Monday, 9 April 2018

வைகாசி மாதம் திருமணம் செய்யலாமா?

வைகாசி  மாதம் திருமணம் செய்யலாமா?
======================================
எதிர்வரும் வைகாசி மாதம் இரண்டு அமாவாசைகள் வருகின்றன. இரண்டு அமாவாசைகள் ஏற்படும் மாதம் மலமாதம் என்றும் அதில் திருமணம் முதலிய சுபகாரியங்கள் செய்யக்கூடாது என்றும் சில பஞ்சாங்கங்கள் குறிப்பிடுவதோடு அம்மாதத்தில் முகூர்த்தங்களும் கொடுக்கப்படவில்லை. ஆனால் நமது சபரி பஞ்சாங்கத்தில் அதற்கு விதிவிலக்கு உண்டு என்று சொல்லி வைகாசியில் முகூர்த்தங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது சில ஜோதிடர்கள் அந்த விதிவிலக்கிற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பது போல் பேசி வருகிறார்கள். அதுபற்றி விளக்கம் தருவதற்காகவே இந்தப்பதிவு.
-
மலமாதம் (அ) அதிமாதம் என்றால் என்ன?
======================================
-
ஒரு மாதத்தில் இரண்டு அமாவாசைகள் அல்லது இரண்டு பௌர்ணமிகள் ஏற்பட்டால் அதற்கு அதிமாதம் என்று பெயராகும். ஒருமுறை இவ்வாறு இரண்டு அமாவாசைகள் ஏற்பட்டால் அதற்குப்பின் 2 வருடம் 8 மாதம் 16 நாட்களுக்குப் பிறகு மீண்டும் இரண்டு அமாவாசைகள் ஏற்படும். இவ்வாறு இரண்டு அமாவாசைகள் ஏற்படும் மாதத்தில் சுபகாரியங்கள் செய்யக்கூடாது என்று சில பஞ்சாங்கங்கள் குறிப்பிடுகின்றன. உண்மையில் இதற்கான விதிகள் என்ன? விதிவிலக்குகள் ஏதேனும் உண்டா என்பதைப் பார்ப்போம்.
-
முஹூர்த்த நிர்ணயம் என்னும் காலவிதானம் என்னும் நூலில் சொல்லப்பட்டுள்ள விதிகள்.
-
1. ஒரு மாதத்தில் இரண்டு அமாவாசைகள் அல்லது இரண்டு பௌர்ணமிகள் ஏற்பட்டால் அதற்கு அதிமாதம் என்று பெயராகும். அதில் சுபகாரியங்கள் எதுவும் செய்யக்கூடாது. ஆனால் சித்திரை வைகாசி மாதங்களுக்கு இந்த தோஷம் இல்லை.
-
2. இரண்டு அமாவாசையோ அல்லது இரண்டு பௌர்ணமியோ ஏற்படும் மாதத்தில் ஏதேனும் ஒரு கிரகம் உச்சம் பெற்றால் அந்த மாதத்திற்கு மல மாத அதிமாத தோஷம் கிடையாது.
-
3.சூரியன் ஆட்சி உச்சம் பெற்றாலோ சுபக்கிரக நவாம்சத்தில் இருந்தாலோ அதிமாச மலமாச தோஷம் இல்லை.
-
மேலே சொல்லப்படுள்ள விதிகளில் இரண்டு விதிகள் வருகின்ற வைகாசி மாதத்திற்கு பொருந்தி வரும். இதில் முதல் விதியில் சொல்லப்பட்டுள்ளபடி அது வைகாசி மாதம் என்பதால் தோஷமில்லை. இந்த விதி காலவிதான பத்ததி 226 வது ஸ்லோகத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதன் நகல் (வடமொழி ஸ்லோகம் மற்றும் அதன் தமிழ் விளக்கம்) இங்கே கொடுத்திருக்கிறேன். மேலும் திரு.சி.ஜி.ராஜன் அவர்களால் உரை எழுதப்பட்ட காலவிதானம் நூலில் 195 வது பாயிண்டாக இந்த விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் நகலும் இங்கே இணைத்திருக்கிறேன்.
-
இரண்டாவது விதியில் சொல்லப்பட்டுள்ளபடி வைகாசி மாதம் முழுவதும் செவ்வாய் உச்சம் பெற்றிருக்கிறார். அதனாலும் இம்மாதத்திற்கு மலமாத அதிமாத தோஷம் கிடையாது.
-
இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கிறது. அது என்ன தெரியுமா? ??????!!!!!
-
இந்த அதிமாத தோஷம் நமது தமிழ்நாட்டிற்கே கிடையாது என்பது தான். இந்த தோஷம் சோணா நதிக்கு வடக்கே இருக்கும் நாடுகளுக்கு மட்டுமே உண்டு.
-
சோணா நதியா? அது எங்கே ஓடுகிறது?
======================================
சோணா நதியானது மத்தியப்பிரதேசத்தில் உற்பத்தியாகி வடக்கு நோக்கி பாய்ந்து மன்பூர் என்ற இடத்தில் வடகிழக்காகத் திரும்பி பாட்னா அருகில் கங்கையில் கலக்கிறது. ஆக இந்த அதிமாத தோஷமானது மத்திய பிரதேசத்திற்கு வடக்கில் உள்ள பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும். அதற்கு தெற்கே உள்ள தமிழகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பொருந்தாது.
-
எனவே யாரும் எவ்வித குழப்பமும் கவலையும் படாமல் வைகாசி மாதத்தில் திருமணம் உள்ளிட்ட சகல சுபகாரியங்களையும் தாராளமாகச் செய்யலாம்.

No comments:

Post a Comment