ஸ்மார்ட் போன்களை சூப்பர் ஸ்மார்ட் ஆக்கும் 50 அசத்தல் டிப்ஸ்!
இன்றைக்கு நம் கைகளில் இருப்பவை எல்லாமே ஸ்மார்ட் போன்கள் தான். ஆனால், அவற்றை நாம் எல்லோரும் ஸ்மார்ட்டாக வைத்திருக்கிறோமோ, ஸ்மார்ட்டாக கையாள்கிறோமா என்றால் பதில், இல்லை. டெக்னிக்கலாகவும் சரி, அன்றாடப் பயன்பாட்டிலும் சரி; ஸ்மார்ட்போன் விஷயத்தில் ரொம்பவே சொதப்புகிறோம். அதைத் தவிர்க்க உங்களுக்கான 50 டிப்ஸ் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. போன் பயன்பாட்டின் எல்லா ஏரியாவையும் தொட்டுச் செல்லும் காக்டெயில் டிப்ஸ் இவை.
1. உங்கள் மொபைல் போனின் செயல்திறனைத் தெரிந்து வைத்திருப்பது அவசியம். ப்ளே ஸ்டோரில் கிடைக்கிறது என்பதற்காக கணக்கில்லாமல் ஆப்ஸ்களை தரவிறக்கம் (Download) செய்து வைப்பது, குறைவான ரேம் கொண்ட மொபைல்களின் செயல்திறனைக் கடுமையாகப் பாதிக்கும். எனவே தேவையான ஆப்களுக்கு மட்டும் இடம் கொடுங்கள்.
2. குறிப்பிட்ட கால இடைவெளியில் போனின் சாஃப்ட்வேரை அப்டேட் செய்ய வேண்டும். செட்டிங்ஸில் சென்று சிஸ்டம் அப்டேட்டை கிளிக் செய்தாலே ஏதேனும் அப்டேட் இருந்தால் காட்டி விடும். மொபைலின் பாதுகாப்பிற்காகவும், செயல்திறன் மேம்பாட்டிற்கும் இந்த அப்டேட்ஸ் அவசியம்.
3. மொபைலின் செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று எந்த ஆப்பை அதிகமாகப் பயன்படுத்துகிறோம், எதைக் குறைவாகப் பயன்படுத்துகிறோம் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். நீண்டகாலமாகப் பயன்படுத்தாத ஆப்கள் இருப்பின் அவற்றை அன்இன்ஸ்டால் செய்து விடுங்கள். இது போன் மெமரியை அதிகப்படுத்துவதோடு, வேகத்தையும் கூட்டும்.
4. இதுவே ஆப்களை அன்இன்ஸ்டால் செய்ய வேண்டாம் என நினைத்தால் அவற்றை Disable செய்து விடுங்கள். இதன்மூலம் அவற்றை மீண்டும் இன்ஸ்டால் செய்ய வேண்டியிருக்காது; மேலும், அவை பேக்கிரவுண்டில் இயங்குவதும் தடுக்கப்படும். போனின் Default ஆப்களுக்கும் இதே வழியைப் பின்பற்றலாம்.
5. இன்டர்னல் மெமரி போதாது எனப் பலர் SD கார்டு பயன்படுத்துவதுண்டு. அவ்வாறு பயன்படுத்தும் SD கார்டு அதிவேகம் கொண்டதாக இருப்பது நன்று. SD கார்டில் மேலே க்ளாஸ் (Class) 6 முதல் 10 வரையிலான குறியீடுகள் இடம் பெற்றிருக்கும். கிளாஸ் 10 வகையிலான மெமரி கார்டுகள் அதிவேகத்தில் தகவல் பரிமாற்றம் செய்யக்கூடியவை.
6. ஆண்ட்ராய்டு போனில் பலரும் லைவ் வால்பேப்பர்களை வைத்து ரசிப்பதுண்டு. ஒவ்வொருமுறை நீங்கள் ஹோம் பட்டனை க்ளிக் செய்யும் பொழுதும் மொத்த ஆப்களுடன் லைவ் வால்பேப்பரும் பேட்டரியை பயன்படுத்திக் கொண்டிருக்கும். ஆதலால் பேட்டரி அதிகநேரம் நீடிக்க வேண்டுமெனில் லைவ் வால்பேப்பர்களைத் தவிர்க்க வேண்டும்.
7. சிங்கிங் (Syncing) என்பது நம் மொபைலை கூகுள் சர்வருடன் தொடர்ந்து அப்டேட்டில் வைத்திருக்கும் வசதியாகும். கூகுளின் சேவைகளைப் பல்வேறு கேட்ஜெட்களில் உபயோகிப்பவர்கள் எப்போதும் கேட்ஜெட்களில் Sync ஆப்ஷனை ஆன் செய்து வைத்திருந்தால் பயன்படுத்த சௌகர்யமாக இருக்கும்.
8. இன்டர்னல் Cache மெமரியை அடிக்கடி கிளீன் செய்வதன் மூலம் போனின் செயல்திறனை அதிகரிக்க முடியும். பின்னணியில் இயங்கக்கூடிய ஒவ்வொரு ஆப்பும் தனக்கான மெமரியை தொடர்ந்து எடுத்தபடியே இருக்கும். எனவே அவ்வப்போது கேஷ் மெமரியை கிளீன் செய்து விடுங்கள்.
9. போனின் Default லாஞ்சர் (Launcher) பிடிக்கவில்லையெனில் நோவா லாஞ்சர் (Nova), அபெக்ஸ் லாஞ்சர் (Apex), கோ லாஞ்சர் இஎக்ஸ் (Go launcher EX) போன்ற வேறு சில லாஞ்சர்களை பயன்படுத்திப் பார்க்கலாம். இதன்மூலம் மொபைல் பயன்படுத்தும் போது புதுவிதமான அனுபவத்தைப் பெறலாம்.
10. ஜிபிஎஸ், வைஃபை, ப்ளூடூத் முதலிய வசதிகளை எப்பொழுதும் ஆன் செய்து வைத்திருக்காதீர்கள். தேவையான பொழுது மட்டும் ஆன் செய்வது பேட்டரியை அதிகளவு நீடிக்கச் செய்யும். குறிப்பாக ஜிபிஎஸ் கொஞ்சம் கூடுதலாகவே பேட்டரியை எடுத்துக் கொள்ளும் என்பதால் அதைத் தேவையான பொழுது மட்டுமே ஆன் செய்ய வேண்டும்.
11. போனின் பிரைட்னஸை, வெளிப்புற வெளிச்சத்திற்கேற்ப மாறும் வண்ணம் ஆட்டோ பிரைட்னஸ் மோடில் (Auto brightness mode) வைப்பது நல்லது. ஏனெனில் டிஸ்ப்ளே பிரைட்னஸ் மிக அதிகளவு பேட்டரியை போனில் பயன்படுத்தக்கூடியது. நைட் மோட் (Night mode) போனில் இருக்கும் பட்சத்தில் அதை ஆன் செய்து பயன்படுத்துவது, பேட்டரிக்கு இன்னும் நல்லது; கண்களுக்கும் கூட.
12. மொபைல் போனை நாம் உபயோகிக்காத பொழுது அதன் பேட்டரி குறையாமல் இருக்க, பேட்டரி சேவர் (Battery saver) மோடைப் பயன்படுத்தலாம். இதில் பின்னணியில் இயங்கக் கூடிய ஆப்கள் அனைத்தும் நிறுத்தப்படுவதால் பேட்டரி நீண்டநேரம் நீடிக்கும்.
13. நம் போனில் அனிமேஷன் வசதியை நிறுத்துவதன் மூலம் பேட்டரியின் செயல்திறனை அதிகரிக்கச் செய்ய முடியும். அதற்கு செட்டிங்ஸ் பகுதிக்குள் சென்று டெவலப்பர் ஆப்ஷன்ஸ் (Developer options) பகுதிக்குள் இருக்கும் அனிமேஷனை ஆப் செய்ய வேண்டும். Transition animation scale and Animator duration scale ஆகிய
வற்றையும் ஆப் செய்ய வேண்டும்.
14. மொபைல் போன் கீழே விழும் பொழுது ஸ்கிரீனை பாதுகாப்பதற்கு தரமான டெம்பர் கிளாஸைப் (Tempered glass) பயன்படுத்துவது அவசியம். விலை குறைவு என்பதற்காக மலிவான டெம்பர் கிளாஸ் பயன்படுத்தும் போது ஸ்கிரீன் பாதிப்பதற்கு வாய்ப்பு அதிகம். டிஸ்ப்ளே விலை நிச்சயம் சில ஆயிரங்களைத் தொட்டு விடும்.
15. ஒவ்வொரு முறை இமேஜ், வீடியோ பைலை கிளிக் செய்யும் போதும் அது எந்த ஆப்பில் ஓபன் செய்யப்பட வேண்டும் என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டு கொண்டிருக்கும். அந்தக் கேள்வியை நீங்கள் தவிர்க்க விரும்பினால் அதில் ஆல்வேஸ் (Always) என இருக்கக்கூடிய ஆப்ஷனை அழுத்தி விட்டால் நீங்கள் விரும்பக் கூடிய அந்த ஆப்பிலேயே பைல் ஓபன் ஆகும். அதை நீக்க விரும்பினால் செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று செட் & கிளியர் ஆப்ஸ் (Set & Clear default apps) உதவியோடு நீக்கி விடலாம்.
16. உங்கள் மொபைல் போன் தொலைந்து விட்டால் Find my device ஆப் மூலம் எளிதாகக் கண்டறிந்து விட முடியும். உங்கள் மொபைல் போன் சைலன்ட் மோடில் இருந்தாலும் இந்த வசதி உதவியால் அதை ஒலிக்கச் செய்ய முடியும். உங்கள் மொபைல் போனின் இருப்பிடத்தையும் அறிந்து கொள்ள முடியும். ஒருவேளை மொபைல் போன் நிரந்தரமாகத் தொலைந்து போனால் அதில் உள்ள அத்தனை விஷயங்களையும் அழித்து விடவும் உதவும்.
17. அடிக்கடி போனில் அன்லாக் செய்வது உங்களுக்கு எரிச்சல் அளிப்பதாக இருந்தால் கூகுள் ஸ்மார்ட் லாக் (Google smart lock) வசதியை உபயோகித்துப் பார்க்கலாம். இதனால் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும், அதாவது அலுவலகம், வீடு போன்ற இடத்தில் மட்டும் மொபைல் எப்பொழுதும் லாக் ஆகாமல் இருக்கும். அந்தப் பகுதியைத் தாண்டும் போது மொபைல் லாக் ஆகி விடும்.
18. நீங்கள் அளவுக்கு அதிகமாக மெசேஜ் செய்பவராக இருந்தால் கூகுள் கீபோர்டு தவிர்த்து மற்ற ஆப்களையும் நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம். அவை ஆட்டோ கரெக்ட் உள்ளிட்ட பல வசதிகளை உங்களுக்கு அளிக்கும். SwiftKey keyboard உங்கள் மெசேஜ் டைப்பிங்கை இன்னும் சிறப்பானதாக மாற்றும்.
19. மொபைலை சார்ஜ் செய்யும் போது சார்ஜ் 100 சதவீதத்தை அடைந்தவுடன் நிறுத்தி விட வேண்டும். நூறு சதவீதத்திலேயே தொடர்ந்து சார்ஜ் செய்வது, பேட்டரிக்கு நல்லதல்ல.
20. இமேஜ் பைல்களை பார்ப்பதற்கு கூகுள் போட்டோஸ் ஆப் (Google Photos) நல்ல சாய்ஸ். நீங்கள் போட்டோவை எடுத்த இடம், நாள் பற்றிய விவரங்களையும் சேர்த்து எடுத்துக் கொண்டு ஒருநாள் எடுத்த அத்தனை போட்டோக்களையும் இணைத்து ஒரு வீடியோவாக மாற்றித்தரும் அளவிற்கு நிறைய வசதிகளை அளிக்கிறது கூகுள் போட்டோஸ்.
21. உங்கள் மதிப்பெண் சான்றிதழ்கள், நீங்கள் மிக முக்கியமானதாக கருதும் புகைப்படங்கள், வீடியோக்கள், ஆடியோக்கள் என அனைத்தையும் கூகுள் ட்ரைவில் (Google drive) பதிவேற்றம் செய்து வைக்கலாம். இது மொபைல் மற்றும் கணினி என எப்போது வேண்டுமானால் நம் ஆவணங்களை எடுத்துக் கொள்ள உதவும்.
22. செய்திகளைத் தெரிந்து கொள்ள எந்தவொரு பிரத்யேக நிறுவனத்தின் ஆப்பும் வேண்டாம் என்பவர்கள் அக்ரிகேட்டர்களைப் பயன்படுத்தலாம். கூகுள் நியூஸ் அப்படிப்பட்ட ஒன்று தான்.
23. நம் புகைப்படங்களை எடிட் செய்வதற்கு ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் சிறந்த ஆப்களில் ஒன்று பிக்ஸ் ஆர்ட் (Picsart). சாதாரண போட்டோ எடிட்டிங், சோஷியல் மீடியா ஷேரிங்கிற்கு ஏற்ப ஸ்மார்ட்டான ஆப்ஷன் என இரண்டிற்கும் ஏற்றதாக இருக்கிறது இது.
24. நிறைய ஆன்லைன் அக்கவுன்ட்களின் பாஸ்வேர்டுகளையும் நினைவில் வைத்துக் கொள்வது சிலருக்கு சிரமமாக இருக்கலாம். அந்த சிரமத்தை போக்குவதற்காக ப்ளே ஸ்டோரில் கிடைக்கக்
கூடிய ஆப் லாஸ்ட்பாஸ் (LastPass). லாஸ்ட்பாஸ் உடைய பாஸ்வேர்டை மட்டும் நினைவில் வைத்திருந்தால் போதுமானது. மற்றவற்றை லாஸ்ட்பாஸ் உதவியால் லாகின் செய்துள்ளலாம்.
25. பெண்கள் தங்கள் மொபைலில் காவலன் SOS (Kavalan SOS) ஆப்பை டவுன்லோடு செய்து வைத்துக் கொள்ளலாம். தங்கள் உடைமைகளுக்கு அல்லது தங்களுக்கு ஏதாவது ஆபத்து என உணர்ந்தால் அந்த ஆப்பை பயன்படுத்தலாம்.
அருகில் இருக்கக்கூடிய காவல் நிலையத்திற்கு உங்கள் இருப்பிடம் பற்றிய தகவல்கள் அனுப்பப்பட்டு விடும். உங்களுக்கான காவல்துறை உதவி உடனடியாகக் கிடைக்கப் பெறும்.
26. பாதுகாப்பு ரீதியாக ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் தங்கள் நண்பர்களுக்கு உடனடியாக வாட்ஸ் அப்பில் லைவ் லோகேஷன் (Live location) அனுப்புவதன் மூலம் தங்கள் இருப்பிடத்தைத் தெரிவிக்க முடியும். அதன் மூலமாக உங்கள் நண்பர்கள் மிக விரைவாக வந்து உங்களுக்கு உதவி புரிய முடியும்.
27. உங்கள் டாக்குமென்டுகளை ஸ்கேன் செய்து பயன்படுத்த கேம்ஸ்கேனர் (CA scanner) உதவிகரமாக இருக்கும். தொடர்ந்து எடுக்கப்படும் டாக்குமென்ட்களை ஒன்றாக இணைத்து PDF பார்மெட்டில் மாற்றக் கூடிய வசதியும் இதில் இருக்கிறது. இப்படி ஸ்கேன் செய்யும் முக்கியமான ஆவணங்களை டிரைவிற்கு மாற்றி விடலாம்.
28. ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவருமே, அதை லாக் செய்து தான் வைத்திருப்போம். ஒருவேளை நாம் ஏதேனும் அசம்பாவிதத்தில் சிக்கினாலோ அல்லது மொபைல் பிறரின் கைக்கு கிடைத்தாலோ அவர்கள் அவசரத்திற்குத் தொடர்பு கொள்ள என்ன செய்வார்கள்? இதற்கான அவசர எண்ணை நம் மொபைலிலேயே செட்டிங்க்ஸ்/ ஸ்க்ரீன் ஆப்ஷன் பகுதியில் இருக்கும் ஓனர் இன்ஃபோ பகுதியில் வைக்க முடியும். இதன்மூலம் அந்த எண் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய நபரின் பெயர் இரண்டும் லாக் ஸ்க்ரீனில் எப்போதும் இருக்கும்.
29. நண்பர்களுடனோ, குடும்பத்துடனோ வெளியே செல்லும் போது மொபைலை சைலன்ட்டில் வைத்து வைப்ரேட் மோடை ஆன் செய்து விடுங்கள். மொபைல் டேட்டாவையும் ஆஃப் செய்து வைப்பது நோட்டிஃபிகேஷன்களின் தொல்லையின்றி அந்த நேரத்தைச் செலவழிக்க உதவும்.
30. தனிமையில் நீங்கள் கேட்கும் போது இனிமையாக இருக்கும் பாடல்கள் அனைத்துமே ரிங்டோனாக இருப்பதற்கு உகந்ததல்ல. அலுவலகம், பொது அரங்கம் போன்ற பொதுவெளியில் அந்தப் பாடல் ஒலிக்கும்
போது அது பிறரை எரிச்சலூட்டாமலும் இருக்க
வேண்டும். அதேபோல பொது இடத்தில் மொபைல் ரிங் ஆனால் லாங் ரிங் ஆகாமல் கால் அட்டெண்ட் செய்து விடுவதே நல்லது. இல்லையெனில், சுற்றியிருக்கும் பிறரின் கவனமும் சிதறும்.
31. முக்கியமான உரையாடலில் இருக்கும் பொழுது இடையே போனில் அழைப்பு வந்தால், நம்மிடம் பேசிக் கொண்டிருப்பவரிடம் கேட்டு விட்டுத் தான் கால் அட்டெண்ட் செய்ய வேண்டும். இது நாகரிகம் மட்டுமல்ல, அவருக்கான மரியாதையும் கூட.
32. வாட்ஸ்அப் பேக்அப்கள் சரியாக இருக்கிறதா என சோதித்துக் கொள்ளுங்கள். இல்லையெனில், வாட்ஸ்அப் அன்இன்ஸ்டால் ஆனாலோ, வேறு மொபைலுக்கு மாறினாலோ பழைய சாட்களை இழக்க நேரிடும்.
33. பொது இடத்திலோ அல்லது பேருந்திலோ நீங்கள் செல்லும் பொழுது பாட்டு கேட்க விரும்பினால் ஹெட்செட்டை பயன்படுத்துவது சிறந்தது. மாறாக மொபைலின் ஸ்பீக்கரில் ஒலிக்க விடுவது பிறரை சங்கடப்படுத்தும்.
34. குறைந்தது 400 ரூபாயாவது செலவு செய்தால் தான் நல்ல ஹெட்செட்டுகள் கிடைக்கின்றன. இதைவிடக் குறைவு என 100,200 ரூபாய்க்கெல்லாம் வாங்கினால் விரைவிலேயே ஒருபக்கம் அவுட் ஆகி விடும். மேலும் நல்ல இசை அனுபவமும் கிடைக்காது.
35. உங்கள் மொபைலுக்கு சார்ஜ் செய்வதற்கு உங்கள் மொபைல் உடன் கொடுக்கப்பட்ட சார்ஜரையே நீங்கள் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் அதே பிராண்ட் சார்ஜர்களைப் பயன்படுத்தலாம். சரியாக பொருந்துகிறது என்பதற்காக மற்ற சார்ஜர்களை நீண்ட காலம் பயன்படுத்தினால் மொபைல் பேட்டரி பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.
36. மொபைல் லாக்கோ, மின்னஞ்சலோ, UPI பாஸ்வேர்டோ எதுவானாலும் சரி. எளிதில் யூகிக்கக் கூடியதாக வைக்கவே வைக்காதீகள். எளிய பாஸ்வேர்டுகள் மொபைல் பாதுகாப்பை பாதியளவு பலி கொடுப்பதற்குச் சமம்.
37. தற்போது பரவிக் கொண்டிருக்கும் பெரும்பாலான போலிச்செய்திகள் வாட்ஸ்அப் ஃபார்வர்டுகள் தான். எனவே உங்களுக்குத் தகவல்களைப் பகிரும் நபரிடம், அந்தத் தகவல்களின் உண்மைத் தன்மையை சோதித்துக் கொள்வது நல்லது. அது முடியாத பட்சத்தில் குறைந்தது நீங்கள் பிறருக்கு பகிரும் தகவல்களையாவது நூறு சதவீதம் உறுதிப்படுத்திக் கொண்டு பகிருங்கள்.
38. வாட்ஸ்அப் ஃபார்வர்டுகள் ஒருபுறம் என்றால் இன்னொருபுறம் அதிகாரபூர்வ அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள், தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் ட்விட்டர் அக்கவுன்ட்களின் பெயரிலேயே போலிச்செய்திகள் போட்டோஷாப் செய்யப்பட்டு பரவுகின்றன. இப்படி சர்ச்சைக்குரிய விஷயங்கள் பரப்பப்படும் போது அவற்றை அப்படியே நம்பாமல் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் பிரபலங்களின் அக்கவுன்ட்டுக்குச் சென்று பார்த்தாலே போதும்; அவற்றின் உண்மைத் தன்மை தெரிந்து விடும்.
39. இந்தியர்கள் அனுப்பும் குட்மார்னிங் மெசேஜ்களின் எண்ணிக்கை ரொம்பவே ஓவர் என அண்மையில் கூகுளே புலம்பியிருக்கிறது. இந்த குட்மார்னிங், குட்நைட் மெசேஜ்கள் SMS காலத்திலேயே தேவையற்ற ஆணி தான். அதை இன்னும் ஆண்ட்ராய்டு காலத்திலும் அனுப்பிக் கொண்டிருப்பது சரியல்ல. அதுவும் அலுவலக க்ரூப்கள் போன்ற புரஃபஷனல் க்ரூப்கள் என்றால் இவற்றையெல்லாம் அனுப்பவே அனுப்பாதீர்கள்.
40. ரத்தம் தேவை, சிகிச்சைக்காக அவசர நிதி தேவை என வரும் மெசேஜ்களில் கூட தேதியோடு குறிப்பிட்டு வரும் மெசேஜ்களை நாம் பார்வேர்ட் செய்யலாம். தேதி இல்லாமல் வரும் மெசேஜ்களை நாம் உறுதி செய்து விட்டு பார்வர்டு செய்வது நல்லது. இல்லையெனில் ஏற்கெனவே உதவி கிடைக்கப் பெற்றவர்களுக்கும் கூட இதனால் தொடர்ந்து அழைப்புகள் வந்து கொண்டே இருக்கும்.
41. கூகுள் ப்ளே ஸ்டோர், ஆண்ட்ராய்டு ஆப் ஸ்டோர் இந்த இரண்டிலிருந்தும் நேரடியாக ஆப்களை டவுன்லோடு செய்து கொள்வது தான் பாதுகாப்பானது. இவை தவிர அதிகாரபூர்வ இணைய தளங்களில் இருந்து கிடைக்கும் ஆப்ஸ் எனில், நன்கு சோதித்து விட்டு டவுன்லோடு செய்யலாம். மற்றபடி வாட்ஸ்அப் ஃபேஸ்புக் லிங்க்குகள், மின்னஞ்சல் மூலம் வரும் ஆப்கள் எதையும் டவுன்லோடு செய்ய வேண்டாம்.
42. இந்த மெசேஜ்களை நாலு பேருக்கு அனுப்பினால் நல்லது நடக்கும் போன்ற டெம்ப்ளேட் மெசேஜ்கள் இன்னுமே கூட வாட்ஸ்அப்பில் உலவிக் கொண்டு தான் இருக்கின்றன. அதனால் யாருக்கு நல்லதோ இல்லையோ, உங்களுக்கு நிச்சயம் நல்லது இல்லை. இதுபோன்ற மெசேஜ்களை இன்னமுமே நம்பி அனுப்பிக் கொண்டிருப்பவரில் நீங்களும் ஒருவர் எனில், "போதும் பாஸ்... விட்ருங்க!"
43. பழைய தகவல்கள் மட்டுமன்றி அன்றாடச் செய்திகளைக் கூட போலிச்செய்திகளாக அனுப்புபவர்கள் அதிகரித்து விட்டனர். இவற்றை உறுதிசெய்ய அதிகாரபூர்வ ஊடகங்கள் முதல்வழி. இதற்கடுத்தது போலிச்செய்திகளைக் கண்டுபிடிப்பதற்கென்றே இயங்கிவரும் AltNews, Youturn போன்ற தளங்களை நாடலாம்.
44. அமேசானில் பென்டிரைவ் ஒரு ரூபாய், ஃப்ளிப்கார்ட்டில் மொபைல் 10 ரூபாய் என்றெல்லாம் வரும் போலி லிங்க்குகளை தயவுசெய்து நம்ப வேண்டாம். இந்நிறுவனங்களின் அதிகாரபூர்வ இணையதளம் மற்றும் ஆப் இரண்டிலும் கிடைக்கும் தகவல்கள் மட்டுமே உறுதியானவை.
45. உங்களுக்கு இவ்வளவு பரிசு விழுந்திருக்கிறது, இவ்வளவு ரூபாய் ஆஃபர் கிடைத்திருக்கிறது என வரும் எல்லா மெசேஜ்களும் பிஷ்ஷிங் ஆபத்துள்ளவையே. எனவே அந்த லிங்க்குகளைப் பின்தொடர்ந்து செல்வது நல்லதல்ல.
46. போனில் நீண்டநேரம் பேசவேண்டிய அவசியம் வந்தால், உடனே ஹெட்செட்டிற்கு மாறி விடுங்கள். எந்தவொரு காஸ்ட்லி மொபைலாக இருந்தாலும், நீண்டநேரம் பேசினால் சூடாகவே செய்யும். எனவே அதை காதுகளுக்கு அருகே வைத்து பேசுவதைத் தவிர்க்கலாம். இதனால் ரேடியோ அலைகளிலிருந்து மூளையைப் பாதுகாக்கலாம் என சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனமும் தெரிவித்துள்ளது.
47. குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் உங்கள் மொபைலை கையாள்வார்கள் எனில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், வங்கி ஆப்கள் போன்ற அனைத்தும் பாஸ்வேர்டு மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளனவா என உறுதி செய்து கொள்ளுங்கள். இல்லையெனில் போலியான லிங்க்குகள், போலி ஆப்கள் போன்றவற்றால் அவர்களும் பாதிக்கப்படலாம்.
48 பெரிய கட்டடங்களில் நிற்கும் பொழுது சிக்னல் சரியாக கிடைக்கவில்லை என்றால் அந்த நிறுவனத்தில் உள்ள ஜன்னலுக்கு அருகில் சென்று முயற்சி செய்யலாம் அல்லது அங்கே இருக்கக் கூடிய எலெக்ட்ரானிக் உபகரணங்களை விட்டுத் தள்ளி நின்று முயற்சி செய்யலாம்.
49. செல்போன்களுக்கான சிக்னலைத் தேடுவதில் தான் அதன் பேட்டரி மிக அதிகமாக செலவழிக்கப்படுகிறது. எனவே சிக்னல் இல்லை எனும் பட்சத்தில் செல்போனை சுவிட்ச் ஆப் செய்வது அல்லது ஏர் பிளேன் மோடில் போடுவது தான் நல்லது.
50. மொபைலில் எந்த ஆப்களை எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறோம், எந்த ஆப்பில் எவ்வளவு நேரம் செலவழிக்கிறோம் என்பதையெல்லாம் வைத்து 'Digital Wellness' என்ற ஒன்றை மதிப்பிடுகிறார்கள். உதாரணமாக நீங்கள் ஒருநாளைக்கு 6 மணி நேரம் பப்ஜி விளையாடுகிறீர்கள் எனில் அந்த ஆப் உங்களின் நேரத்தை அதிகமாக எடுத்துக் கொள்கிறது. இது ஆரோக்கியமானது அல்ல. இதேபோல டிக்டொக், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் என எதுவாக இருந்தாலும் இதே விதி தான். இதிலிருந்து மக்களைக் காப்பதற்காக கூகுள், ஆப்பிள் இரண்டுமே டிஜிட்டல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துகின்றன. ஆண்ட்ராய்டு பை அப்டேட்டில் இதற்காக தனி ஆப்ஷனை கொடுத்திருக்கிறது கூகுள். இதனை வேறு சில ஆப்கள் மூலமாகவும் கண்காணிக்கலாம். அவற்றை இன்ஸ்டால் செய்து கொண்டால் உங்களின் நேரம் ஒருநாளில் எந்த ஆப்பிற்கு எவ்வளவு செலவாகிறது என்பதைக் கணக்கிட்டு குறைத்துக் கொள்ள முடியும்.
நன்றி ; டெக் தமிழா
விகடன் குழுமம்