Tuesday, 21 March 2017

விஷக்கடி

போகர் அருளிய விஷக்கடி வைத்தியம்.

ஆதியில் நம் முன்னோர்கள் தம்முடைய உணவு மற்றும் வாழ்விடத் தேவைகளை முன் வைத்து இயற்கையோடு இணைந்த பெருவாழ்வினை மேற் கொண்டிருந்தனர். இத்தகைய வாழ்விடங்கள் பெரும்பாலும் ஆற்றங்கரைகளை ஒட்டியோ அல்லது வனப் பகுதிகளை ஒட்டியோ அமைந்திருந்தன.


இத்தகைய வாழ்வாதார சூழலில், அவர்களுக்கு சவாலாய் இருந்த காரணிகளில் முதன்மையானது பாம்புகள், பூச்சிகள், வண்டுகளினால் உண்டாகும் விஷக் கடியினைக் குறிப்பிடலாம். சித்தர்களின் மருத்துவத்திலும் கூட இந்த விஷக்கடிக்கான மருத்துவம் பெரியதொரு பகுதியாக காணப்படுகிறது. இத்தனை முக்கியத்துவம் பெற்ற இந்த விஷக்கடி மருத்துவ முறைகளுள் ஒன்றினைத்தான் இன்றைய பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம்.


இந்த தகவல் போகர் அருளிய "போகர் 12000" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.


உண்டான விஷத்தையடா உண்மைகேளு
ஒருவருக்கும் ஆகாத பெட்டிதன்னை
கண்டவுடன் துளைசெய்து விளங்காய்போலே
கண்மணியே பழம்புளியை யுள்ளேவைத்து
மண்டலந்தான் சென்றெடுத்து எட்டியென்ற
மரத்தாலேசிமிள் ச்எய்து வைத்துக் கொள்ளு
சண்டாள விஷங்களப்பா யெதுவானாகும்
சாற்றிவிடு வெற்றிலையில் மிளகுபோலே.

மிளகுபோல் வெற்றிலையில் மடித்துக்கொள்ளு
மூன்றுநாள் கொடுத்துவிடு ஆறுவேளை
அவுடதத்திற்கும் பச்சரிசி கஞ்சியாகும்
அப்பனே முருங்கையிலை போட்டுக்காச்சு
உளவறிந்த உப்புதனைச் சேர்க்கவேண்டாம்
உத்தமனே பத்தியமதை பயமாய்க்காரு
களவான வீடதுபோல் விஷங்களெல்லாங்
கண்மறையப் போகுமடா உண்மைதானே.

எட்டி மரத்தில், விளாங்காய் அளவுள்ள துளை ஒன்றினைப் துளைத்துக் கொள்ள வேண்டுமாம்.  பின்னர் பழப் புளியை கொட்டையை நீக்கிச் சுத்தம் செய்து, எட்டி மரத்தில் உருவாக்கிய துளைக்கு உள்ளே வைத்து, அந்த துளையினை எட்டி மர துண்டினால் ஆன தக்கையைக் கொண்டு நன்கு மூடிவிட வேண்டுமாம்.  பின்னர் நாற்பது நாள் சென்ற பிறகு எட்டி மரத்தில் இருந்து புளியை எடுத்து, எட்டி மரத்தினால் செய்யப்பட்ட சிமிழில் சேகரித்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.


எந்தவகையான விஷக் கடியானாலும், சேமித்து வைத்த புளியில் இருந்து மிளகு அளவு எடுத்து, வெற்றிலையில் மடித்து பாதிக்கப் பட்டவரிடம் என்ன மருந்து என்று சொல்லாமல் உண்னக் கொடுக்க வேண்டும் என்கிறார். இவ்வாறு காலை மாலை என மூன்று நாட்களுக்கு, ஆறுவேளை உண்ணக் கொடுத்து வந்தால் களவு போன வீட்டைப் போல் உடலில் இருந்த விஷங்கள் எல்லாம் காணாமல் சென்றுவிடும் என்கிறார்.


இதற்குப் பத்தியமாக மருந்துண்ணும் மூன்று நாளும் உப்பு சேர்க்காது பச்சரிசியும், முருங்கையிலையும் போட்டு கஞ்சி காய்ச்சிக் கொடுக்க வேண்டும் என்கிறார்

No comments:

Post a Comment