Sunday, 17 November 2019

பிடிவாதக் குணம்

‘’பிடிவாதக் குணம்’’..

பிடிவாதம் மனநோயா? என்றால் “இல்லை” என்றும் சொல்ல முடியாது, “ஆம்” என்றும் சொல்ல முடியாது? அது ஒருவரின் வாழ்க்கை சூழலைப் பொறுத்தே அமைந்தே இருக்கும்.

“மனிதன் தனது மனநிலைகளை மாற்றிக் கொள்வதன் மூலம் தனது வாழ்க்கையை மாற்றி கொள்ளலாம் என்பதே எனது தலைமுறையின் மிகப் பெரிய கண்டுபிடிப்பாகும்” என்று சொல்கிறார் உளவியல் நிபுணர் வில்லியம் ஜேம்ஸ்..

பிடிவாத குணம் என்பது,ஒரு வலிமையான மனோபவம். தன் பிடிவாத குணத்தை வைத்துக் கொண்டு தான்
பலமுறை தோற்ற பின்பும்,வெற்றியை விரட்டிப் பிடித்தார் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன்.

’’எத்தனை துன்பங்கள் அடுக்கடுக்காக வந்தாலும் அகிம்சையை ஒருபோதும் கைவிட மாட்டேன் என்ற மோகன்தாசின் பிடிவாத குணம் தான் அவரை மகாத்மா காந்தி ஆக்கியது..

ஆராய்ச்சிக் கூடமே எரிந்து சாம்பலான நிலையிலும் இரவைப் பகலாக்கும் முயற்சியை ஒருபோதும் கைவிட மாட்டேன் எனும் பிடிவாத குணம் தான் தாமஸ் ஆல்வா எடிசனை, 1600 கண்டு பிடிப்புகளுக்கு சொந்தக்காரர் ஆக்கியது..

என்றாவது ஒரு நாள் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை நாம் மிதிப்பேன்’’எனும் பிடிவாதம் தான் ‘’யாக்’’ எருமைகளை மேய்த்துக் கொண்டு இருந்த டென்சிங்கை உலக வரலாற்றில் இடம் பெற வைத்தது..

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

இப்படி ஒவ்வொரு சாதாரண மனிதரின் லட்சியம் மீதான உறுதியான, கொள்கைப் பிடிப்புடன் கூடிய, தளராத முயற்சியின் பிடிவாத குணம் தான் அவர்கள் அனைவரையும் இன்னும் இந்த உலகத்தில் சிறந்தவர்களாக நிலை நிறுத்தியுள்ளது.

ஹிட்லர் போல, முசோலினி போல, இடி அமீன் போல, வியட்நாமில் அமெரிக்கா வாங்கிய அடிபோல, வீண் பிடிவாதத்திற்காகவும், வறட்டு கௌரவத்துக்காகவும் ஒரு சிலர் வரலாற்றில் இடம் பிடித்திருக்கலாம், 

ஆனால் அவை எல்லாம் வெறும் கருப்புப் பக்கங்களே!. எப்படி இருக்கக் கூடாது என்பதின் உதாரணம் மட்டுமே அவர்களும், அவர்களின் செயல்களும்.

சுயநல லாபத்திற்கும், வீணான கவுரவ செயலுக்கும், ஆணவப் பிடிப்பிலும் ஒருவர் தான் செய்வது தவறு என்று தெரிந்தும் அதை மாற்றித் திருத்திக் கொள்ளாமல் வீண் பிடிவாதம் பிடிப்பவர்கள் நிச்சயம் அடையாளம் தெரியாமல் அழிவார்கள்..

எதார்த்த மனித வாழ்க்கையில் இயல்பான மனநிலையை பெற்று வளமோடு வாழ்வோம்.

வாழ்க நலமுடன்.

No comments:

Post a Comment