*மலைக்கவைக்கும் மூளையின் செயல்பாடுகள்..!*
நான்கு கால்களை உடையதால் நமது மூளை அதை நாற்காலி என நமக்குப் பரிந்துரைத்தது. தக்காளி என்ற பெயர் காரணப்பெயரல்ல. ஆனால் அதையும் மூளைதான் பரிந்துரைத்தது. உலகில் உள்ள எல்லாப் பொருட்களுக்கும் இடுகுறிப்பெயரோ, காரணப்பெயரோ நமது இதன் மூலம்தான் பெயர் வைக்கப்படுகிறது. நமது சிந்தனை முழுவதும் இங்கிருந்துதான் தோன்றுகிறது. அப்படியென்றால் இதற்கு ‘மூளை’ என்ற பெயர் எப்படி வந்திருக்கும்? ஒருவரின் மூளைதான் இந்தப் பெயரை சிந்தித்திருக்கும். அப்படிப் பார்க்கும்போது தனக்குத்தானே பெயரிட்டுக்கொண்டது எனச் சொல்லலாம். ஆனால் இதைவிட ஆச்சர்யமான பல தன்மைகளைக் கொண்டுள்ளது என்கிறார் பொது நலமருத்துவர் தினகரன். மேலும் அவை என்னென்ன என்பது குறித்தும் விளக்குகிறார்...
*ஓய்வு இல்லாத போதும் உழைக்கும்*
சில மணி நேரங்கள் வேலை செய்தாலே நமது உடல் களைத்துவிடும். ஓய்வு தேவைப்படும்; தூங்கினால் நன்றாக இருக்கும் என நினைப்போம். ஆனால் நமது உடலின் மற்ற பகுதிகள் தூங்கினாலும் இது மட்டும் தூங்காது. அதிலும் நாம் தூங்கும்போது இருப்பதைவிட விழித்திருக்கும்போது இதன் செயல்பாடு அதிகமாக இருக்கும்.
*மறதி நல்லது!*
புதிய செய்திகளைச் சேமிக்க, பழைய செய்திகளை மூளை தானாகவே அழித்துக்கொள்ளும். இதற்காக நாம் அதிகம் நினைக்காத, நமக்கு மேற்கொண்டு தேவைப்படாத தகவல்களை தேர்ந்தெடுக்கும். பள்ளியில் கற்பிக்கப்பட்ட கணித சூத்திரங்களைப் பெரும்பாலும் மறந்திருப்பீர்கள். ஆனால் கணக்கு டீச்சரை மறந்திருக்கமாட்டீர்கள். அது இதனால்தான்.
*வலிக்கவே வலிக்காது*
இதற்கு வலி என்ற உணர்வு கிடையாது. உடலின் பிற பகுதிகளில் வலி ஏற்பட்டால் எப்படி செயலாற்ற வேண்டும் என்பதுதான் மூளைக்குத் தெரியும். இதைச் சுற்றியுள்ள ரத்தக்குழாய்கள், நரம்புகள், திசுக்களில் ஏற்படும் வலி இதில் ஏற்படும் வலி அல்ல.
*ஆற்றலை அதிகம் பயன்படுத்தும்*
உடல் எடையில் இதன் அளவு 2 சதவிகிதம்தான். ஆனால் நாம் சேமித்து வைத்திருக்கும் ஆற்றலில் 20 சதவிகிதத்தை இதுதான் பயன்படுத்தும். உடல் பாகங்களில் மிக அதிக ஆற்றலைப் பயன்படுத்துவது இதுதான். இதன் செல்கள் சிறப்பாகச் செயல்பட மூளை மிகவும் முக்கியமாகும். அதேபோல் இதன் எடையில் சராசரியாக 75 சதவிகிதம் தண்ணீர்தான் உள்ளது.
*விளக்கு எரியச் செய்யும்*
நாம் விழித்திருக்கும்போது இதில் உற்பத்தியாகும் மின்சாரத்தைக் கொண்டு குறைந்த வாட் விளக்கு (Light) எரிய வைக்க முடியும்.
*பயிற்சி தேவை*
நமது உடல் உறுப்புகளை வலுவாக்க பயிற்சிகள் செய்வதுபோல் இதை வலுவாக்கவும் பயிற்சிகள் செய்வது அவசியமாகும். இதற்காக மெனக்கெட்டு எதுவும் செய்ய வேண்டியதில்லை. அன்றாட வாழ்வில் நாம் செய்யக்கூடிய பிடித்த பாட்டுக்கு நடனமாடுதல், நன்றாக உறங்குதல், சரிவிகித உணவு உண்ணுதல், புதிய இடங்களுக்குச் செல்லுதல், பிடித்த விளையாட்டுகளை விளையாடுதல் ஆகியவை மூளைக்கான பயிற்சிகளாகும். இது மூளையைப் புத்துணர்வாக்கும்.
*வியர்த்தால் சுருங்கும்*
90 நிமிடங்களுக்கு உடல் வியர்த்தால் மூளை தற்காலிகமாகச் சுருங்கிவிடும். காய்ச்சல் வந்தால் நமது உடல் அதிகமாக வியர்க்கும். அப்போது இது தற்காலிகமாக சுருங்குவதால்தான் தலைவலி ஏற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு வயது கூடும்போது, எவ்வளவு சுருங்குமோ அதற்கு ஒப்பானது.
*ஒரு லட்சம் வேதிமாற்றங்கள்*
ஒரு நொடியில் இதில் நடக்கும் வேதிமாற்றங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்குமேல். அதேபோல் எல்லா மூளை செல்களும் ஒரே மாதிரியானவை அல்ல. பத்தாயிரம் வகையான நியூரான்கள் இதில் உள்ளன.
*ஐம்பதாயிரம் எண்ணங்கள்*
ஒரு நாளைக்கு நமது மூளையில் தோன்றும் எண்ணங்களின் எண்ணிக்கை 50,000. ஆனால் இவற்றில் 70 சதவிகிதம் எதிர்மறையான சிந்தனைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment