எதிர்மறை சிந்தனைகளை தகர்த்தெறிய சில வழிகள்.
உங்கள் வெற்றிக்கும் முன்னேற்றத்திற்கும் பல கரங்கள் கைதட்டக் காத்திருக்கின்றன. உங்களுக்கான பதக்கங்களை நீங்கள் வாங்கும் போது பெருமைப் படவும் மகிழ்ச்சி அடையவும் இங்கு பலர் உள்ளனர் என்ற எண்ணங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
எதிர்மறை எண்ணங்களுக்கு உயிர் கிடையாது். அதை நீங்கள் தீண்டாமல் இருக்கும் வரை !
மனது துன்பப்படும் பொழுது ஒரு சாய்வு நாற்காலி கேட்கும். அப்பொழுது அதை நேர்மறை எண்ணங்கள் என்னும் நாற்காலியில் அமர வையுங்கள். எதிர்மறை எண்ணங்கள் என்னும் ஒளியை அணைத்து விடுங்கள்.
ஒவ்வொரு மனிதனின் நேர்மறை எண்ணங்கள் என்னும் நாற்காலி பல நரம்புகளால் பின்னப்பட்டிருக்கும். உங்களுக்கான நாற்காலியை நீங்களே தேர்வு செய்து அமருங்கள். சிலருக்கு ஊக்கம் தரும் பாடல்களாகவும், சிலருக்கு உறவுடன் உரையாடுதலாகவும், சிலருக்குப் பிடித்த செயலை செய்வது எனப் பல இருக்கலாம் .
ஆங்கிலத்தில் " Everything is a state of Mind " என்பார்கள். உங்கள் மனநிலையயே முடிவு செய்யும் எதை நீர்த்துப் போகச் செய்வது எதை நீண்டு வாழ செய்வது என்று.
எதிர்மறை எண்ணங்களுக்கான காரணிகளைக் கண்டு கொள்ளுங்கள்.
கிளையை வெட்டிப் பயனில்லை, வேரை ஆராயுங்கள் !
சில பொதுவான காரணங்கள்.
திட்டமிடுதலில் சிக்கல்.
ஒரு கட்டுக்குள் அடங்காமல் அலைப்பாயும் எண்ணங்களே பின் மாற்றம் அடைந்து நம்மால் முடியுமா சாத்தியமா என்ற வினாவாக உருமாறி எதிர்மறை எண்ணங்களுக்கு வழி வகுக்கும். அதைத் தவிருங்கள் !
திட்டமிடுதல் உங்களை ஒரு நேர் கோட்டில் பயணிக்க உதவும். இடர்பாடுகளுக்கு இடறி விட நீங்கள் என்ன காற்றில் பறக்கும் இலைகளா? இலக்குடன் இறுக்கப் பற்றி பயணியுங்கள்.
வீண் அச்சம்.
பல நேரங்களில் நம் அச்சமே பல எதிர்மறை எண்ணங்களைத் தூண்டி விடும், இப்படி ஆகிவிடுமோ, இப்படி நினைத்திருப்பாரோ என்ற எதிர்மறை எண்ணங்களைத் தள்ளி வையுங்கள்.
அச்சத்தைத் தவிர்க்க சரியான வழி அதை ஆயுதமாக மாற்றுவதே...
அச்சத்தை வாய்ப்புகளாகப் பாருங்கள். உங்களுக்கு எதையோ நினைவூட்டுகிறது என்று நினைத்துக் கொள்ளுங்கள்.
எடுத்துக்காட்டுக்கு... தேர்வுகளுக்கு தயார் செய்யும் மாணவரா நீங்கள் ?உங்கள் உள்ளுணர்வு சொல்லும் அச்சத்தை எதிர்கொள்ளுங்கள். குறிப்பிட்ட பாடம் மறந்து விடுமோ என்று நினைப்பதை விட அதை வாய்ப்பாக எண்ணி அதை ஆழமாக புரிந்து வாசியுங்கள். பின்பு பாருங்கள் அச்சம் மறந்து விடும். பதில் நினைவில் வந்து விடும்.
குறுகிய சிந்தனை.
இது மிக முக்கியக் காரணியில் ஒன்று . ஒரு நிகழ்வுக்கு பல பார்வைகள் உண்டு என்பதை உணருங்கள். உங்கள் பிடியை தளர்த்திக் கொள்ளுங்கள். சில நேரங்களில் தளர்தல், வளர்தலுக்கு நல்ல ஊன்றுகோல்'.நீங்கள் நினைத்தது போலவே எல்லாம் நடக்க வேண்டும் என்று விரும்புவது மிகுந்த ஏமாற்றத்தையே பரிசளிக்கும்.
எதிர்பாரா அனுபவங்களை எதிர்பாருங்கள். பள்ளங்களில் வாழக் கற்றுக் கொள்ளுங்கள் !
அலுவலகம் செல்ல வேண்டிய முக்கியமான நாளில் திடீர் என்று பேருந்து தாமதமாக வந்தால் உடனே நொந்து கொள்ளாதீர்கள். அதை நீங்கள் முக்கியமானதாக கருதியிருந்தால் நீங்கள் முன்கூட்டியே வந்திருக்க வேண்டும்.
காரணிகள் இருக்கட்டும்.... வழிமுறைகளை காண்போம் !
1) நேர்மையைப் பழகுங்கள் !
சொல்லமைப்பு போலவே பொருளிலும் நேர்மைக்கும் நேர்மறை எண்ணங்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு .
"நேர்மறை எண்ணம் என்னும் குழந்தை நேர்மை என்னும் தாயின் கருவில் தான் பிறக்கிறது "
எது நேர்மை ?
தெரியாததை தெரியாது என ஒப்புக் கொள்ளுங்கள்
புரியாததை புரியவில்லை என்று ஒப்புக் கொள்ளுங்கள்.
பின் அவற்றை அறிந்து கொண்டு அதில் கவனம் செலுத்துங்கள்.அறிந்து கொள்வது முதல் படி பின் அதை அணுகுவது இரண்டாம் படி !
நினைவில் கொள்ளுங்கள். எவன் ஒருவன் தன்னை திருத்திக் கொள்ள முனைகிறானோ அவனே வாழ்ந்து கொண்டிருக்கிறான் . எல்லாம் பயிற்சியில் வந்து விடும். நம்புங்கள் !
2.பறவைப் பார்வை பாருங்கள்
ஒரு நிகழ்வை பல தளங்களில் வைத்து சிந்தியுங்கள்.பல புதிய வழி முறைகள் பிறக்கும். மாற்றங்களுக்கு வழி விடுங்கள்.
ஒரு செயலுக்கான வழிமுறைகளை புதுப் புது கோணங்களில் அணுகுங்கள். அயர்ச்சி நீங்கி புத்துணர்ச்சி பூக்கும்.
3) காத்திருக்கப் பழகுங்கள்
காலம் அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் என்பதை நம்புங்கள், உடனடி தீர்வுகளை எதிர்பார்த்து பின் சோர்ந்து எதிர்மறை எண்ணங்களில் விழுந்து விடாதீர்கள். காலக் கப்பல் உங்கள் இலக்கையும் கொண்டு சேர்க்கும் என்று நம்புங்கள்.
புதிய இலக்குகளை அடைவோம்.
No comments:
Post a Comment