Tuesday, 18 April 2017

அச்சுறுத்தும் பிளாஸ்டிக் முட்டைகள்

🎾🎾 *~thulir delight~*

🙋‍♂🙋🏻
1⃣7⃣🎋0⃣4⃣🎋1⃣7⃣
*அச்சுறுத்தும் பிளாஸ்டிக் முட்டைகள்!*

உலகம் முழுவதும் மக்களின் உணவுகளில் முக்கிய இடம் முட்டைக்கு உண்டு. காலை உணவு முதல் இரவு வரை அனைத்து உணவு வேளையிலும் முட்டை இடம் பெறுகிறது.
புரதச்சத்து அதிகம் நிறைந்துள்ள முட்டை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 2-ஆவது வெள்ளிக்கிழமை உலக முட்டை தினமாக அனுசரிக்கப்படுகிறது.
தற்போது நாட்டுக்கோழி முட்டைகளைக் காட்டிலும் பிராய்லர் முட்டைகள்தான் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. உற்பத்திக்கு ஏற்றாற்போல் முட்டையின் பயன்பாடும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
இப்படி மனிதர்களின் முக்கிய உணவாகக் கருதப்படும் முட்டை பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது என்ற அதிர்ச்சியான செய்தி அண்மையில் வெளியானது. கொல்கத்தாவில் ஒரு குடும்பத் தலைவி கடையில் வாங்கி வந்த முட்டையை சமைப்பதற்காக உடைத்தபோது, அது மாறுபட்ட விதமாக இருப்பதை உணர்ந்தார். முட்டையை உடைத்து அடுப்பில் உள்ள பாத்திரத்தில் ஊற்றியதும் அதில் இருந்து பிளாஸ்டிக் மணம் வீசியதாகக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் முட்டை வாங்கிய கடையை ஆய்வு செய்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், அங்கிருந்த முட்டைகளைக் கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.
மக்கள் பீதி: இதனையடுத்து சமூக வலைதளங்களில் பிளாஸ்டிக் முட்டை குறித்து பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு மக்களை அச்சத்துக்குள்ளாக்கி வருகிறது.பிளாஸ்டிக் முட்டைகளின் ஓடுகள் கடினமாகவும், மஞ்சள் கரு பிளாஸ்டிக் கூழ் போன்று இருப்பதாகவும் தகவல்கள் பகிரப்பட்டன. இந்நிலையில் தமிழகத்தில் காட்டுமன்னார்கோவிலில் பிளாஸ்டிக் முட்டை விற்பனை செய்யப்பட்டதாக வதந்தி பரவியது. அங்கு சென்ற உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் அந்தத் தகவலில் உண்மை இல்லை என்று கண்டறிந்தனர்.
இது தொடர்பாக "கன்ஸ்யூமர் அசோஸியேஷன்ஸ் ஆஃப் இந்தியா' அமைப்பைச் சேர்ந்த தகவல் தொடர்பு அலுவலர் எம்.சோமசுந்தரம் கூறியது: கடந்த 10 மாதங்களாகவே இதுபோன்ற வதந்திகள் பரவி வருகின்றன. எங்கள் அமைப்பின் சார்பில் மாதத்துக்கு ஒருமுறை தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்குச் சென்று முட்டைகளை வாங்கி ஆய்வுக்கு அனுப்பி வருகிறோம். இதுவரை எங்கும் பிளாஸ்டிக் முட்டைகள் கண்டறியப்படவில்லை என்றார்.
பதப்படுத்தப்பட்ட முட்டை: முட்டைகளை நீண்ட நாள்கள் பதப்படுத்துவதற்காக அதனை மெழுகு திரவத்தில் முக்கி இருக்கலாம். அதனால் முட்டை ஓட்டில் மெல்லிய பிளாஸ்டிக் படலம் போன்று காணப்படலாம். மேலும் முட்டைகள் பல்வேறு வெப்ப நிலைகளில் வைக்கப்படுவதால் அதன் மூலம் ஏதாவது மாற்றங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
3 கோடி முட்டைகள்: தமிழகத்தைப் பொருத்தவரை நாமக்கல் மாவட்டத்தில்தான் அதிக முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு சுமார் 3 கோடிக்கும் அதிகமாக முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளே, மாநிலத்தின் தேவைகளுக்குப் போதுமானதாக இருக்கிறது. எனவே, வேறு நாட்டில் இருந்தோ, மாநிலத்தில் இருந்தோ தமிழகத்துக்கு முட்டை இறக்குமதி செய்யப்படுவது இல்லை. இதனால் தமிழகத்துக்கு பிளாஸ்டிக் முட்டை வருவதற்கு வாய்ப்பில்லை என்று உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
புகார் இல்லை: இது தொடர்பாக 40 ஆண்டுகளாக மொத்த முட்டை விற்பனையில் ஈடுபட்டு வரும் எட்வர்ட் கூறுகையில், ஒரு நாளைக்கு 2 லட்சம் முட்டைகளை நாமக்கல்லில் இருந்து வாங்கி விற்பனை செய்து வருகிறேன். என்னிடம் முட்டைகளை வாங்கிச் செல்லும் சிறு வியாரிகள், உணவகங்கள், பொதுமக்கள் என யாரிடம் இருந்தும் பிளாஸ்டிக் முட்டை என்ற புகார் வரவில்லை. நான் பிளாஸ்டிக் முட்டையை இதுவரை பார்த்ததே இல்லை என்றார்.
சீனாவில் தொடங்கிய வதந்தி: சீனாவில் ஒரு பெரிய தொழிற்சாலையில் மைதா மற்றும் வேதிப்பொருள்களைக் கொண்டு பிளாஸ்டிக் முட்டைகள் தயாரிக்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான முட்டைகள் தயாரிக்கப்படுகின்றன. அதனை சாப்பிடுபவர்கள் உடல்நலக் குறைவு ஏற்பட்டு இறந்துவிடுவார்கள் என்று 10 ஆண்டுகளுக்கு முன்பே வதந்தி பரவியுள்ளது. அந்த வதந்தி ஹாங்காங், சிங்கப்பூர், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் வழியாக தற்போது இந்தியாவை வந்தடைந்துள்ளது. ஆனால் இதுவரை யாரும் அந்தத் தொழிற்சாலையையும் பார்த்ததில்லை; அங்கு உற்பத்தி செய்யும் முட்டையையும் பார்த்ததில்லை என்று ஐக்கிய நாடுகள் அமைப்பச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஒரு முட்டையை செயற்கையாகத் தயாரிக்க வேண்டுமானால் குறைந்தது ரூ.5 ஆயிரம் செலவாகும். ரூ.3-க்கு உற்பத்தியாளர்கள் விற்பனை செய்யும் ஒரு முட்டையை யாராவது ரூ.5 ஆயிரத்துக்கு உற்பத்தி செய்ய முன்வருவார்களா?
பிளாஸ்டிக் முட்டை என்பது வீண் வதந்தியே. எனவே, மக்கள் பீதியடைய வேண்டாம் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
கோழிப்பண்ணைகளில் அதிரடி ஆய்வு!
பிளாஸ்டிக் முட்டை வதந்தியை அடுத்து மாநிலம் முழுவதும் தமிழக உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக தமிழக உணவு பாதுகாப்புத் துறையின் கூடுதல் ஆணையர் வனஜா கூறியது:
பிளாஸ்டிக் முட்டை குறித்து மத்திய அரசிடம் இருந்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவல்களும் இதுவரை வரவில்லை. ஆனால், தமிழக அரசின் சார்பில் பிளாஸ்டிக் முட்டைகள் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து கோழிப் பண்ணைகளிலும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி, முட்டைகளின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சென்னை, மதுரை, பாளையங்கோட்டை, கோவை, சேலம், தஞ்சாவூர் ஆகிய 6 இடங்களில் உள்ள ஆய்வகங்களுக்கு முட்டைகள் அனுப்பப்பட்டுள்ளன. இதுவரை பிளாஸ்டிக் முட்டைகள் எங்கும் கண்டறியப்படவில்லை என்றார்.
https://thulirkalvi.blogspot.in/2017/04/plastic-egg.html?m=1

🍁🍁

No comments:

Post a Comment