Sunday, 28 October 2018

துத்திக்கீரை

"துத்திக்கீரை"

அறிவெனப்படுவது வீட்டு முற்றத்திலும், எளிய கிராம மக்களிடமும், நம் பழங்குடிகளிடமும் அபரிமிதமாக இருக்கிறது. ஆனால், நம்முடைய முன் முடிவுகள் இவர்களின் அறிவைச் சுவீகரித்துக்கொள்ளத் தடுக்கிறது. இவர்கள் குறித்து ஏளமான ஒரு பிம்பத்தை நமக்குள் கட்டமைக்கிறது.

தர்மபுரியில் ஒரு விவசாய நிலத்தில் அப்போதுவரை களைச் செடி என்று நினைத்துக்கொண்டிருந்த ஒரு பயிர் வகையை அந்தக் கிராம மக்கள் அறுத்துச் சமைப்பதைக் கண்டோம்.

பின், அந்த மக்களிடம் உரையாடியபோதுதான் தெரிந்தது, அது பல மருத்துவக் குணநலன்கள் வாய்ந்த துத்திக் கீரை என்று. அந்த எளிய கிராம மக்களின் உணவுத்தட்டில் துத்திக் கீரையும் பல நூற்றாண்டுகளாக இருக்கிறது.

அவர்கள் வெட்டுக் கீரை, குப்பைமேனி, தும்பை எனப் பல மருத்துவக் குணநலன்கள் வாய்ந்த செடிகளை குறித்து அடுக்கிக்கொண்டே போனார்கள்.

இவை, எதையும் பெரும்பான்மை சமூகம் அறியாதது. அறிவெனப்படுவது இதுதானே. 
இந்தக் கிராம மக்களிடம் இருக்கும் மருத்துவமும், அறிவியலும் அறிவுதானே? ஆனால், நாம் அவர்களை, அவர்கள் அறிவை உதாசீனப்படுத்துகிறோம்!புறக்கணிக்கிறோம்!!

துத்திக்கீரை  கூட்டு:
======================
துத்திக்கீரை- 200 கி, சின்ன வெங்காயம் - 100 கி, வேகவைத்த துவரம் பருப்பு - 3 சிட்டிகை, மிளகுத் தூள் - 1/2 சிட்டிகை, சீரகம் - 1 சிட்டிகை, நல்லெண்ணெய் - 3 சிட்டிகை

துத்திக்கீரை மற்றும் சிறிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பின்னர் வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, அதில் சீரகத்தைப் போடவும்.

நறுக்கிவைத்திருக்கும் கீரை மற்றும் வெங்காயத்தை வாணலியில் போட்டு வதக்கவும். பிறகு, தேவையான அளவு நீர் ஊற்றி வேகவைக்கவும். நன்றாக வெந்த பின்னர் துவரை, மிளகுத்தூள் போடவும். தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கினால், ஆரோக்கியமான  கூட்டு தயார்.

இதனைச் சாதத்துடன் நெய் கலந்து சாப்பிட்டுவர மூலம் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும், பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதலும் நீங்கும்.

துத்தி இலை தோசை:
======================
நரம்புகள் நீக்கப்பட்ட துத்தி இலையை மாவுடன் கலந்து, தோசையாகச் சுடலாம்.துத்தியைத் தோசையாக செய்து சாப்பிடும்போது, இதன் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

துத்தி இலை தோசையை வாரம் இரண்டு முறை சாப்பிடலாம். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மூலநோய் குணமடையும். சிறுநீர் எரிச்சல், செரிமானக் கோளாறு போன்றவற்றைச் சரிசெய்யும். உடல் தசைகள் வலுப்பெற உதவும்.

No comments:

Post a Comment