போல் இடவும். இதை பாதியாக மடித்து, மீண்டும் அதை பாதியாக மடித்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சர்க்கரையில் சிறிதளவு நீர் விட்டு, இரட்டை கம்பி பதத்தில் பாகு காய்ச்சி, கேசரி கலர், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். பொரித்த காஜாவை இதில் அழுத்தி தோய்த்து எடுத்து தட்டில் வைத்து, கலர் கொப்பரை தூவவும்.

மோகன் தால்
தேவையானவை: கடலை மாவு - 100 கிராம், சர்க்கரை - 200 கிராம், சர்க்கரையில்லாத கோவா - 50 கிராம், நெய் - முக்கால் கப், வறுத்த முந்திரி -  சிறிதளவு, குங்குமப்பூ - சில இதழ்கள்
செய்முறை: நெய்யை சூடாக்கி கடலை மாவு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வறுத்து, கோவாவை உதிர்த்து சேர்க்கவும். சர்க்கரையில் 50 மில்லி நீர் விட்டு ஒரு கம்பி பதத்தில் பாகு காய்ச்சி... கடலை மாவு - கோவா கலவையை சேர்த்து நன்கு கிளறவும். ஓரங்களில் ஒட்டாது வரும்போது இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி,  வறுத்த முந்திரி, குங்குமப்பூவால் அலங்கரித்து விரும்பிய வடிவில் வில்லைகள் போட... மோகன் தால் ரெடி!
குறிப்பு: செய்முறை மைசூர்பாகு போல் இருப்பினும், கோவா சேர்ப்பதனால் மிகவும் சாஃப்ட்டாக இருக்கும் மோகன் தால்.

கோதுமை அல்வா
தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், சர்க்கரை - ஒன்றரை கப், கேசரி கலர் - சிறிதளவு, நெய் - 100 கிராம், எண்ணெய் - 3 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரி, வெள்ளரி விதை - தலா ஒரு டீஸ்பூன், பால் - ஒரு கப்
செய்முறை: நெய் - எண்ணெயை ஒன்றுசேர்க்கவும். கோதுமை மாவுடன் கேசரி கலர், பால், சிறிதளவு நீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். சர்க்கரையில் அரை கப் நீர்விட்டு கரைத்து கொதிக்கவிடவும். நுரை பொங்கி வருகையில் கரைத்த கோதுமை மாவு சேர்த்து கைவிடாது கிளறவும். அவ்வப்போது நெய் - எண்ணெய் கலவைவிட்டுக் கிளறி, ஒட்டாத பதம் வரும்போது இறக்கி, ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் தடவிய தட்டி கொட்டி, மேலே வறுத்த முந்திரி,  வெள்ளரி விதையால் அலங்கரிக்கவும். ஆறியபின் துண்டுகள் போடவும்.

தேன்குழல்
தேவையானவை: பச்சரிசி (தண்ணீரில் கழுவி, நிழலில் உலர்த்தியது) - 400 கிராம், முழு உளுந்து - 100 கிராம் (சிவக்க வறுக்கவும்), சீரகம் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - அரை கிலோ.
செய்முறை: அரிசியுடன் வறுத்த உளுந்து சேர்த்து மெஷினில் கொடுத்து அரைத்து சலிக்கவும். மாவுடன் உப்பு, பெருங்காயத்தூள், சீரகம், ஒரு கரண்டி சூடான எண்ணெய் விட்டு, சிறிதளவு நீரும் சேர்த்துப் பிசைந்து, தேன்குழல் பிடியில் போட்டு சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.

பாதாம் டிலைட்
தேவையானவை:  மைதா மாவு - 200 கிராம், பாதாம் துருவல் - 100 கிராம் (தோல் நீக்கி துருவியது), பொடித்த சர்க்கரை - 75 கிராம், கொப்பரைத் துருவல் - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - அரை கிலோ, நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: மைதா, உப்பு, நெய் ஆகியவற்றை ஒன்றுசேர்த்து, நீர்விட்டு, சப்பாத்தி மாவு போல் கெட்டியாக பிசையவும். பாதாம் துருவல், தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், பொடித்த சர்க்கரை ஆகியவற்றை நன்கு கலந்து பூரணம் தயாரிக்கவும். பிசைந்த மைதாவை சிறிய பூரிகளாக இட்டு நடுவில் ஒரு டீஸ்பூன் பாதாம் பூரணம் வைத்து நன்கு குவித்து உருட்டி, மீண்டும் பூரியாக இட்டு, சூடான எண்ணெயில் (மிதமான தீயில்) பொரித்து எடுக்கவும்.

மகிழம்பூ முறுக்கு
தேவையானவை: பச்சரிசி (தண்ணீர் விட்டு களைந்து, நிழ லில் உலர்த்தியது) - 300 கிராம், பாசிப்பருப்பு - 100 கிராம், கடலைப்பருப்பு - 50 கிராம், உப்பு - தேவையான அளவு, எண் ணெய் - கால் கிலோ, பெருங் காயத்தூள் - சிறிதளவு, காய்ச்சிய எண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை:  பாசிப்பருப்பு, கடலைப்பருப்பை சிவக்க வறுத்து, ஆறவிட்டு, அரிசியுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். இத்துடன் காய்ச்சிய எண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, தேவையான நீர் விட்டு பிசையவும். மாவை முள்ளு முறுக்கு அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் முறுக்காக பிழியவும். சிவந்த பின் எடுக்கவும்.

சீப்பு ரோல்ஸ்
தேவையானவை: பச்சரிசி (தண்ணீர் விட்டு களைந்து, நிழலில் உலர்த்தியது) - 300 கிராம், பாசிப்பருப்பு, பொட்டுக்கடலை - தலா 50 கிராம், தேங்காய்ப்பால் - கால் கப், வெண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த் தூள் - தேவையான அளவு, தேங்காய் எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: பாசிபருப்பை வறுத்து, அரிசி, பொட்டுக்கடலையுடன் சேர்த்து மாவாக்கிக்கொள்ளவும். மாவுடன் வெண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துப் பிசிறவும். பிறகு, தேங்காய்ப்பால், தேவையான நீர் விட்டுப் பிசையவும். நெல்லிக்காய் அளவு மாவு எடுத்து சிப்ஸ் தேய்க்கும் கட்டை / எவர்சில்வர் சிப்ஸ் கட்டரின் பின்புறம் (வரிவரியாக இருக்கும்) மாவை அழுத்தி தேய்த்து உருட்ட, சங்கு போல் சுருண்டு வரும். இதை சூடான எண்ணெயில் பொரித்து எடுத்தால்.. மணம் மிக்க, ருசியான சீப்பு ரோல்ஸ் தயார். சோழி வடிவத்தில் இருக்கும் இது, சீப்பு சீடை என்றும் அழைக்கப்படுகிறது.

ஸ்பெஷல் ஸ்வீட் மிக்ஸர்
தேவையானவை: கெட்டி அவல் - 200 கிராம், பொடித்த சர்க்கரை - 3 டீஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம் - தலா 25 கிராம், வறுத்த வேர்க்கடலை - 2 டீஸ்பூன், நறுக்கிய கொப்பரைத் துண்டுகள் - சிறிதளவு (நெய்யில் வறுக்கவும்),  எண் ணெய் - 250 கிராம், நெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: அவலை சுத்தம் செய்து, எண்ணெயில் (நிறம் மாறாது) பொரித்து, டிஷ்யூ பேப்பரில் போட்டு எண்ணெய் நீக்கவும். 2 டீஸ்பூன் நெய்யில் பொடித்த சர்க்கரையை கரையவிட்டு அடுப்பை அணைத்து, அவல் உள்ளிட்ட மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு கிளற... ஸ்பெஷல் ஸ்வீட் மிக்ஸர் ரெடி.
குறிப்பு:  நெய் - சர்க்கரை கலந்த சூடான கலவையில் மற்றவற்றைப் போட்டால்தான் இனிப்பு சுவை நன்கு கிடைக்கும். இல்லாவிட்டால், மிக்ஸர் அவ்வளவு இனிப்பாக இருக்காது.

ஜாங்கிரி
தேவையானவை: முழு உளுந்து - 200 கிராம், அரிசி - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - 300 கிராம், கேசரி கலர் அல்லது மஞ்சள் ஃபுட் கலர் - சிறிதளவு, ஏலக்காய் எசன்ஸ் அல்லது ரோஸ் எசன்ஸ் - சில துளிகள், சீவிய முந்திரி - சிறிதளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை: உளுந்தை களைந்து அரிசியுடன் அரை மணி ஊறவிட்டு கிரைண்டரில் பொங்க பொங்க அரைத்து (கெட்டியாக), ஃபுட் கலர் சேர்க்கவும். சர்க்கரையுடன், அது கரையும் அளவு நீர் விட்டு, பிசுக்கு பதத்தில் பாகு காய்ச்சி, அகலமான பேசின் அல்லது தாம்பாளத்தில் ஊற்றி, எசென்ஸ் சேர்க்கவும்.
துணி / பால் கவரில் சிறிய துளையிட்டு மாவு நிரப்பி, சூடான எண்ணெயில் ஜாங்கிரியாக பிழிந்தெடுத்து, ரெடியாக இருக்கும் சர்க்கரைப் பாகில் சேர்த்து, 10 நிமிடம் ஊறிய பின் எடுத்துவிடவும். சீவிய முந்திரி கொண்டு அலங்கரிக்கவும்.

ரவா லாடு
தேவையானவை: வறுத்துப் பொடித்த ரவை  - கால் கிலோ, பொடித்த சர்க்கரை - கால் கிலோ, நெய் - 200 கிராம், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை - சிறிதளவு.
செய்முறை: நெய் தவிர பிற பொருட்களை கலந்து, நெய்யை உருக்கி சூடாக விட்டு உருண்டைகள் பிடிக்கவும்.

ஓமப்பொடி
தேவையானவை: கடலை மாவு (கடலைப்பருப்பை வெயிலில் உலர்த்தி மாவாக்கியது) - அரை கிலோ, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள், உப்பு - தேவையான அளவு, பச்சரிசி மாவு - 100 கிராம், ஓமம் - 2 டீஸ்பூன் (மிக்ஸியில் நீர்விட்டு அரைத்து வடிகட்டவும்), எண்ணெய் - அரை கிலோ.
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் (எண்ணெய் நீங்கலாக) சிறிது நீர் விட்டு பிசைந்து, ஓமப்பொடி அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.
குறிப்பு: விருப்பப்பட்டால், சிறிதளவு மிளகாய்த்தூள்  /  மிளகுத்தூள் சேர்த்து செய்யலாம்.

டூ இன் ஒன் லட்டு
தேவையானவை: பொட்டுக்கடலை மாவு - 100 கிராம், பாசிபருப்பு - 100 கிராம் (வறுத்து அரைக்கவும்), பால் பவுடர் - 50 கிராம், பொடித்த சர்க்கரை - 200 கிராம், நெய் - 150 கிராம், வறுத்த முந்திரி - சிறிதளவு, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.
செய்முறை: நெய் தவிர  மற்ற பொருட்களை நன்கு கலந்து, நெய்யை உருக்கி சூடாக விட்டு விரும்பிய அளவில் லட்டுகள் பிடிக்கவும்.

டபுள் கலர் மைதா கேக்
தேவையானவை: மைதா - 150 கிராம், சர்க்கரை - 250 கிராம், நெய் அல்லது வனஸ்பதி - 100 கிராம், பச்சை ஃபுட் கலர் - சிறிதளவு, வெனிலா எசென்ஸ் - சில துளிகள், பால் பவுடர் - 50 கிராம்,
செய்முறை: நெய் (அ) வனஸ்பதியை வாணலியில் நன்கு சூடாக்கிக்கொள்ளவும். மைதா, பால் பவுடரை சேர்த்து நன்கு சலித்து, உருக்கிய நெய் / வனஸ்பதியில் விட்டு, இட்லி மாவு பதத்தில் தயாரித்துக்கொள்ளவும். இதை இரண்டு சரிபாகமாக பிரிக்கவும். சர்க்கரையில் பாதி அளவு எடுத்து சிறிதளவு நீர்விட்டுக் காய்ச்சி, நன்கு நுரைத்து வருகையில் பாதி மைதா மாவு கலவை சேர்த்து நன்கு கிளறவும். இது இறுகி வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டி பரப்பவும்.
மீதி சர்க்கரையுடன் சிறிதளவு நீர் விட்டு, பச்சை ஃபுட் கலர்  சேர்த்து நுரைத்து வரும்போது, மீதி உள்ள மைதா கலவை சேர்த்து நன்கு கிளறி, இறுகும்போது வெனிலா எசென்ஸ் சேர்க்கவும். இதை நெய் தடவிய தட்டில் இருக்கும் மைதா கலவை மீது நன்கு பரவலாக சேர்த்து, சமன் செய்து, லேசாக சூடு இருக்கையில் விரும்பிய வடிவில் வில்லைகள் போடவும்.

கேஷ்யூ ஃப்ரை
தேவையானவை: பாதியாக இருக்கும் முந்திரி - 200 கிராம், கடலை மாவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு (சேர்த்து) - அரை கப், ஒன்றிரண்டாக நசுக்கிய இளம் இஞ்சி - பச்சை மிளகாய் (சேர்த்து) - ஒரு டீஸ்பூன், இளம் கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, நெய் - 2 டீஸ்பூன், உப்பு - சிறிது, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - கால் கிலோ.
செய்முறை: ஒரு பெரிய பேஸினில் மாவு வகைகள், முந்திரி, கறிவேப்பிலை, உப்பு, மிளகாய்த்தூள், நசுக்கிய இஞ்சி - பச்சை மிளகாய், உருக்கிய சூடான நெய் சேர்த்து,  சிறிதளவு நீர் தெளித்துப் பிசிறவும் (பிசையக் கூடாது). எண்ணெயை சூடாக்கி, மாவை பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு, சிவக்க பொரித்து எடுக்கவும்.

பாதுஷா
தேவையானவை: மைதா - 200 கிராம், சர்க்கரை - 300 கிராம், உப்பு, சமையல் சோடா - தலா ஒரு சிட்டிகை, எண்ணெய் - கால் கிலோ, நெய் - ஒன்றரை டீஸ்பூன், பால் - ஒரு டீஸ்பூன், கலர் கொப்பரை துருவல் - சிறிதளவு,  ரோஸ் எசன்ஸ் - சில துளிகள்.
செய்முறை:  உப்பு, சமையல் சோடாவை ஒன்றரை டீஸ்பூன் நெய்யில் நன்கு நுரைக்க தேய்த்து, இதில் மைதா மாவு, சிறிதளவு நீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து, பெரிய எலுமிச்சை அளவு மாவு எடுத்து, தட்டி, சூடான எண்ணெயில் (மிதமான சூட்டில்) பொரித்தெடுக்கவும். சர்க்கரையில் 50 மில்லி நீர் விட்டு சூடாக்கி, நுரைக்கையில் பால் விட்டு அழுக்கு நீக்கவும். பிசுக்கு பதத்துக்கு பாகு வந்ததும் எசன்ஸ் சேர்த்து  இறக்கவும். பொரித்த பாதுஷாவை பாகில் முக்கி எடுத்து,  கலர் கொப்பரை துருவல் தூவவும். கலர் கொப்பரை கிடைக்காவிட்டால் முழு முந்திரியை சீவி அலங்கரிக்கலாம்.

பாதாம் மில்க் அல்வா
தேவையானவை: பாதாம் பருப்பு - 100 கிராம், பால் - 100 மில்லி, சர்க்கரை - 150 கிராம், பாதாம் எசன்ஸ் - சில துளிகள், மஞ்சள் ஃபுட் கலர் - அரை சிட்டிகை, நெய் - 50 கிராம்.
செய்முறை: பாலை கொதிக்கவிட்டு, ஆறவைக்கவும். பாதாம் பருப்பை 2 மணி நேரம் ஊறவிட்டு, தோல் நீக்கி, பாலுடன் சேர்த்து விழுதாக அரைக்கவும். அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து பாதாம் - பால் விழுது, சர்க்கரை, ஃபுட் கலர் சேர்த்து கரையவிடவும்.  அவ்வப்போது நெய் சேர்த்துக் கிளறி, கலவை ஒட்டாத பத்தில் வரும்போது பாதாம் எசன்ஸ் சேர்த்து இறக்கவும்
குறிப்பு: அளவு அதிகமாக தேவைப் பட்டால், சிறிதளவு வறுத்த வேர்க்கடலை யையும் பாலுடன் ஊறவிட்டு அரைத்து சேர்த்துச் செய்யலாம்.

காரா சேவ்
தேவையானவை: கடலை மாவு - 200 கிராம், பச்சரிசி மாவு - 50 கிராம், மிளகுத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, ஓமம் - சிறிதளவு, எண்ணெய் - கால் கிலோ, சமையல் சோடா - ஒரு சிட்டிகை.
செய்முறை: கடலை மாவு, பச்சரிசி மாவு, மிளகுத்தூள், உப்பு, ஓமம் ஆகியவற்றுடன் 2 டீஸ்பூன் காய்ச்சிய எண்ணெய், ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்து நீர்விட்டு கெட்டியாக பிசையவும். எண்ணெயைச் சூடாக்கி, மாவை காராசேவ் கரண்டியில் போட்டு எண்ணெயில் விழும்படி தேய்த்து, பொரித்து எடுக்கவும்.
இதன் கலர் சிவக்காது மஞ்சளாகத்தான் இருக்கும். மிளகாய்த்தூள் சேர்த்தால் காராசேவ் சிவக்கும்.

பந்தர் லட்டு  
தேவையானவை: கடலை மாவு - 200 கிராம், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், நெய் - 100 கிராம், பொடித்த சர்க்கரை - 150 கிராம், எண்ணெய்  - பொரிக்கத் தேவையான அளவு, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரி - சிறிதளவு, உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை: கடலை மாவு, அரிசி மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து, நீர் விட்டு பிசைந்து முறுக்கு அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழியவும். முக்கால் பாகம் வெந்து வருகையில் எடுத்து ஆறவிட்டு மிக்ஸியில் பொடி செய்யவும். நெய்யை சூடாக்கி பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, பொடித்த முறுக்கு சேர்த்துக் கலந்து, உருண்டை பிடிக்கவும்.
ஆந்திராவில் உள்ள பந்தர் எனும் ஊர் இந்த லட்டுக்கு மிகவும் பிரசித்தம் பெற்றது.

டிரை ஃப்ரூட் அல்வா
தேவையானவை: விதை நீக்கிய பேரீச்சை - 100 கிராம், கர்ஜூர் - 8 (விதை நீக்கியது),  நெய் - 100 கிராம், எண்ணெய் - 50 மில்லி, சர்க்கரை - 250 கிராம், டூட்டி ஃப்ரூட்டி - 50 கிராம், முந்திரி, திராட்சை - தலா 25 கிராம், வெள்ளரி விதை - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: பேரீச்சை, கர்ஜூர் இரண்டையும் முதல் நாள் இரவே மூழ்கும் அளவு நீர் விட்டு ஊறவைத்து, மறுநாள் அந்த நீருடன் நைஸாக அரைக்கவும். நெய் - எண்ணெயை ஒன்றாக சேர்க்கவும். வாணலியில் சர்க்கரை, அரைத்த விழுது சேர்த்து கிளறவும் (முதலில் அது இளகும். பயப்பட வேண்டாம்). அவ்வப்போது நெய் - எண்ணெய் கலவை சேர்த்து நன்கு கிளறவும். ஒட்டாமல் வரும்போது முந்திரி, திராட்சை, வெள்ளரி விதை, டூட்டி ஃப்ரூட்டி சேர்த்து இறக்கவும்.

அசோகா
தேவையானவை: பாசிப்பருப்பு (மசிய வேகவிட்டது) - 100 கிராம், கோதுமை மாவு - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 200 கிராம், நெய் - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, வறுத்த முந்திரி, திராட்சை - சிறிதளவு, பால் பவுடர் - 3 டேபிள்ஸ்பூன்
செய்முறை:  சிறிதளவு நெய்யில் கோதுமை மாவை சிவக்க வறுத்து, பால் பவுடர் சேர்த்து வைத்துக்கொள்ளவும். அடிகனமான வாணலியில் சர்க்கரையை சேர்த்து, சிறிதளவு நீர் விட்டு, கரைந்தவுடன் வேகவைத்த பாசிப்பருப்பு, கோதுமை மாவு கலவையைச் சேர்த்து நன்கு கிளறவும். ஒட்டாமல் இருக்க நெய் ஊற்றிக்கொண்டே கிளறவும். கலவை திரண்டு வரும்போது ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும். நன்கு கிளறி இறக்கிப் பரிமாறவும்.
தொகுப்பு: பத்மினி 
படங்கள்: எம்.உசேன் 
ஃபுட் டெகரேஷன்: 'செஃப்’ ரஜினி

ஆச்சி கிச்சன் ராணி
நவதானிய அப்பம்
தேவையானவை:  நவதானிய மாவு - ஒரு கப், ரவை - ஒரு கப், ஆச்சி பாதாம் மிக்ஸ் - 2 டேபிள்ஸ்பூன், பால் -  ஒரு கப், சர்க்கரை - ஒரு கப், எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு.
செய்முறை: நவதானிய மாவு, ரவை, சர்க்கரை, பால் எல்லாவற்றையும் கட்டி இல்லாமல் கரைத்து, அத்துடன் ஆச்சி பாதாம் மிக்ஸ் பவுடரையும் கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, ஆப்பச்சட்டியில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி, மாவு விட்டு சின்னச் சின்ன அப்பங்களாக சுட்டு எடுத்து, மேலே சிறிதளவு சர்க்கரை  தூவிப் பரிமாறவும்.
அப்பம் சாஃப்ட்டாக இருக்க வேண்டு மானால், ஒரு வாழைப்பழத்தை மசித்து மாவில் சேர்க்கலாம்.
- தீபா நாராயண், மகாராஷ்ட்ரா
படம்: ஆ.முத்துக்குமார்

 நன்றி அவள் விகடன் 

நவக்கிரகத் தோஷம் போக்கும் தலங்கள்

நவக்கிரகத் தோஷம் போக்கும் தலங்கள்
நவக்கிரகத் தோஷம் போக்கும் தலங்கள்1. சூரியன் - சூரியனார் கோவில்
2. சந்திரன் - திங்களூர்
3. செவ்வாய் - வைத்தீஸ்வரன் கோவில்
4. புதன் - திருவெண்காடு
5. வியாழன் - ஆலங்குடி
6. சுக்கிரன் - கஞ்சனூர்
7. சனீஸ்வரன் - திருநள்ளாறு
8. ராகு - திருநாகேஸ்வரம்
9. கேது - திருக்கீழப்பெரும்பள்ளம்

உடல் இளமை பெறும்.

பயனுள்ள இயற்கை மருத்து குறிப்புகள்
• தண்ணீரை நன்கு வேக வைத்து வெதுவெதுப்பாக இருக்கும் நிலையில் சிறிது உப்பை போட்டு, அதை நன்கு கலக்கி கொள்ளவும்.
பின்பு அதனை மூக்கின் அருகில் வைத்து ஆழமாக உறிஞ்ச வேண்டும். அந்த நீரவி மூக்கினுள் பரவி வேண்டும். இதன் மூலம் மூக்கடைப்பு எளிதாக நீங்குவதுடன், ஜலதோஷத்தை கட்டுப்படுத்த முடியும்.
• இஞ்சி துவையல், பச்சடி செய்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும். இஞ்சி சாற்றில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.
இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறுசுறுப்பு ஏற்படும். இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம், இரைச்சல் தீரும். காலையில் இஞ்சி சாற்றில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்தம், தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடல் இளமை பெறும்.

சனிதோஷம் நீங்கும்

சனீஸ்வர பகவானுக்கு அதிதேவதையாக எமன் விளங்குவதால், அவரை வழிபட்டால் சனிதோஷம் நீங்கும் என்பதால், கீழ்க்கண்ட ஆலயங்களில் எம பகவானை வழிபட்டால், சனீஸ்வரர் அருள் கிட்டும்.

ஸ்ரீவாஞ்சியம்:

கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் பஸ்சில் சென்று, குடவாசல் பஸ் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து குடவாசல், நன்னிலம் போகும் பஸ்சில் சென்றால் இத்திருலத்தை அடையலாம். இது காசிக்கு நிகரான திருத்தலமாகும். பல சிறப்புகளை உடைய திருத்தலம் இது.

இங்கு எம பகவானுக்குத் தனி சந்நிதி உள்ளது. எம பகவான் ஈசனுக்காக வாகனமாக மாறிய உருவமும் உள்ளது. இங்கு இறைவனையும் அம்பாளையும் வழிபாடு செய்து, குப்த கங்கை, எம தீர்த்தத்தில் நீராடி எமபகவானுக்கு அபிஷேகமும், ஆராதனையும் செய்து வழிபட்டால் சனி பகவான் அருள் கிட்டி, சனிதோஷ பரிகார நிவர்த்தி ஏற்படும்.

திருப்பைஞ்சீலி:

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து டோல்கேட், மண்ணச்சநல்லூர் வழியாக 19 கி.மீ. தூரத்தில் உள்ளது இத்திருத்தலம். பஸ் வசதி உள்ளது. இவ்வாலயத்தில் எமனுக்கு தனி சன்னதி உள்ளது. சனிக்கிழமைகளில் இவரை வழிபட்டு பரிகாரம் செய்ய சனி பகவான் அருள்பெறலாம்.

தருமபுரம்:

காரைக்காலில் இருந்து திருநள்ளாறு செல்லும் பாதையில் உள்ளது. மார்க்கண்டேயரின் உயிரைப் பறித்த பிழை நீங்க எமன் (தருமன்) வழிபட்டத் திருத்தலம் இது. தருமன் (எமன்) வழிபட்டதால் இவ்வூர் தருமபுரம் ஆயிற்று.

எனவே திருநள்ளாறு வந்து சனி பரிகாரம் செய்து போகின்றவர்கள், இத்திருத்தலம் வந்து வழிபட்டு போவதும் சிறந்த பலனையும், பரிகார நிவர்த்தியை அளிக்கும்.

குபேர பூஜையால் செல்வம் பெருகும்

முதலில் சிறிது அரிசி மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த மாவினால் மேலே உள்ளது போல 9 குபேர கட்டங்களை ஒரு மரப்பலகையில் போடுங்கள். பின்னர் அந்தக் கட்டங்களுக்குள் அரிசி மாவினால் எண்களை எழுத வேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும் உள்ள எண் மீதும், ஒரு ரூபாய் நாணயத்தைத் தெரியும் வகையில் வைக்க வேண்டும்.

பின், அந்த மரப்பலகை எதிரே லட்சுமி குபேர படத்தை வைக்கவும், நாணயத்தின் மீது மஞ்சள், குங்குமம் வைத்து, குபேர சுலோகம் சொல்ல வேண்டும். அவ்வாறு சுலோகம் சொல்லும் போது, ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு பூவை வைக்கவும், மீதமிருக்கும் பூவை குபேர படத்தின் மீது போடவும். இந்தப் பூஜையை மிகுந்த பய பக்தியுடன் செய்ய வேண்டும்.

பூஜை முடிந்த பின்னர், கட்டங்களில் உள்ள நாணயங்களை எடுத்து உங்கள் வீட்டு பீரோவிலோ அல்லது தொழில் செய்யும் இடத்திலோ, கல்லாப்பெட்டியிலோ வைத்துக் கொள்ள வேண்டும். இந்த குபேர பூஜையால் செல்வம் பெருகும். வறுமை அகலும்.

நட்சத்திர தீபம்

நட்சத்திர தீபம் என்பது தீபாவளி அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமைத் தினத்தில் இருந்து பவுர்ணமி வரை, அதாவது உத்தான தவாதசிக்குப் பிறகு வரும் பவுர்ணமி வரை தினமும் ஏற்ற வேண்டிய தீபம் ஆகும். தினமும் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு 27 தீபங்கள் ஏற்ற வேண்டும். வீட்டிற்குள் ஏற்றுவது கூடாது.

வீட்டிற்கு வெளியில்தான் ஏற்ற வேண்டும். வெளியில் துளசி பிருந்தாவனம் இருந்தால் பிருந்தாவனத்திற்கு முன்பு ஏற்றலாம். அல்லது திறந்த வெளி முற்றம் அல்லது திண்ணையில் ஏற்றலாம்.

வெளி முற்றம், திண்ணை அல்லது துளசி பிருந்தாவனத்தின் முன்பு போன்ற இடங்கள் எதுவும் சரியாக அமையவில்லை என்றால், நாம் வாசல் தெளித்துக் கோலம் போட்டுவிட்டு ஒரு தட்டிலோ அல்லது பலகையிலோ தீபங்கள் ஏற்றி வெளியில் வைக்கலாம். மாடியிலும் ஏற்றலாம்.

விளக்குகள் ஏற்றும் இடத்தை சுத்தம் செய்து தண்ணீர் தெளித்து செம்மண் கோலம் இட்டு அதன் மேல்தான் ஏற்ற வேண்டும். மண் அகல் விளக்குகளே போதும். பித்தளை, வெண்கலம் போன்ற விளக்குகளில்தான் ஏற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

ஆனால் எவர்சில்வர் விளக்கு கூடாது. இந்த தீபங்கள் நட்சத்திரங்கள் மறைவதற்கு முன் ஏற்ற வேண்டும். அதாவது வெளிச்சம் வந்து நட்சத்திரங்கள் மறைவதற்கு முன் ஏற்ற வேண்டும். ஆகையால் அதிகாலை சுமார் 4 மணியிலிருந்து 5 மணிக்குள் ஏற்ற வேண்டும்.

இந்த நட்சத்திர தீபம் என்று கூறப்படும் தீபம் தினமும் 27 ஏற்ற வேண்டும். தீபம் முடியும் பவுர்ணமி அன்றோ அல்லது சாத்யப் பட்ட சந்தர்பத்திலோ தீபதானம் கொடுக்க வேண்டும்.

நன்றி மாலைமலர்

கட்டாயம் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்

தீபாவளியன்று கட்டாயம் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்பது ஐதீகம். தலைக்கு எண்ணெய் தேய்ப்பதில் கூட சாஸ்திரங்கள் உண்டு. ஞாயிற்றுக்கிழமை எண்ணெய் தேய்த்து நீராடினால் மனவருத்தத்தையும், திங்கட்கிழமை உடலுக்கு புத்துணர்ச்சியையும், செவ்வாய்க்கிழமை உடல் நலக்குறைவையும், புதன்கிழமை செல்வத்தையும், வியாழக்கிழமை உடல் நலத்தையும், வெள்ளிக்கிழமை அதிக செலவையும், சனிக்கிழமை விரும்பியவற்றை அடைதலையும் அளிக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அந்த வகையில் இந்த ஆண்டு புதன்கிழமை தீபாவளி வருவதால் அன்று எண்ணெய் தேய்த்து குளிக்கும் பட்சத்தில் செல்வம் சேரும் என்பது ஐதீகமாகும். ஞாயிறு எண்ணெயுடன் புஷ்பங்களையும், செவ்வாய் சிறிது மண்ணையும், வெள்ளி கோசலத்தையும் சேர்த்துக்கொண்டு எண்ணெய் ஸ்நானம் செய்யலாம்.

மேலும் சஷ்டி, ஏகாதசி, துவாதசி, சதுர்த்தி, அஷ்டமி, பிரதமை, பவுர்ணமி, அமாவாசை ஆகிய திதிகளிலும் உத்தரம், கேட்டை, திருவோணம், திருவாதிரை ஆகிய நட்சத்திரங்களிலும் எண்ணெய் நீராடக்கூடாது என்றும் அவ்விதம் செய்ய நேரிட்டால் சிறிது நெய் கலந்து எண்ணெய் நீராடலாம் என்றும் அப்பயங்க ஸ்நானம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக அறநூல்களில் காலை 8.30 மணிக்கு முன்பும் மாலை 5.00 மணிக்கு பின்பும் எண்ணெய் தேய்த்து நீராடக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் தீபாவளியன்று மட்டும் அதிகாலை நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் நீராடுவது கட்டாயமாக செய்ய வேண்டுமென்றும் அவ்விதம் செய்யாவிடில் நரகத்தைக் கொடுக்ககூடிய பாவம் சேரும் என்றும் தர்ம சாஸ்திரம் கூறுகிறது.

தவிர நரக சதுர்த்தசியன்று அதிகாலையில் சூரியன் சந்திரன் இருவரும் பெரும்பாலும் சுவாதி நட்சத்திர சாரத்தில் சஞ்சரிப்பதால் இது மிகவும் புண்ணிய தினம் என்றும், அந்நாளில் எண்ணெய்த்தேய்த்து நீராடிப் புத்தாடை அணிந்து லட்சுமி நாராயணனைப் பூஜிப்பது சிறப்பான பலனைத்தரும் என்று விஷ்ணு புராணம் தெரிவிக்கிறது.

தீபாவளியன்று எண்ணெயில் லட்சுமி தேவியும் தண்ணீரில் கங்கா தேவியும் உறைகின்றனர். இதற்கு விஷ்ணு புராணத்தில் ஒரு வரலாறும் உண்டு. நரகாசுரனுடன் பகவான் போரில் இருந்தசமயம் அரக்கர்கள் லட்சுமி தேவியைக் கவர்ந்து செல்ல முயன்றனர். உடனே தேவி பகவான் போர் முடிந்து திரும்பும் வரை எரிந்து கொண்டிருந்த ஒரு தீபத்தில் மறைந்து விட்டதாக விஷ்ணு புராணம் கூறுகிறது.

இந்தப் புண்ணிய தினத்தில் தான் பாற்கடலில் தோன்றிய திருமகளை நாராயணன் திருமணம் செய்து கொண்டார். அப்போது தேவர்களுடன் யமதர்மராஜனும் பணிந்து போற்றினார்கள். இதை கண்ட லட்சுமி, யமனிடம் இப்பண்டிகையை முறையாக கடைப் பிடிப்பவர்களது வீட்டில் என் உத்தரவு இன்றி நீ பிரவேசிக்கக்கூடாது என்று உத்தரவிட்டாள்.

லட்சுமி தேவியின் அந்த உத்தரவை யமதர்மராஜனும் ஏற்றுக்கொண்டார். இதனால் லட்சுமி தேவி மகிழ்ந்து, இன்று உன்னையும் மனிதர்கள் ஆசாரத்துடன் சோபன அட்சதைகளால் பதினான்கு தர்ப்பணம் செய்து மகிழ்விப்பார்கள் என்று வரம் அளித்தாள். இதுவே தற்போது யமதர்ப்பண தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

எண்ணெய் தேய்த்து குளிப்பது உடல் ஆரோக்கியத்திற்கும் ஆயுளுக்கும் பலன் கொடுக்கும். தீபாவளிக்கு முதல் நாள் இரவு நல்லெண்ணெயில் மிளகாய், மிளகு, சீரகம், இஞ்சி, மஞ்சள் தட்டிப்போட்டு காய்ச்சி தயார் செய்து கொள்ள வேண்டும். மறுநாள் அதிகாலை தலை உடல் எல்லாம் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

மிளகாய் வாயுவை அடக்கும். மிளகு, சீரகம் ஜீரணத்துக்கு உதவும் இஞ்சி பித்தத்தை தணிக்கும். மஞ்சள் குளிர்ச்சியை தரும். தலையில் எண்ணெய்யை அழுந்த தேய்த்து சீயக்காய் தேய்த்து குளிப்பது உஷ்ணத்தை நீக்கி குளிர்ச்சி தரும்.

அதிகாலை நீராட வேண்டும் என்பதால் அன்று வெந்நீரில் நீராட வேண்டும். நீரினுள் ஆல் அரசு புரசு அத்தி மாவிலங்கம் பட்டை போட்டு சுடவைத்து அந்த மருத்துவ குணம் கொண்ட நீரில் ஸ்நானம் செய்து புத்தாடை அணிந்து பூஜை அறையில் தீபம் ஏற்றி இறைவனை வழிபட வேண்டும்.

குபேர பூஜை

குபேர பூஜை செய்ய நாளை மறுநாள் (வியாழக்கிழமை) ஐப்பசி மாத அமாவாசை மிகுந்த நல்ல நாள் ஆகும். அன்று மாலை 6 மணிக்கு மேல் குபேரனை நினைத்துப் பூஜை செய்வதால் செல்வம் பெருகும். குடும்பம் நலம் அடையும்.

குபேரனின் திருஉருவப் படத்திற்கு பூமாலை சாற்றி 12 அகல் விளக்கை ஏற்றி வைத்து பால் பாயசம் செய்து நெய்வேத்தியம் படைக்க வேண்டும். பூ அட்சதையைக் கையில் எடுத்துக் கொண்டு 12 முறை இந்த ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும்.

குபேரன் துதி :

வளம் யாவும் தந்திடுவாய் வைஸ்ரவணா போற்றி!
தனம் தந்து காத்திடுவாய் தனபதியே போற்றி!
குறைவில்லா வாழ்வாளிப்பாய் குபேரனே போற்றி!
உறைந்திடுவாய் நீ இங்கே உத்தமனே போற்றி!
சங்கநிதி, பதும நிதி சார்ந்து நிற்பாய் போற்றி!
மங்களங்கள் தந்து எமை மகிழ்விப்பாய் போற்றி!
பொங்கிடும் நலம் யாவும் உன்னருவே போற்றி!
தங்கிட செய்வாய் செல்வம் போற்றினோம் போற்றி! போற்றி!!

என்ற துதிகளைச் சொல்லி வணங்கிய பிறகு, தூப, தீப நைவேத்தியம் செய்ய வேண்டும். சாம்பிராணியைப் போட்டு, கற்பூரத்தைக் காட்ட வேண்டும்.

வாழைப்பழம், பசும்பால், பாயாசம் என்று உங்களால் முடிந்ததை நிவேதனம் செய்யலாம். குபேரனுக்கு உரிய ஸ்லோகம் அர்ச்சனைகளைச் செய்த பால் பாயசத்தை நெய்வேத்தியம் செய்த பின் கற்பூர ஆரத்தி எடுத்து, குங்குமத்தைக் கரைத்து அதையும் ஆரத்தி எடுத்து நிறைவு செய்ய வேண்டும்.

குடும்பத்தில் அனைவரும் இதில் கலந்து கொண்டு பூ அட்சதையைச் சேர்க்க வேண்டும். பூஜை செய்யும் முன் குபேரன் படத்தருகே வீட்டில் உள்ள காசு பணம், வெள்ளிப் பாத்திரங்கள், தங்க நகைகள் எல்லாவற்றையும் வைத்து அலங்கரிக்க வேண்டும். இந்த பொருள்களிலும் அட்சதையைச் சேர்த்து நமஸ்கரிக்க வேண்டும்.

அக்கம், பக்கம் உள்ளவர்களும் வந்து இதைப் பார்க்கச் சொல்லி அவர்களையும் அட்சதைப் போடச் சொல்லி அவர்களுக்குப் பால் பாயசத்தைக் கொடுத்து வெற்றிலை, பாக்கு, தாம்பூலம் தருதல் நல்லது. குபேரனுக்குப் பிடித்த பிரசாதம் பால் பாயசம். அதனால்தான் அன்று இதைச் செய்து நெய் வேத்தியம் செய்வது வழக்கம்.

பூஜை நிறைவுற்றதும் பூ, வெற்றிலை பாக்கு, பழத்தை சுமங்கலிகளுக்குக் கொடுக்க வேண்டும். தட்சணையை ஏழைகளுக்குத் தர வேண்டும். இப்படி முறைப்படி குபேரனைப் பூஜித்தால் உங்கள் வாழ்க்கையில் குறுக்கிடக்கூடிய இன்னல்கள், தடைகள் எல்லாவற்றையும் நீக்கி வளமும் நலமும் நம்மை வந்தடைய குபேரன் நிச்சயம் அருள்புரிவார்.

நன்றி மாலைமலர்