Wednesday, 17 August 2016

உணவுகள் உடலுக்கு மட்டுமல்ல சிந்தனைக்கும் அவசியம்’

உணவுகள் உடலுக்கு மட்டுமல்ல சிந்தனைக்கும் அவசியம்'

நான் உயர்தரம் படித்துவிட்டு இருக்கிறேன். எனக்கு சரியாக தீர்மானம் எடுக்கவும் அவதானம் செலுத்தவும் முடியாதிருக்கிறது. சரியான அளவு உணவு உட்கொள்ளாமை இதற்கு காரணமாக இருக்கலாம் என எனது நண்பர் சொல்கிறார். இதில் உண்மை இருக்கிறதா? ஆனால் நான் எனது ஒவ்வொரு உணவு வேலைகளிலும் கவனயீனமாகவே இருக்கிறேன். தயவுசெய்து பதில் தாருங்கள்.

– பெயர் குறிப்பிட விரும்பாத வாசர் –

தீர்மானம் நிறைவேற்றுவதில் பல்வேறு விதமான விடயங்கள் தாக்கங்கள் செலுத்துகின்றன. அவற்றுள் இறந்த கால அனுபவங்கள், தனியால் வேறுபாடுகள், ஒவ்வொருவருக்கும் உரித்தான சிந்தனைகள், வயது, சமூக பொருளாதார நிலைமை, தீர்மானம் நிறைவேற்றுவதற்கான முயற்சி, உடல் ஆரோக்கியம் அல்லது போசணை போன்ற முக்கிய விடயங்கள் உள்ளடங்குகின்றன.
இதில் நாம் உட்கொள்ளும் உணவு அல்லது போசணை, தீர்மானம் நிறைவேற்றுவதில் ஏனைய விடயங்களைப்போன்று தாக்கம் செலுத்தத்தான் செய்கின்றது. எமது உடல் ஆரோக்கியமாக தொழிட்படுவதற்கு போசணைமிக்க ஆகாரங்கள் அவசியம் என்பதை நாம் எவரும் மறுக்க மாட்டோம். காலை ஆகாரம், மதிய போசணம், இராப்போசணம் ஆகிய மிக முக்கிய உணவு வேலைகளில் நாம் எமது உடல் நிலைக்கும் நேரத்திக்கும் தக்கவாறான போசணையான ஆகாரங்களை உடலுக்கு வழங்கும் போது உடல் சுறுசுறுப்பாகவும் நோய்களை எதிர்த்துப் போரடக்கூடிய சக்தியையும் பெற்றுக்கொள்கிறது.

போசணையுள்ள ஆகாரங்களை உண்ணுவதன் மூலம் உடல் ஆரோக்கியம் அடைவது போன்று மனநலத்திலும் சிந்தனையிலும் தாக்கம் புரிவது பற்றி நம்மில் அநேகர் அவதானம் செலுத்துவதில்லை. எமது மூளையின் அன்றாட செயற்பாடுகளுக்கு நாம் உண்ணும் உணவு மிகமுக்கிய தாக்கம் புரிகிறது என மௌன்ட செனாய் மருத்துவக்கல்லூரியின் சின்டியா கிரீன் எனும் மருத்துவர் குறிப்பிடுகிறார்.

எமது உடல் திசுக்கள், இரத்தம், என்புகள் மற்றும் உடலிலுள்ள கலங்கள் அனைத்தும் நாம் அன்றாடம் உட்செலுத்தும் போசணைகளின் மூலமும் மீள் எழுச்சி அடைகின்றன. இதில் மூளையில் உள்ள கலங்கள் மிகவும் முக்கியமானவை. நாம் உட்கொள்ளும் போசணை குறைவான ஆகாரங்கள் எமது உடலை ஆரோக்கியமற்ற நிலைக்கு உள்ளாக்குவது போன்று எமது மனநிலையையும் அப்படியே ஆக்கிவிடுகிறது.

சில வகையான மனநிலையோடு தொடர்பான நோய்களின் தீவிரத்தன்மைக்கு விட்டமின்கள் மற்றும் கனிப்பொருட்களின் குறைபாடு முக்கிய காரணமாக இருப்பதாகவும் போசணை குறைவான ஆகாரங்கள் சிந்தனையையும் அவதானத்தையும் முறையாகப் பேண முடியாமல் செய்வதற்கும் காரணமாக அமைகிறது எனவும் ஆய்வுகள் கூறுகின்றன. நாம் பசித்திருக்கும் நேரங்களில் வேறு விடயங்கள் மீது அவதானம் செலுத்த முடியாமல் போதில் இருந்து இதன் உண்மையைப் புரியலாம். எமது உடலையும் சிந்தனையையும் ஒரு நிறுவனமாக ஒன்று சேர்த்துச் செயற்பட இந்த போசணை உள்ள ஆகாரஙகள் தேவைப்படுகின்றன.

அளவான, சமபோசணையுள்ள உணவு எமது மூளையின் செயற்பாடுகளுக்கும் உடலின் முறையான இயக்கத்திற்கும் தேவைப்படுகின்றது. அளவுக்கு அதிகமாக உண்ணுகிறவர்களைக் காணும் போது "என்ன திண்டு திண்டு மாடாகப் பார்க்கிறாயா?" என்று சொல்வதையும், மிகக்குறைவாக உண்ணுகிறவர்களைக் காணும் பொழுது "காகம் கொத்துவது போல சப்பிட்டால் படிப்பும் வராது ஒன்றும் ஏறாது!" என்று சொல்வதையும் அடிக்கடி காண்கிறோம். எமது சிந்தனையில் உணவு ஏதோ ஒரு வகையில் செல்வாக்குச் செலுத்துவதை தெரிந்தோ தெரியாமலோ விளங்கியிருப்பதால் தான் நாம் இவ்வாறு சொல்லக் காரணமாக இருக்கலாம்.

நாம் அன்றாடம் உட்கொள்ளும் போசணையில் சுமார் 30 வீதம் மூளையின் தொழிற்பாட்டுக்குச் செல்கிறது. அதனால் ஒன்றிணைந்த உடல் தொழிற்பாட்டுக்கும் மூளையின் செயற்பாட்டிற்கும் துணைபுரியக்கூடிய உணவுகளை அன்றாடம் உட்கொள்ள வேண்டும். முழுத்தானியங்கள், அவரை இணங்கள், மரக்கறிகள், பழங்கள், கீரைவகைள், விலங்குணவுகள் என்பவற்றிலிருந்து எல்லாவிதமான போசணை உணவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும். சால்மான், தூனா, மெகரல், சார்டின் போன்ற கடல் உணவுகளில் ஒமேகா 3 அடங்கி இருப்பதால் அது சிந்தனையை ஆரோக்கியமாக வைக்கத் துணைபுரிகின்றன.

அதே நேரம் நன்கு தீட்டப்பட்ட அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகளான தீட்டப்பட்ட கோதுமை, சீனி, பதமாக்கிய கொழுப்புகள் என்பவற்றில் விட்டமின்களும் கனிப்பொருற்களும் மிகக்குறைவாகக் காணப்படுவதால் உடலுக்குத் தேவையான போசணைகள் கிடைக்காமல் போவதோடு சில உடல் திசுக்களிலும் என்புகளிலும் தேங்கியுள்ள விட்டமின்களையும் கனிப்பொருள்களையும் அழித்துவிடவும் செய்யலாம்.

பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பெரும்பாலும் செயற்கையான நிறமூட்டிகள், உணவுகளை பாதுகாக்கும் பதப்பொருட்கள், வாசனைகள் என்பன சேர்க்கப்பட்டிருக்கும். இந்தச் சேர்மானங்கள் போசணைப் பயன் அற்றதாக இருப்பதோடு மூளையின் சாதாரண தொழில்பாட்டிற்கு இடையூறுகளை ஏற்படுத்தவும் செய்யலாம். முழு நிறைவுடைய இயற்கை உணவுகள் எல்லாவிதமான போசணைகளையும் கொண்டிருக்கின்றன. ஆனால் பதப்படுத்தி பாதுகாக்கப்பட்ட உணவுகளில் அப்படி இருக்க வாய்ப்பில்லை. பசிக்குச் சாப்பிடுகிறவர்களாக நாம் இருக்காமல் உள உடல் ஆரோக்கியத்தின் சமநிலையை பேணிக்காக்க சாப்பிடக்கூடியவர்களாக இருக்க வேண்டும். 'நீங்கள் சாப்பிடுவதே நீங்கள் ஆவீர்' எனும் விஞ்ஞானக்கூற்றை நாம் செவிமடுத்திருப்போம்.

இயற்கையின் அற்புதமான உணவுகளின் மூலம் கிடைக்கும் விட்டமின்களையும் கனிப்பொருட்களையும் உண்ணாமல் செயற்கையானதும் துரித உணவுகளையும் தொடர்ந்த உண்பதும் உணவில் கவனயீனமாகவும் ஒழுங்கு பேணாமல் நேரம் தவறி உண்பதும் உடலிலும் சிந்தனையிலும் சமநிலையற்ற தன்மையை உருவாக்கிவிடும். இறுதியில் நாம் நோயாளிகளாக ஆகிவிடுவோம். நோயுற்றால் உடல் பலவீனம் ஆவதுடன் உள்ளமும் பலவீனத்தை நோக்கி மெல்ல நகர்ந்துவிடும். அப்போது எம்மால் செய்ய முடியுமான பல விடயங்களை செய்ய முடியாத நிலைக்கு நாமே எங்களை உட்படுத்திக் கொண்டவர்களாக ஆகிவிடுவோம்.

'எனக்கு இதைச்சாப்பிட ஏலுமா?' 'நான் ஏன் அதைச் உண்ண வேண்டும்'. 'ஏன் இவ்வளவெல்லாம் சாப்பிட வேண்டும்' என்று எமக்கு பல நல்ல உணவுகள் கிடைக்கும் போது அவற்றை உண்ணாது கேள்விக்கு மேல் கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்காமல் 'உணவுகள் நாவுக்கு மட்டுமல்ல அவை உடலுக்கும், சிந்தனைக்கும், எமது ஒட்டுமொத்தமான செயற்பாடுகளுக்கும் துணைபுரியவே பல வகைகளில், வர்ணங்களில் இயற்கை எமக்குத் தந்திருக்கிறது.' என்ற உண்மையை மனதில் விதைத்துக்கொண்டால் அவற்றை உண்ண எமது உள்ளத்தையும் உடலையும் பழக்கிக்கொள்ளலாம். அப்போது உடல் ஆரோக்கியமடைவதுடன் சரியாக தீர்மானம் எடுக்கவும் அவதானம் செலுத்தவும் முடியுமான ஆற்றலையும் பெற்றுத்தரும்.

No comments:

Post a Comment