Tuesday, 21 October 2014

குபேர பூஜை

குபேர பூஜை செய்ய நாளை மறுநாள் (வியாழக்கிழமை) ஐப்பசி மாத அமாவாசை மிகுந்த நல்ல நாள் ஆகும். அன்று மாலை 6 மணிக்கு மேல் குபேரனை நினைத்துப் பூஜை செய்வதால் செல்வம் பெருகும். குடும்பம் நலம் அடையும்.

குபேரனின் திருஉருவப் படத்திற்கு பூமாலை சாற்றி 12 அகல் விளக்கை ஏற்றி வைத்து பால் பாயசம் செய்து நெய்வேத்தியம் படைக்க வேண்டும். பூ அட்சதையைக் கையில் எடுத்துக் கொண்டு 12 முறை இந்த ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும்.

குபேரன் துதி :

வளம் யாவும் தந்திடுவாய் வைஸ்ரவணா போற்றி!
தனம் தந்து காத்திடுவாய் தனபதியே போற்றி!
குறைவில்லா வாழ்வாளிப்பாய் குபேரனே போற்றி!
உறைந்திடுவாய் நீ இங்கே உத்தமனே போற்றி!
சங்கநிதி, பதும நிதி சார்ந்து நிற்பாய் போற்றி!
மங்களங்கள் தந்து எமை மகிழ்விப்பாய் போற்றி!
பொங்கிடும் நலம் யாவும் உன்னருவே போற்றி!
தங்கிட செய்வாய் செல்வம் போற்றினோம் போற்றி! போற்றி!!

என்ற துதிகளைச் சொல்லி வணங்கிய பிறகு, தூப, தீப நைவேத்தியம் செய்ய வேண்டும். சாம்பிராணியைப் போட்டு, கற்பூரத்தைக் காட்ட வேண்டும்.

வாழைப்பழம், பசும்பால், பாயாசம் என்று உங்களால் முடிந்ததை நிவேதனம் செய்யலாம். குபேரனுக்கு உரிய ஸ்லோகம் அர்ச்சனைகளைச் செய்த பால் பாயசத்தை நெய்வேத்தியம் செய்த பின் கற்பூர ஆரத்தி எடுத்து, குங்குமத்தைக் கரைத்து அதையும் ஆரத்தி எடுத்து நிறைவு செய்ய வேண்டும்.

குடும்பத்தில் அனைவரும் இதில் கலந்து கொண்டு பூ அட்சதையைச் சேர்க்க வேண்டும். பூஜை செய்யும் முன் குபேரன் படத்தருகே வீட்டில் உள்ள காசு பணம், வெள்ளிப் பாத்திரங்கள், தங்க நகைகள் எல்லாவற்றையும் வைத்து அலங்கரிக்க வேண்டும். இந்த பொருள்களிலும் அட்சதையைச் சேர்த்து நமஸ்கரிக்க வேண்டும்.

அக்கம், பக்கம் உள்ளவர்களும் வந்து இதைப் பார்க்கச் சொல்லி அவர்களையும் அட்சதைப் போடச் சொல்லி அவர்களுக்குப் பால் பாயசத்தைக் கொடுத்து வெற்றிலை, பாக்கு, தாம்பூலம் தருதல் நல்லது. குபேரனுக்குப் பிடித்த பிரசாதம் பால் பாயசம். அதனால்தான் அன்று இதைச் செய்து நெய் வேத்தியம் செய்வது வழக்கம்.

பூஜை நிறைவுற்றதும் பூ, வெற்றிலை பாக்கு, பழத்தை சுமங்கலிகளுக்குக் கொடுக்க வேண்டும். தட்சணையை ஏழைகளுக்குத் தர வேண்டும். இப்படி முறைப்படி குபேரனைப் பூஜித்தால் உங்கள் வாழ்க்கையில் குறுக்கிடக்கூடிய இன்னல்கள், தடைகள் எல்லாவற்றையும் நீக்கி வளமும் நலமும் நம்மை வந்தடைய குபேரன் நிச்சயம் அருள்புரிவார்.

நன்றி மாலைமலர்

No comments:

Post a Comment