*வீட்டில் விளக்கேற்றும் போது சுவாமி படங்களுக்கு பூ கட்டாயம் போடவேண்டுமா?
காலையில் விளக்கேற்றி பூ சாத்தி வழிபடவேண்டும். மாலையில் பூ கட்டாயமில்லை.
* செவ்வாய், வெள்ளிக்கிழமையில் வீட்டில் ஒட்டடை அடிக்கக் கூடாதா ஏன்?
செவ்வாயும், வெள்ளியும் பொருள் வாங்கிச் சேர்த்தால் வளரும். அதனால், இவ்விரு நாட்களிலும் வீட்டைத் துடைப்பதில்லை. முதல்நாளே ஒட்டடை அடித்து சுத்தப்படுத்தி விடுங்கள்.
* கண்ணை மூடிக் கொண்டு கடவுளை வழிபடக்கூடாது என்கிறார்களே!உண்மையா?
கடவுளின் திருவுருவம் கண் முன்னே இருக்கும்போது கண்ணாரக் கண்டு வழிபட வேண்டும். திருவுருவம் இல்லாத இடத்தில் வழிபட வேண்டிய காலத்தில், கண்ணை மூடி மனதில் கடவுளின் உருவத்தை நிலை நிறுத்தி வழிபாடு செய்யலாம்.
* திருமணஞ்சேரியில் வேண்டிக்கொண்ட பிரார்த்தனை மாலை தொலைந்துவிட்டது. மீண்டும் மாலை செலுத்த விரும்புகிறேன். பரிகாரம் என்ன?
அறியாமல் செய்த தவறு தானே! இதற்காகக் குழம்பிக் கொள்ள வேண்டாம். மீண்டும் திருமணஞ்சேரி சென்று புதுமாலை வாங்கி சேர்த்து விடுங்கள். தவறைப் பொறுக்குமாறு கல்யாணசுந்தர சுவாமியிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.
* சஞ்சீவிமலையைத் தூக்கி வரும் அனுமனை வீட்டில் வைத்து வழிபடக்கூடாது என்கிறார்களே, ஏன்?
சஞ்சீவி என்பது உயிர் காக்கும் மூலிகை. இந்த அனுமனை வழிபட்டால் கவலை நம்மை தீண்டாது. இவரை வழிபட நோயில்லாத நல்வாழ்வு உண்டாகும்.
* கனவில் பாம்பு அடிக்கடி வருகிறது. அதைத் தவிர்க்க ஏதாவது பரிகாரம் உண்டா?
பொதுவாக கனவில் பாம்பு வந்தால் பணம் வரும் என்பார்கள். மற்றபடி பயப்பட ஏதுமில்லை. முருகனுக்கு அர்ச்சனை செய்து பயத்தைப் போக்கிக் கொள்ளுங்கள்.
* பூஜை, விரதம் போன்றவற்றை பெண்கள் மட்டுமே கடை பிடிக்க வேண்டுமா, ஆண்கள் கடைபிடிக்கக் கூடாதா?
இவற்றில் ஆண், பெண் பாகுபாடு கிடையாது. வீடு, குழந்தைகள் நலன் விஷயங்களில் பெண்களே அதிகம் அக்கறை கொண்டவர்களாக இருப்பதால் பூஜை, விரதங்களில் ஈடுபாடு காட்டுகிறார்கள். மற்றபடி ஆண்கள் பூஜை, விரதம் போன்றவற்றைச் செய்யாமல் இல்லை.
* மாலை நேரத்தில் சாப்பிடக் கூடாது என்று பெரியவர்கள் சொல்வதன் காரணம் என்ன?
சாப்பிடுவது, தூங்குவது, நகம் வெட்டுவது போன்றவை குறிப்பிட்ட நேரங்களில் தான் செய்ய வேண்டும். காலை சூரிய உதயம், மாலை சூரிய அஸ்தமனம் ஆகிய இரு வேளைகளும் சந்தியா காலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த இரு வேளைகளிலும் தெய்வ வழிபாட்டை தவிர மேற்படி விஷயங்களை செய்யக்கூடாது. மகாலட்சுமி நம் வீட்டிற்கு வரும் வேளையில் விளக்கேற்றி வரவேற்க வேண்டுமே தவிர மற்றதைச் செய்யக்கூடாது.
* வாகனத்தில் பன்றி இடித்துவிட்டால் அதை விற்றுவிடுகின்றனர். இதற்கு சாஸ்திர ரீதியான காரணம் உண்டா?
பன்றியைத் தவிர மற்ற மிருகங்கள் இடித்து
விட்டால் வாகனம் தங்கமாக மாறிவிடுமா? இதற்கு சாஸ்திரங்களையெல்லாம் இழுக்க வேண்டாம். வாகனங்களை விற்கவும் வேண்டாம். முதலில் எல்லோரும் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும். "சாலை விதிகளை மதிக்காமல் வாகனத்தில் இடிப்பவர்களெல்லாம் அடுத்த பிறவியில் பன்றியாகப் போகக் கடவது' என்று சபிக்குமளவுக்கு சிலர் வாகனம் ஓட்டுகின்றனர்.
* திருஷ்டி கழிக்க ஏற்ற முறையும், அதற்கான நாளும் எது என்று சொல்லுங்கள்.?
சாம்பிராணி புகை போட்டும், தேங்காயில் சூடம் கொளுத்தி வைத்தும், மிளகாய் வத்தல், காலடி மண்ணைச் சுற்றி நெருப்பில் போட்டும் இப்படி ஏதாவது ஒன்றைச் செய்து திருஷ்டி கழிக்கலாம். ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஏற்ற நாட்கள்.
* கோயிலில் நவக்ரஹ வழிபாட்டை கடைசியாகத்தான் செய்ய வேண்டுமா?
முதலில் பிரதான மூலவரை தரிசித்து வலம் வரவேண்டும். அடுத்து அம்பாள் மற்றும் பரிவாரங்களை தரிசித்து வலம் வரவேண்டும். மூன்றாவது நவக்ரஹம், சண்டிகேஸ்வரர், பைரவர் ஆகியோரை தரிசித்து வலம் வரவேண்டும்.
* சிவன் கோயிலில் சுவாமிக்கும் நந்திக்கும் இடையில் செல்லக்கூடாது என்பது ஏன்?
நந்திதேவர் தமது மூச்சுக் காற்றின் வாயிலாக சுவாமிக்கு சாமரம் வீசி வழிபட்டுக் கொண்டே இருக்கிறார். அது தடைபடாமல் இருக்க நாம் இடையில் செல்லாமல் இருக்க வேண்டும். பொதுவாக சுவாமி - நந்தி, கணவன் - மனைவி, பெற்றோர் - குழந்தை, குரு -சிஷ்யன், பசு - கன்று ஆகியோரது குறுக்கே செல்லக்கூடாது என்பது சாஸ்திர நியதி.
* நரசிம்மர் கோயிலில் பிரதோஷ விழா நடப்பது ஏன்?
பிரகலாதனைக் காப்பதற்காக நரசிம்மர் தூணில் அவதரித்த வேளையே பிரதோஷம். நரசிம்மரை வழிபடுவதற்கு உகந்த நேரமாக இருப்பதால் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.
* பஞ்சாங்கத்தில் நட்சத்திரம், திதி போன்றவை மதியம் ஆரம்பித்து மறுநாள் மதியம் வரை இருப்பதாக பார்க்கிறோம். விரதம், வழிபாட்டை எப்போது செய்ய வேண்டும்?
விரதம், வழிபாடு மேற்கொள்வதிற்கு இரவில் திதி வியாபித்து இருக்கவேண்டும் என்பது நியதி. அதனால், முதல்நாளிலேயே விரதத்தை மேற்கொள்ளுங்கள். திதி கொடுப்பது, தர்ப்பணம் செய்வது போன்றவற்றிற்கு இது பொருந்தாது.
*கிருஷ்ணர்வெண்ணெய் திருடுவதில்
உள்ளதத்துவம் என்ன?
மேலோட்டமாக பார்க்கும்போது திருடுவது போலத் தெரிந்தாலும், அதன் உள் அர்த்தத்தைப் புரிந்து கொண்டால் அதை திருட்டாக எண்ண மாட்டோம். வெண்ணெய் என்பது பக்தி நிறைந்த வெள்ளை உள்ளத்தைக் குறிக்கும்.
அதை பரம்பொருளான கிருஷ்ணர் விரும்பி ஏற்றுக் கொள்கிறார்.
* விளக்கேற்றக் கூடிய திசைகள் யாவை?
கிழக்கு, மேற்கு, வடக்கு ஆகிய மூன்று திசைகளில் ஏற்றலாம். தெற்கில் மட்டும் ஏற்றக்கூடாது.
* நம்முடைய இஷ்டதெய்வத்தின் உருவச்சிலையை வீட்டில் வைத்து வழிபடலாமா?
இஷ்டதெய்வ சிலையைவைத்து வழிபடலாம்
வழிபாட்டின்போது காலை , மாலை
வேளைகளில் பால்,பழம் பிரசாதமாக வைத்து பூஜை செய்யுங்கள்.
* பிரதோஷம் என்றால் என்ன? அத்தருணத்தில் இறைவனை வழிபட்டால் என்ன பலன் உண்டாகும்?
தோஷம் என்றால் குற்றம். ப்ர என்றால் பொறுத்துக்கொள்வது. இறைவன் நமது பாவத்தை எல்லாம் மன்னித்து அருள்தரும் காலமே பிரதோஷம். இந்த நேரத்தில் இறைவனை வழிபட்டால் மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும்.
No comments:
Post a Comment