Monday, 28 November 2016

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்ற சில உணவுகள்

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்ற சில உணவுகள்

பொதுவாக ஒரு நாளைக்கு 2,200 கலோரி மதிப்புள்ள உணவை உட்கொள்பவர்கள், கர்ப்பிணி தாய்மாராக மாறும் பொழுது கூடுதலாக 300 கலோரி சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். அதாவது, சராசரியாக சாப்பிடும் உணவோடு, வயிற்றிலிருக்கும் சேய்க்கும் சேர்த்து கூடுதலாகச் சாப்பிட வேண்டும் என்பது மருத்துவர்கள் ஆலோசனை.

அதற்கான ஒரு சில ஆரோக்கிய உணவுகளைப் பார்ப்போம்:

வெஜிட்டபுள் இட்லி

தேவையானவை:

இட்லி மாவு - ஒரு கிண்ணம்
பச்சைப் பட்டாணி - 1/2 கிண்ணம்
பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் - 1/2 கிண்ணம்
உருளை கிழங்கு - 2 (பெரியது)
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மல்லித் தூள் - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டிஉப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

பச்சைப் பட்டாணி, உருளைக் கிழங்கு, கேரட் -பீன்ஸ் அனைத்தையும் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு,

சீரகம் தாளித்து பின்னர் வேகவைத்துள்ள காய்கறி கலவையைச் சேர்த்துப் பிரட்டி விட்டு, அரை உப்பு சேர்த்து கிளறவும். அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து, சிறிது தண்ணீரும் சேர்த்து பிரட்டி விட்டு கெட்டியானதும் இறக்கவும். இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடானதும், இட்லி தட்டில் முதலில் அரை கரண்டி மாவை குழியில் ஊற்றவும். அடுத்து காய்கறி

மசாலாவை ஒரு தேக்கரண்டி எடுத்து வைத்து மேலே மீண்டும் அரை கரண்டி மாவை ஊற்றவும். இப்படியே இட்லி மாவை ஊற்றி வேக வைக்கவும். இட்லி வெந்ததும் எடுக்கவும். சுவையான வெஜிட்டபுள் இட்லி தயார். சட்னி, சாம்பாரோடு பரிமாறவும்.

கம்பு கிச்சடி

தேவையானவை :

கம்பு - அரை கிண்ணம்
பாசிப்பருப்பு - 1 தேக்கரண்ட
பெரியவெங்காயம் - ஒன்று
பட்டை - ஒருதுண்டு
பச்சைமிளகாய் - 2
இஞ்சிவிழுது - 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1 தேக்கரண்ட
நெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையானஅளவு
எண்ணெய் - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
உளுந்து - அரை தேக்கரண்டி

காய்கறிகள் :
கேரட் - அரைகிண்ணம்
பீன்ஸ் - 3பெங்களூர் தக்காளி - பாதி
தண்ணீர் - ஒன்றரை கப்

செய்முறை:

தவிடு நீக்கப்பட்ட கம்பு (கடையிலேயே தவிடு நீக்கி சுத்தம் செய்த கம்பு கிடைக்கும்) மற்றும் பாசிப்

பயறு இரண்டையும் சுமார் இரண்டு மணி நேரம் ஊறவிடவும். குக்கரில் சிறிதளவு எண்ணெய், நெய் சேர்த்து சீரகம், பட்டை, இஞ்சி, கறிவேப்பிலை, உளுந்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். ஊறவைத்த கம்பு மற்றும் பாசிப்பருப்பை நன்கு கழுவி சுத்தம்செய்து, தண்ணீரை சுத்தமாக வடிகட்டவும். இதனுடன் வதக்கிய கலவையைச் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவிடவும். குக்கர் சத்தம் அடங்கியவுடன், விசிலை நீக்கி கிச்சடியை நன்கு கலக்கி, பரிமாறவும்.

ராகி - முருங்கைக்கீரை அடை

தேவையானவை:

கேழ்வரகு (ராகி) மாவு - 1 கிண்ணம்
முருங்கைக் கீரை - 1/2 கிண்ணம்
வெங்காயம் - 1
மிளகாய் வற்றல் - 2
உப்பு, தண்ணீர் - தேவைக்கேற்ப
நல்லெண்ணெய் சிறிதளவு.

செய்முறை:

ராகி மாவில் நறுக்கிய வெங்காயம், கிள்ளிய மிளகாய்வற்றல், சுத்தம் செய்த முருங்கைக் கீரை, உப்பு சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும். பிறகு ஒரு தட்டின் பின்பகுதியில் மெல்லிய காட்டன் துணியைப் போட்டு அதன்மீது பிசைந்து வைத்துள்ள மாவில் தேவையான அளவு உருண்டைகளாக எடுத்து தட்டி. தோசைக்கல்லில் இட்டு, சுற்றிலும் நல்லெண்ணெய்யை விட்டு மறுபக்கம் திருப்பிப் போட்டு சுட்டு எடுக்கவும்.

பலன்கள்: கேழ்வரகில் அதிகமாக கால்சியம் நிறைந்துள்ளது. எலும்பு அடர்த்தி குறைதல், ரத்தசோகை உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டுவர, உடல்நலம் மேம்படும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

கம்பு தோசை

தேவையானவை:

கம்பு மாவு - 1 கிண்ணம்
தோசை மாவு - 2 கரண்டி
பச்சைமிளகாய் - 1
நறுக்கிய வெங்காயம் - 1
கொத்துமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கு ஏற்ப.

செய்முறை:

கம்பு மாவுடன் தோசை மாவு, உப்பு சேர்த்து, தோசை ஊற்றும் பதத்துக்குக் கலந்து, தோசைக்கல்லில் ஊற்ற வேண்டும். அதன் மேலே நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கொத்துமல்லி தூவி, வெந்ததும் எடுத்துப் பரிமாறவும்.

பலன்கள்: கால்சியம், புரதம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டுவர, மாதவிலக்குப் பிரச்னைகள் நீங்கும்.

சாமை வெண்பொங்கல்

தேவையானவை:

சாமைஅரிசி - 100 கிராம்
பாசிப்பருப்பு - 50 கிராம்
சீரகம் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 50 மில்லி
பெருங்காயத்தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள் } தேவையானஅளவு (மிளகு 8-10)
உப்பு - தேவையானஅளவு
இஞ்சி - ஒருதுண்டு
தண்ணீர் - 450 மில்லி.
முந்திரி - 3 (பொடித்துக்கொள்ளவும்)

செய்முறை:

நன்கு கழுவி சுத்தம் செய்த சாமை அரிசியுடன் பாசிப்பருப்பு, தண்ணீர், உப்பு சேர்த்து குழைய வேகவைக்கவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து சீரகம், பொடியாய் நறுக்கிய கறிவேப்பிலை, இஞ்சி, பெருங்காயத்தூள், மிளகுத்தூள், முந்திரி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, குழைய வேகவைத்த அரிசியுடன் இதைச்சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

குறிப்பு: கர்ப்பிணிப்பெண்களுக்கு மிகவும் அவசியமான நார்ச்சத்துக்கள் சாமையில் அதிகம் உள்ளன.

ராகிக் கஞ்சி

தேவையானவை:

ராகி மாவு - 3 தேக்கரண்டி
உப்பு - சிறிது
தண்ணீர், பால் - தேவையான அளவு.

செய்முறை:

ராகி மாவைச் சிறிது தண்ணீர் விட்டு நன்கு கரைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் ஒன்றரை கிளாஸ் தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். இளஞ்சூடாக இருக்கையில், அத்துடன் தேவையான அளவு பால் கலந்து அருந்தலாம்.

பலன்கள்: புரதம், நார்ச்சத்து, பி காம்ப்ளக்ஸ் வைட்டமின், கால்சியம், இரும்புச்சத்து நிறைந்தது. பெண்களுக்கு வயதான காலத்தில், எலும்புகள் தேய்மானம் அடைவதைத் தடுக்கும்.

கேரட் ஜூஸ்

தேவையானவை:

கேரட் - 2
தேங்காய்ப்பால் - அரை டம்ளர்
தேன் - சுவைக்கு ஏற்ப

செய்முறை:

கேரட்டின் மேல் தோலை நீக்கி, துண்டுகளாக நறுக்கி, தேங்காய்ப்பால் சிறிது சிறிதாகச் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொண்டு அத்துடன் தேன் கலந்து குடிக்கலாம்.

பலன்கள்: கர்ப்பிணிகள் தினமும் சாப்பிட்டு வந்தால் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு நல்லது.

(குறிப்பு: மேற்கண்ட உணவு வகைகளை மற்றவர்களும் சாப்பிடலாம். ஆரோக்கியத்திற்கு ஏற்றது.)

No comments:

Post a Comment